ஆசியத் திருஅவை முதலில் கேட்கும் திருஅவையாக மாற வேண்டும்-இந்தோனேசிய ஆயர் பேரவை தலைவர் அழைப்பு | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது பேரவை தொடக்க நிகழ்வில், இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் அந்தோனியுஸ் சுபியாந்தோ புஞ்ஜமின், OSC, ஆசியத் திருஅவை முதலில் கேட்கும் திருஅவையாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். உண்மையான ஒன்றிணைந்த பயணம் இறைவனின் குரலையும், ஒருவரின் குரலை மற்றொருவர் கேட்பதையும், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்களின் குரலையும் செவிமடுக்குவதிலிருந்தே தொடங்குகிறது என்று கூறினார்.

"இந்தப் பேரவை ஆயர்களின் ஒரு சாதாரண கூட்டம் மட்டுமல்ல. இது தூய ஆவியானவரின் குரலைக் கேட்பதற்கும், ஒருவரை ஒருவர் கேட்பதற்கும், ஆசிய மக்களின் குரலைச் செவிமடுக்குவதற்குமான ஒரு புனிதமான தருணமாகும்," என்று ஜூலை 21 அன்று ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் முலியாவில் கூடியிருந்த பிரதிநிதிகளிடம் அவர் உரையாற்றினார்.

பேரவையின் தொடக்க விழாவில் ஆசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து திருஅவைத் தலைவர்கள், அரசுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேடையில் இந்தியாவின் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெராவ் (FABC தலைவர்), பிலிப்பைன்ஸின் கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் (துணைத் தலைவர்), ஜப்பானின் கர்தினால் டார்சிசியோ இசாவோ கிகுச்சி (பொதுச் செயலாளர்) ஆகியோருடன், இந்தோனேசியாவின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் நசாருத்தீன் உமர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

பங்கேற்பாளர்களை இந்தோனேசியாவுக்கு வரவேற்ற ஆயர் அந்தோனியுஸ், தங்கள் நாட்டின் விருந்தோம்பலை அனைவரும் அனுபவிப்பதோடு, ஆசியத் திருஅவைகளுக்கிடையேயான ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஆசியத் திருஅவையின் அடையாளமாக உரையாடல் எப்போதும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளதாக அவர் நினைவூட்டினார். 1990ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பண்டூங் நகரில் நடைபெற்ற FABC பேரவையில், ஆயர்கள் "மூவகை உரையாடல்" (Triple Dialogue) என்ற ஆன்மீகக் கண்ணோட்டத்தை முன்வைத்தனர். அதாவது, ஏழைகளுடனான உரையாடல், பல்வேறு பண்பாடுகளுடனான உரையாடல் மற்றும் பிற சமயங்களுடனான உரையாடல் ஆகியவை ஆசியத் திருஅவையின் பணியின் மையமாகக் கருதப்பட்டன. இன்றைய சூழலில், படைப்பைப் பாதுகாப்பதும் திருஅவையின் பணியில் இன்றியமையாத பரிமாணமாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,  ஒன்றிணைந்த பயணத்தை ஆழப்படுத்துவதற்காக கேட்பது, இணைந்து செயல்படுவது மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான பார்வையை உருவாக்குவது அவசியம் என்று ஆயர் அந்தோனியுஸ் வலியுறுத்தினார்.சமீபத்திய திருத்தந்தையரின் போதனைகளையும் அவர் நினைவுகூர்ந்தார். திருத்தந்தை பிரான்சிஸ், பேசுவதற்கு முன் கேட்கும், தீர்ப்பளிப்பதற்கு முன் துணையாக நடக்கும் திருஅவையை உருவாக்க அழைப்பு விடுத்தார் என்றார். 

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, நுசந்தாரா நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் இந்தோனேசியாவின் வளமான பண்பாட்டு மரபுகளை எடுத்துக்காட்டும் பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றினர். சுமத்ரா, ஜாவா மற்றும் நுசா தெங்காரா உள்ளிட்ட பகுதிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டின் பண்பாட்டு பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியதோடு, ஆசியா முழுவதிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்றன.

பேரவையை நடத்துவதில் ஒத்துழைத்த இந்தோனேசிய அரசாங்கம், குறிப்பாக சமய விவகார அமைச்சகம், சமயத் தலைவர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு ஆயர் அந்தோனியுஸ் தனது நன்றியைத் தெரிவித்தார். அவர்களின் ஒத்துழைப்பு ஒன்றிணைந்த பயணத்தின் வாழ்வியல் வெளிப்பாடு என்று அவர் பாராட்டினார்.தமது உரையின் நிறைவில், இந்தப் பேரவையை தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்படைத்து, ஆசியாவின் உள்ளூர் திருஅவைகள் மேலும் வலுப்பெறவும், பொதுநிலையினரும் இளைஞர்களும் அதிகாரமளிக்கப்படவும், படைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆழப்படவும், கண்டம் முழுவதும் திருஅவையின் சாட்சிப் பணி புதுப்பிக்கப்படவும் அவர் இறைவனிடம் மன்றாடினார்.இறுதியாக, பேரவையின் நோக்கத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் ஜெபத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்:

Tamil Survey Popup Image