பிளவுபட்ட நிம்பிக்கை- நிலைவாழ்வுக்கு அழிவு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
09 அக்டோபர் 2026
கலாத்தியர் 3: 7-17
லூக்கா 11: 15-26
பிளவுபட்ட நிம்பிக்கை- நிலைவாழ்வுக்கு அழிவு!
முதல் வாசகம்.
இந்தப் பகுதியில் பவுல் நம்பிக்கையின் மூலம் மக்கள் கடவுளின் பிள்ளைகளாகிறோம் என்பதை கலாத்திருக்கு எடுத்துரைக்கிறார். இதனை விவிரிக்க ஆபிரகாமின் நம்பிக்கை வாழ்வை முன்வைத்து எழுதுகிறார். ஆபிரகாம் கடவுளை முழுமையாக நம்பியதால்தான் கடவுள் முன்னிலையில் அவர் ஒரு நீதிமானாகக் கருதப்பட்டார் என்கிறார் பவுல்,
அடு்த்து, கடவுளில் ஆபிரகாம போல் நம்பிக்கை கொண்டவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும், திருச்சட்டத்தை சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில், “திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்!” என்றும் மறைநூலில் எழுதப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தொடர்ந்து, கிறிஸ்து நமக்குப் பதிலாக சாபத்தை ஏற்றுக்கொண்டு, நம்மை அந்தச் சாபத்திலிருந்து மீட்டுள்ளார் என்றும், கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியானது, மோசே திருச்சட்டத்தை சீனாய் மலையில் பெறுவதற்கு முன்பே கொடுக்கப்பட்டது என்றும், திருச்சட்டத்தால் ஆபிரகாமுக்கு கடவுள் அளித்த வாக்குறுதியை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டு எழுதுகிறார்.
நிறைவாக, ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும், வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவுமே , கிறிஸ்துவின் மூலம் இறைமக்களாகிய நமக்கு கடவுள் அருள் புரிந்துள்ளார் என்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியல், இயேசு தீய ஆவிகளை விரட்டியதைப் பற்றி சிலர் தவறாகக் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக, இயேசு பேய்களின் தலைவனாகக் கருதப்படும் பெயல்செபூலைக் கொண்டே தன்னோடு வைத்துக்கொண்டு அவனது உதவியாலே பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
அவர்களின் குற்றச்சாட்டை அறிந்துகொண்ட இயேசு, “சாத்தான் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்தால் அவனுடைய அரசு எப்படி நிலைத்திருக்கும்?” என்று கூறி, அவர்களின் குற்றச்சாட்டை மறுக்கிறார். இயேசு கடவுள் அருளிய வல்லமையால் தீய ஆவிகளை விரட்டுகிறார் என்றும் கடவுளின் அரசு மக்களிடையே வந்துவிட்டது என்பதற்கு இது அடையாளம் என்றும் விவரிக்கிறார்.
இதனை அவர்களுக்கு மேலும் எடுத்துரைக்க மற்றொரு உவமையை முன்வைக்கிறார். அதன்படி, துணிவும், பொறுப்பும் மிக்க காவலர் ஆயுதம் தாங்கித் ஒருவர் வீட்டைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அந்த காவலரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் வீட்டு உரிமையாளரின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டு இதர தீயவர்களாடு பகிரப்படும் என்கிறார் ஆண்டவர்.
நிறைவாக, தீய ஆவியிடமிருந்து விடுதலை பெற்ற ஒருவர், தனது உள்ளத்தை வெறுமையாக விட்டுவிடக்கூடாது என்றும், உள்ளமானது கடவுளின் வார்த்தையாலும் நன்மையாலும் நிரப்பப்படாவிட்டால், முன்பைவிட அதிக தீய ஆவிகள் வந்து உள்ளத்தில் குடியேறலாம் என்றும் எச்சரிக்கிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களையும் ஆழந்து வாசிக்கும்போது, நமக்குள் இரு முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
முதலாவது, “நாம் எதனால் விடுதலை பெற்றோம்?” என்பதாகும். அடுத்து, “விடுதலை பெற்ற பிறகு, நம் உள்ளம் எதனால் நிரம்பியுள்ளது?” என்பதாகும்.
