உலக அமைதிக்கு மத நல்லிணக்கமும் உரையாடலும் அவசியம்: கர்தினால் கூவகாட் | Veritas Tamil
மதங்களுக்கிடையேயான உரையாடல், ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதை மற்றும் அமைதியான கூட்டுறவு ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்று கர்தினால் George Jacob Koovakad அவர்கள் கூறினார்.
அக்டோபர் 18, ஞாயிறன்று, இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டத் தலைமைக் கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் Koovakad அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
பாரசீக மன்னரான சைரஸ் என்ற விவிலிய ஆளுமை குறித்து தனது மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் அவர்கள், "வேறு நாட்டைச் சேர்ந்தவராகவும் வேறு மதத்தைப் பின்பற்றுபவராகவும் இருந்தபோதிலும், கடவுளின் மக்களை விடுவிக்க அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்" என்றும் "கடவுளின் செயல் புவியியல், கலாச்சாரம், இனம் மற்றும் மத எல்லைகளைக் கடந்து செயலாற்றுகிறது என்பதை இது நிரூபிக்கிறது" என்றும் விளக்கமளித்தார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ‘Nostra aetate’ என்னும் ஏட்டினைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Koovakad அவர்கள், பிற மதங்களில் காணப்படும் உண்மை மற்றும் புனிதத்தை ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டுக்கொடுப்பதற்குச் சமமல்ல என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், பிற மதத்தினருடன் அச்சமின்றியும் எவ்விதப் பாகுபாடுமின்றியும் கிறிஸ்தவர்கள் உரையாடி உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதேவேளையில் தங்களது கிறிஸ்தவ அடையாளத்திலும் நம்பிக்கையிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உண்மையான மதங்களுக்கிடையேயான உறவுகளுக்கு நம்பிக்கை, அன்பு மற்றும் எதிர்நோக்கு ஆகியவை இன்றியமையாத நற்குணங்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், " இவை மக்கள் முன்முடிவுகளைக் கடந்து வரவும், நட்பை வளர்த்துக்கொள்ளவும், கடவுளால் இதயங்களை மாற்ற முடியும் என்று நம்பவும் உதவுகின்றன" என்று எடுத்துரைத்தார்.
