இலங்கை சிறைச்சாலைப் பணியில் பாலம் கட்டும் திருஅவை | FABC | Veritas Tamil
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப் பேரவை, "ஒன்றிணைந்த பயனமும் ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் கட்டுவோராகவும் அழைக்கப்படும் திருஅவை" என்ற கருப்பொருளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் ஷவனோத் திருச்சிலுவை அருட்சகோதரிகள் (Sisters of the Cross of Chavanod) மேற்கொண்டு வரும் சிறைச்சாலைப் பணி, அந்த அழைப்பிற்கு உயிரோட்டமான சாட்சியாக விளங்குகிறது.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அடிமைத்தனத்தின் மத்தியில், இவ்வருட்சகோதரிகள் சிறைக்கைதிகளுடன் கருணையோடும் அன்போடும் பயணித்து, ஆன்மிக வழிகாட்டல், மறைக்கல்வி மற்றும் மறுவாழ்வு உதவிகள் மூலம் அவர்கள் தங்கள் குடும்பம், சமூகம் மற்றும் இறைவனோடு மீண்டும் இணைவதற்கு துணை நிற்கின்றனர்.ஷவனோத் திருச்சிலுவை அருட்சகோதரிகள் சபையின் மாகாண ஆலோசகரான அருட்சகோதரி மொரீன் பீரிஸ் கூறுகையில், உண்மையான பாலம் கட்டுதல் கேட்பதிலிருந்தே தொடங்குகிறது என்றார்.
மத்திய இலங்கையின் கண்டியில் உள்ள டும்பாரா சிறைச்சாலையில் பணியாற்றும் அவர், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கும் பெண்களுடன் தொடர்ந்து சந்தித்து வருகிறார். அவர்களில் பலர் நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், சிலர் புகழ்பெற்ற கத்தோலிக்கப் பள்ளிகளில் கல்வி கற்றவர்களுமாக இருப்பது, போதைப்பழக்கம் சமூக, பொருளாதார அல்லது சமய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாது யாரையும் பாதிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது என்றார்.
ஒவ்வொரு வாரமும் அருட்சகோதரிகள் கைதிகளுக்கு மறைக்கல்வி நடத்தி, அவர்களுடன் சேர்ந்து ஜெபித்து, அவர்களின் வாழ்க்கைக் கதைகளை பொறுமையுடன் கேட்கின்றனர்."இந்தச் சந்திப்புகள் பாலம் கட்டும் புனித தருணங்களாக மாறியுள்ளன," என்று அருட்சகோதரி மொரீன் பீரிஸ் தெரிவித்தார்.
பல கைதிகள் முறிந்த குடும்ப உறவுகள், மனக்காயங்கள், தனிமை, தவறான நட்பு மற்றும் தவறான முடிவுகள் எவ்வாறு தங்களை போதைப்பழக்கத்திற்கு இட்டுச் சென்றன என்பதை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் கதைகளின் அடிப்படையில் ஒலிப்பது ஒரே ஏக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், புரிந்துகொள்ளப்பட வேண்டும், அன்பு பெற வேண்டும் என்பதே.
உண்மையோடு ஒருவர் தன்னை கேட்கிறார் என்ற உணர்வு உருவாகும் தருணத்திலிருந்தே குணமடைதல் தொடங்குகிறது என்று அருட்சகோதரி கூறினார்.
திருவிவிலிய தியானம், ஜெபம், மறைக்கல்வி மற்றும் தனிப்பட்ட ஆன்மிக வழிகாட்டல் மூலம், பல கைதிகள் தங்களின் அடையாளம் போதைப்பழக்கமோ கடந்தகாலத் தவறுகளோ அல்ல; இறைவனின் பிள்ளைகள் என்ற உயரிய மாண்பே தங்களின் உண்மையான அடையாளம் என்பதை மீண்டும் உணரத் தொடங்குகின்றனர்.
ஆனால், சிறைவிடுதலையின் பின்னரும் பல சவால்கள் தொடர்கின்றன. முன்னாள் கைதிகள் மீண்டும் அதே சூழலுக்குத் திரும்ப வேண்டிய நிலை, குடும்ப நிராகரிப்பு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் சமூகத்தின் புறக்கணிப்பு ஆகியவை அவர்களின் மறுவாழ்வை கடினமாக்குகின்றன.
"மறுவாழ்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட மன உறுதியால் மட்டுமே சாத்தியமல்ல; அவர்களுடன் தொடர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கும் சமூகங்களும் அவசியம்," என்று அருட்சகோதரி மொரீன் பீரிஸ் வலியுறுத்தினார்.
இந்தப் பணிக்கு கண்டி மறைமாவட்டத்தின் சிறைச்சாலை அருட்பணியாளரான அருட்தந்தை ஜோன் ஸ்டீபன் ஆன்மிக ஆதரவு வழங்கி வருகிறார்.
அவரின் அனுபவத்தில், பல கைதிகள் ஆழமான மனவேதனைகளைச் சுமந்தாலும், இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் அவர்களிடம் காணப்படுகிறது. ஜெபம், திருவருட்சாதனங்கள் மற்றும் தொடர்ச்சியான ஆன்மிகப் பணியின் வழியாக பலர் மனமாற்றம் பெற்று, மன்னிப்பையும் புதிய வாழ்க்கைப் பாதையையும் தேடத் தொடங்கியுள்ளனர். "இறைவனின் இரக்கத்தை அடைய முடியாதவர் யாரும் இல்லை," என்று அருட்தந்தை ஜோன் ஸ்டீபன் கூறினார்.
"ஒவ்வொரு உரையாடலும், ஒவ்வொரு ஜெபமும், ஒவ்வொரு உடனிருப்பும், மீண்டும் இணைக்கப்படும் ஒவ்வொரு உறவும் ஒரு பாலமாகிறது. அது போதைப்பழக்கத்திலிருந்து மறுவாழ்வுக்கும், நிராகரிப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கும் வழி அமைக்கிறது."
அவரின் அனுபவம், உண்மையான பாலம் கட்டுதல் என்பது பெரிய திட்டங்களில் அல்ல; காயமடைந்த ஒருவருடன் இணைந்து நடந்து, அவரை குணமடைதல், நல்லிணக்கம் மற்றும் புதிய வாழ்வை நோக்கி அழைத்துச் செல்லும் மனப்பான்மையில்தான் தொடங்குகிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