முதல் வாசகத்தில் பவுல், சட்டத்தின் செயல்களால் அல்ல, நம்பிக்கையால்தான் நாம் கடவுளுடைய பிள்ளைகளாகிறோம் என்பதை அழுத்தமாக, ஆபிரகாம் கடவுளில் கொண்ட நிம்பிக்கையை முன்வைத்து, கூறுகிறார். லூக்கா நற்செய்தியில் இயேசு, தீய ஆவியிடமிருந்து விடுதலை பெற்ற மனிதனின் உள்ளம் மீண்டும் வெறுமையாக இருந்தால், முன்பைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்.
எனவே, இரு வாசகங்களையும் ஒருமித்துச் சிந்திக்கும்போது, கிறிஸ்து நம்மை விடுவித்தது மட்டும் போதாது, நாம் தொடர்ந்து அந்த விடுதலையை கிறிஸ்துவில் நிலைத்திருந்து வாழ வேண்டும் என்ற படிப்பினையைத் தருகின்றன.
______________
திருமுழுக்கால் நாம் கொண்ட நம்பிக்கை என்றும், எப்பொழுதும் காக்கப்பட வேண்டும். திருமுழுக்கில் நாம் பாஸ்கா திரியிலிருந்து (உயிர்த்த ஆண்டவரில்) பெற்ற ஒளி நம் நம்பிக்கையின் ஒளி. நாம் பெற்ற வெண்ணிறை ஆடை, நாம் பெற்ற புதுவாழ்வின், தூய வாழ்வின் அடையாளம். இவை நாம் கடவுளின் பிள்ளகைள் என்பதை உணர்த்தம் அடையளங்களாகவும் உள்ளன.
இன்று நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பவுல் ஆபிரகாமை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். ஆபிரகாம் கடவுளை நம்பினார் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமானகத் திகழ்ந்தார்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், நாம் கடவுளின் அன்பை விலை கொடுத்து வாங்கவோ. வேறு வழிகளில் சம்பாதிக்கவோ முடியாது; அதை கடவுளில் கொள்ளும் முழுமையான நம்பிக்கையால் மட்டுமே பெறவோ அனுபவிக்கவோ இயலும்.
நற்செய்தியில், தீய ஆவியிடமிருந்து விடுதலை பெற்ற ஒருவர், தனது உள்ளத்தை வெறுமையாக விட்டுவிடக்கூடாது என்றும், உள்ளமானது கடவுளின் வார்த்தையாலும் நன்மையாலும் நிரப்பப்படாவிட்டால், முன்பைவிட அதிக தீய ஆவிகள் வந்து உள்ளத்தில் குடியேறலாம் என்றும் எச்சரிக்கிறார் ஆண்டவர். ஆகவே, "உலகம் ஆயிரம் சொல்லட்டும்! உனக்கு நீதான் நீதிபதி" என்ற கருத்தோட்டதில் நாம் பயணிக்க வேண்டும். நாம் கொண்ட நம்பிக்கைதான் நமக்கு அச்சாரம்.
நிறைவாக, கிறிஸ்தவ வாழ்க்கையின் அடித்தளமாக அமைவது, ஊர் மெச்ச வாழ்வதல்ல, அனைவருக்கும் முன்பாக, இன்பத்திலும் துன்பத்திலும் கடவுளில் வாழ்வதாகும். கிறிஸ்து நமக்காக சிலுவையில் வெளிப்படையாக சாபத்துக்குள்ளானார். சாபத்தை ஏற்றுதான் அவர் நம்மை மீட்டார்.
ஆகவே, நாம் வெளிப்படையாக “நான் கிறிஸ்துவுக்குரியவன்” என்பதை நமக்கான அடையாளமாக ஏற்று அதற்கேற்ப வாழ்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, என் உள்ளத்தில் நான் வெறுமையாக இல்லாமல், உமது வார்த்தையாலும், அன்பாலும், தூய ஆவியாலும் நிரம்பட்டு உம்மில் நிலைத்திருக்க எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
