பள்ளிக்குச் சீர்வரிசை | அருட்பணி. ஜெ. ஞானசேகரன் | Veritas Tamil
ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இறைவன் உறையும் கோவில்; ஒவ்வோர் ஆசிரியரும் கடவுளாக இருக்கிறார்.
நாகை மாவட்டத்திலுள்ள மிகச்சிறிய அழகிய மீனவக் கிராமம் கீச்சாங்குப்பம். ஆங்கிலவழித் தனியார் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்க ஆவல்கொள்ளும் பெற்றோர் மத்தியில் கீச்சாங்குப்பம் மக்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு இருக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றார்கள். காரணம் தங்கள் ஊர்ப் பள்ளியை உயிராக நேசிக்கிறார்கள் இவ்வூர் மக்கள்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளை யாரும் மறந்திருக்க முடியாது. யாரும் எதிர்பாராத ராட்சத சுனாமி பல கடற்கரைக் கிராமங்களைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இப்பள்ளியில் படித்த 80 குழந்தைகள் உட்பட 600 பேரை இப்பேரலை அடித்துச் சென்றது. இந்தப் பள்ளிக் கட்டடம் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போனது.
தொடக்கத்தில் நானூறு பிள்ளைகள் படித்த பள்ளிக்கூடத்தின் மாணவர் எண்ணிக்கை 190ஆகக் குறைந்தது. இந்தச் சூழ்நிலையில் இப்பள்ளிக் கூடத்தின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் ஆசிரியர் பாலு. பொலிவிழந்த இப்பள்ளிக்கூடத்தை ஊர் மக்கள், மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியோடு புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார் தலைமை ஆசிரியர். அதன்பலனாக, ஸ்மார்ட் வகுப்பறை, சுகாதாரமான கழிப்பிடங்கள், தண்ணீர் வசதிகள், புதிய கட்டிடங்கள் எனப் பள்ளிக்கூடத்தின் தோற்றத்தையே மாற்றினார்.
அறிய வேண்டிய மாமனிதர்கள்
பள்ளியில் சிறுவர் பூங்கா, மாடித் தோட்டம் அமைக்கப்பட்டு, யோகா, கராத்தே, ஆங்கிலம் பேசக் கற்றல் போன்ற பலவும் புதுமையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கை நானூறாக உயர்ந்தது. கோடி ரூபாய் கொடுத்தும் வாங்க முடியாத உலகத் தரச் சான்றிதழ் இப்பள்ளிக்குக் கிடைத்தது, இப்பள்ளியின் கூடுதல் சிறப்பு. கடந்த மே மாதத்தில் பள்ளியில் நடந்த விழாவில் இந்தக் கிராமத்து மக்கள் தங்களால் முடிந்தளவு பீரோ, மின்காற்றாடி, நாற்காலி, பெஞ்சு என இரண்டு இலட்சத்துக்கும் அதிகமாக சீர்வரிசையாக இப்பள்ளிக்குக் கொடுத்திருப்பது உண்மையில் வியக்கத்தக்கது.
ஆரவாரமில்லாமல் வருங்காலத் தலைமுறைக்காக உழைக்கின்ற மாமனிதர்கள் அன்பு வணக்கம் பெற வேண்டியவர்கள்."
