அமைதியைப் போற்றுவோம்-திருத்தந்தை பதினான்காம் லியோ | Veritas Tamil
அன்றாட வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் அமைதியைப் பாதுகாத்து வளர்ப்பதற்குத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் உறுதியான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
அக்டோபர் 13ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், திருப்பீடச் செயலரும், வத்திக்கான் முதலாம் ஜான் பால் அறக்கட்டளையின் தலைவருமான கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை, உரோம் நகரின் திருத்தந்தை கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற “முதலாம் ஜான் பால்: நீதியும் அமைதியும் குழப்பங்கள் நிறைந்த இவ்வுலகில் அமைதியைப் பாதுகாத்து வளர்த்தல்” என்ற அனைத்துலக மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
ஒவ்வொருவரும் அமைதியை வளர்ப்பதில் கொண்டுள்ள பொறுப்பை வலியுறுத்தும் இம்மாநாட்டின் கருப்பொருள், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். போர் இல்லாத நிலை மட்டுமே அமைதி அல்ல என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றை நினைவுகூர்ந்த அவர், புனித அகுஸ்தினார் அமைதியை ஒழுங்கின் அமைதிநிலை (Tranquillitas ordinis) என்று விளக்கியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு மனிதரின் மாண்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோடு, மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதும் அமைதிக்கு அவசியம் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். இதற்கு நீதியே இன்றியமையாத நிபந்தனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் போதனைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மனித உறவுகளில் தனிப்பட்ட ஈடுபாடு, சகோதரத்துவம், அன்புச் செயல்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். குடும்பம், பள்ளி மற்றும் உள்ளூர் சமூகங்களில் தொடங்கும் அமைதி, பின்னர் நிறுவனங்களிலும் நிலைபெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிளவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், அமைதியைப் பாதுகாத்து வளர்ப்பது என்பது நலிவுற்றோரைப் பாதுகாத்தல், மன்னித்தல், பிறரைப் புரிந்துகொண்டு செவிமடுத்தல், உண்மையான உரையாடலை வளர்த்தல் மற்றும் சகோதரத்துவத்தைத் திருச்சபை, சமூகம், அரசியல் ஆகிய தளங்களில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
