இயேசுவை மென்மையாக அறிவியுங்கள் - பேராயர் கார்செரா | Veritas Tamil

இயேசுவை மென்மையாக அறிவியுங்கள் – மணிலா கூட்டத்தில் ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர்களிடம் பேராயர் கார்செரா அழைப்பு

RVA செய்தி | செப்டம்பர் 11, 2026

ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், மக்களிடம் செவிமடுத்து, அவர்களின் பண்பாடுகளுக்கு மதிப்பளித்து, டிஜிட்டல் உலகில் உண்மையையும் நம்பிக்கையையும் கொண்டு செல்லும் வகையில், தங்கள் தகவல் தொடர்பின் மூலம் “இயேசுவை மென்மையாக அறிவிக்க” வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCP) தலைவர் பேராயர் கில்பர்ட் கார்செரா அழைப்பு விடுத்துள்ளார்.

செப்டம்பர் 11ஆம் தேதி, கியூசான் நகரில் உள்ள ரேடியோ வெரித்தாஸ் ஆசியா (RVA) வளாகத்தின் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அரங்கில் நடைபெற்ற முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையின் தொடக்கத் திருப்பலியின்போது பேராயர் கார்செரா இந்த அழைப்பை விடுத்தார்.

செப்டம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இப்பேரவையில், ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் மற்றும் சமூக ஊடகத் தாக்கம் செலுத்துபவர்கள் பங்கேற்கின்றனர். “தாக்கம் செலுத்துபவர்களிலிருந்து சாட்சிகளாக: ஆசியாவில் டிஜிட்டல் மறைப்பணிக்கான இணைநடைக் பயணம்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்பேரவை, ரேடியோ வெரித்தாஸ் ஆசியா மற்றும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் சமூகத் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.

பேராயர் கார்செரா இத்திருப்பலிக்குத் தலைமை தாங்கினார். FABC சமூகத் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் ஆயர் மார்செலினோ அன்டோனியோ “ஜூனி” மராலிட் ஜூனியர், அதன் நிர்வாகச் செயலர் அருள்தந்தை ஜான் மி ஷென் உள்ளிட்ட பல அருள்பணியாளர்கள் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

RVA உடனான தனது தொடர்பை நினைவுகூர்ந்த பேராயர்

RVA உடனான தனது தனிப்பட்ட தொடர்பை நினைவுகூர்ந்த பேராயர் கார்செரா, இந்தத் திருப்பலிக்குத் தலைமை தாங்குவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், இந்த இடம் தனது வாழ்க்கையில் சிறப்பான நினைவுகளைத் தாங்கி நிற்பதாகக் கூறினார்.

1986ஆம் ஆண்டு பீப்பிள் பவர் புரட்சிக்குப் பின்னர், மறைந்த ஜெய்மி கர்தினால் சின் அவர்கள் தன்னை RVA-வின் நிர்வாக இயக்குநராக நியமித்ததாகவும், அந்தப் பொறுப்பில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

RVA-வின் பல்வேறு மொழிச் சேவைகள் மற்றும் சிற்றலை வானொலி ஒலிபரப்புகள் மூலம் ஆசியா முழுவதும் கத்தோலிக்க நம்பிக்கை சென்றடைந்ததையும், எளிதில் மறைப்பணியாளர்கள் சென்றடைய முடியாத சமூகங்களையும் அது சென்றடைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிற்றலை வானொலியிலிருந்து சமூக ஊடகங்கள், பாட்காஸ்ட்கள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், RVA-வின் அடிப்படைப் பணி மாறவில்லை என்றும், ஆசிய மக்களிடம் உண்மை, நம்பிக்கை மற்றும் நற்செய்தியைக் கொண்டு செல்வதே அதன் பணியாகத் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

“ஆசியாவில் இயேசுவை மென்மையாக அறிவியுங்கள்”

“ஆசியாவில் இயேசுவை மென்மையாக அறிவிப்பது” என்ற உருவகத்தைப் பயன்படுத்திய பேராயர் கார்செரா, மக்களின் மீது தங்கள் கருத்துகளைத் திணிப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் நெருக்கமாகப் பயணிக்கும் அணுகுமுறையை டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

