செல்வம் சேர்ப்போர் ஆன்ம அழிவையும் சேர்ப்பர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

21 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 11ஆம் வாரம் -வெள்ளி
2 அரசர்  11: 1-4, 9-18, 20
மத்தேயு  6: 19-23
 

செல்வம் சேர்ப்போர் ஆன்ம அழிவையும் சேர்ப்பர்! 

  
முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசகமானது, தெற்கு நாடான யூதேயாவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை  விவரிக்கிறது.  யூதாவின் வழிமரபில்  அகசியா யூதேயாவின் அரசரானான், அப்போது அவனுக்கு வயது 22.  அவன் எருசலேமில் ஒரு வருடம் அரசாண்டான். அவருடைய தாயார் பெயர் அத்தாலியா

அகசியா இறந்தது அவனது தாய் அத்தாலியா, அரச  அதிகாரத்தைக் கைப்பற்றினாள்.  தனது ஆட்சியைப் பாதுகாக்க, அரச குடும்பத்தைச் சேர்நெதோரை  அவள் கொன்றுவிட துணிந்தாள். அப்போது, இறந்த அரசன் அகசியாவின் சகோதரியான யோசேபா, அகாசியாவின் இளைய மகனான   யோவாசைத் தூக்கிக் கொண்டு போய் மறைத்து வைத்தது, அவனைக் காப்பாறினாள்.   

இவ்வாறு,  அத்தாலியா யூதேயாவை ஆட்சி செய்யும் போது அவன் ஆறு வருடங்கள் மறைந்திருந்தான்.  ஏழாவது ஆண்டில், குரு யோயாதா யூதேயாவில்  அத்தாலியாவுக்கு எதிராக எழுந்து,  நூற்றுவர் தலைவர்கள் துணையோடு ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்தார்.    

சரியான நேரத்தில், குரு யோயாதா, யோவாசை வெளியே அழைத்து வந்து, அரச காவலர் முன் நிறுத்தி, அரசராக முடிசூட்டி   உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி “அரசர் நீடூழி வாழ்க!” என்று முழங்கினர். 

இறுதியில் அத்தாலியாவும் கொல்லப்பட்டு,  குரு யோயாதாவின் வழிகாட்டுதலின் கீழ் அரசன் யோவாசு கடவுளுடனான புதுப்பிக்கப்பட்ட உறவின் ஒரு பகுதியாக அனைத்து  சிலைகளையும் கோயில்களையும் அகற்றினார்.  சிலைவழிபாடு அழிக்கப்பட்டு இறையாட்சி துளிர்விட்டது.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில் நமது வாழ்வு மற்றும் நமது உள்ளம் இவற்றுக்கிடையிலான உறவைப் பற்றி ஆண்டவர் தம் சீடர்களுக்கு விவரிக்கிறார்.
 
"பூமியில் செல்வங்களை  சேமித்து வைக்காதீர்கள், ஏனெனில், அவை நமக்கு நிரந்தரமான செல்வங்கள் ஆகாது என்கிறார். அவை அழிவுக்கு உட்பட்டவை என்றும், பிறரால் திருடப்பட முடியும் என்கிறார்.  மாறாக, விண்ணக வாழ்வுக்கான செல்வங்களை  சேகரிப்பதில் கருத்தூண்றி இருக்க வேண்டும் என்றும் அவை மட்டுமே நிலயானது என்றும் அறிவுறுத்துகிறார்.  

நிறைவாக, ‘ உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் என்றும் கண் என்பது உடலுக்கு விளக்கு போன்றது, உங்கள் கண் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் உடல் முழுவதும் ஒளியுடன் இருக்கும் என்றம் வலியுறுத்துகிறார். நிறைவாக, உங்கள் கண் ஆரோக்கியமற்றதாக இருந்தால், உங்கள் உடல் முழுவதும் இருளில் இருக்கும் என்றும் போதிக்கிறார். 


சிந்தனைக்கு.


‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே.. என்ன சொன்னாலும் கண் தேடுதே’ என்றொரு திரைப்பட பாடல் நமக்கு நினைவிருக்கும். உள்ளம் எதை வேண்டாம் என்று விலகிப் போகிறதோ அதை கண்கள் விட்டு வைப்பதில்லை. இந்த உள்ளத்திற்கும் கண்களுக்கும் இடையிலான இந்த போராட்டம் ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. எனவேதான் ஆண்டவர், இன்று உங்கள் கண் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் உடல் முழுவதும் ஒளியுடன் இருக்கும் என்று போதிக்கின்றார். 

கடவுளுடனான உறவில் நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அடிப்படையான படிப்பினையை ஆண்டவர் பகிர்க்கிறார்.  இந்தப் பகிர்வில்  "கண்" என்பது நமது நோக்கத்தையும், "உங்கள் முழு உடலும்" என்பது நமது  எண்ணத்திலிருந்து பிறக்கும் நமது  செயல்கள் அனைத்தையும் குறிப்பதாக நாம் பொருள் கொள்ளலாம்

எனவே, ஒரு பொருளை நாம் பார்க்கும் போது, அதைக்கொண்டு கடவுளின் விருப்பத்திற்கு  ஏற்ப வாழ்வதா அல்லது பிறரைக் கெடுத்து தீய வழியில்  இன்புற்று வாழ்வதா என்பதை நமது நோக்கம்தான் வெளிப்படுத்தும். நமது  நோக்கம் கடவுளின் விருப்பத்திற்கு இணங்கும்போது, மண்ணக வாழ்வும் மகிழ்ச்சியும் ஒரு பொருட்டாகத் தெரியாது. 

முதல் வாசகத்தில் அத்தாலியா, தன் மகனின் மரணத்திற்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றி, மண்ணகத்தில் தனது ஆட்சியை அமைக்க  அரச குடும்பத்தைச் சேர்ந்த  அனைவரையும் அவள் கொன்று அரசியானாள். ஆனால், அவளது மகிழ்ச்சியும்  அரச வாழ்வும் இந்த மண்ணிலேயே முடிவுற்றது. அவளது பாதகச் செயலால் மண்ணை ஆண்டாள், ஆனால் விண்ணை இழந்தாள்  

மேலும், இயேசு மண்ணுலகில் செல்வம் நேமித்து வைக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறார். செல்வம் அறவே கூடாது என்று கூறவில்லை. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய செல்வம், பணம் இன்றியமையாதவை. ஆனால் பேராசையின் நிமித்தம் இரவுப் பகலாக உழைத்து அல்லது தீய வழிகளில் சம்பாதித்து ஒன்றன் பின் ஒன்றாக சொத்துக்களை வாங்கி மகிழ்ந்திருக்க நினைப்பதும் நினைத்துச் செயல்படுவதும் கூடாது என்கிறார். செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் என்பதால்,  நமது எண்ணம் பிறர் அன்புப் பணியிலும் கடவுளின் திருப்பணியிலும் நாட்டம் கொள்ளாது. 

“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 6:24) என்ற ஆண்டவரின் நினைவுறுத்தலை  நினைவில் கொள்வோம். 
 

இறைவேண்டல்.


 “நீ நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றால், உம் உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது நீர் விண்ணுலகில் செல்வராய் இருப்பீர்’ என்று அறிவுறுத்திய  ஆண்டவரே, உம்மோடான புனித வாழ்வே எனக்கு மிகுந்த செல்வம் என்ற மனநிலையில் எனது சொல்லும் செயலும் அமைந்திட அருள்புரிவீராக. ஆமென். 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452