“ஆசியாவுக்கு மேலாகக் குரலை உயர்த்துவதன் மூலம் அல்ல; ஆசியாவுக்கு அருகில் சென்று, அதன் மக்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடன் பயணித்து, அவர்களுக்குச் சேவை செய்து, இயேசுவின் அன்பை மென்மையாகக் கேட்கவும் அனுபவிக்கவும் செய்வதன் மூலமே நாம் இயேசுவைக் கொண்டு செல்கிறோம்.”

டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் வெறுமனே உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் அல்ல; அவர்கள் தார்மீகப் பொறுப்பைக் கொண்ட சாட்சிகள் என்று அவர் நினைவூட்டினார்.

“ஒவ்வொரு தலைப்பும், புகைப்படமும், காணொளியும், பதிவும், கதையும் ஒரு தேர்வைச் செய்கிறது” என்று கூறிய அவர், எந்தக் குரல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, யாருடைய குரல்கள் கேட்கப்படாமல் இருக்கின்றன என்பதைத் தகவல் தொடர்பாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக தவறான தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் பொய்யான தகவல்கள் அதிகரித்து வரும் நிலையில், கிளிக்குகள், விருப்பக் குறியீடுகள் மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆகியவை உண்மைக்கு மாற்றாக மாறிவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

“வெளியிடுவதற்கு முன் சரிபாருங்கள்; தீர்ப்பளிப்பதற்கு முன் செவிமடுங்கள்; விளக்குவதற்கு முன் புரிந்துகொள்ளுங்கள்; கண்டனம் செய்வதற்கு முன் சூழலை விளக்குங்கள்.”

விளிம்புநிலை மக்களுக்குச் செவிமடுக்க வேண்டும்

ஏழைகள், புலம்பெயர்ந்தோர், பழங்குடியினர், இளைஞர்கள் மற்றும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிற மக்களின் குரல்களுக்கு டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் குறிப்பாகச் செவிமடுக்க வேண்டும் என்று பேராயர் கார்செரா வலியுறுத்தினார்.

“மக்களைப் பற்றி பேசுவதற்கு முன், மக்களுக்குச் செவிமடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.”

பல்வேறு பண்பாடுகள் மற்றும் மொழிகளைக் கொண்ட ஆசியாவில், டிஜிட்டல் தகவல் தொடர்பாளர்கள் பாலம் அமைப்பவர்களாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

வெறுப்பின்றி உண்மையைப் பேச வேண்டும்; மற்றவர்களின் மனித மாண்பைக் குறைக்காமல் அநீதியைக் கண்டிக்க வேண்டும்; மனித கண்ணியத்தை அழிக்காமல் விமர்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு டிஜிட்டல் தளமும் நற்செய்தியின் நவீன ஒலிபரப்புக் கருவியாக மாற முடியும் என்று அவர் கூறினார்.

“உங்களில் ஒவ்வொருவரும் ஆசியாவிடம் பேசும் குரலாகவும், ஆசியாவுக்குச் செவிமடுக்கும் குரலாகவும், ஆசியாவுக்கு நம்பிக்கையை வழங்கும் குரலாகவும் தொடர்ந்து விளங்க வேண்டும்.”

பல்வேறு ஆசிய மொழிகளில் காணிக்கைகள் மற்றும் இறைவேண்டுதல்கள் இடம்பெற்றன. இது பேரவையில் பங்கேற்றவர்களின் பண்பாட்டு மற்றும் மொழி வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

“இறுதியாக, தகவல்களை வெறுமனே தொடர்புகொள்பவர்களாக இருப்பதற்கு நாம் அழைக்கப்படவில்லை. உண்மையின் சாட்சிகளாக இருப்பதற்கே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அந்த உண்மை வேறு யாருமல்ல, இயேசு கிறிஸ்துவே” என்று பேராயர் கார்செரா கூறினார்.

Tamil Survey Popup Image