மரணம் அல்ல உயிர்த்தெழுதலே நமது நம்பிக்கை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

21 நவம்பர் 2026
 
திருவெளிப்பாடு 11: 4-12
லூக்கா  20: 27-40
 

மரணம் அல்ல; உயிர்த்தெழுதலே நமது நம்பிக்கை!
 
 
முதல் வாசகம்.

இன்றைய வாசகப் பகுதியில், கடவுளின் வார்த்தைக்குச் சாட்சிகளாக விளங்கும் இரண்டு சாட்சிகளைப் பற்றி திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். அவை, மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு விளக்குத் தண்டுகள் ஆகும்.  இவர்கள் இறைவார்த்தையைத் துணிவுடன் அறிவித்ததால் எதிர்ப்புகளையும் துன்பங்களையும் சந்திக்கிறார்கள். இறுதியில் அவர்கள் கொல்லப்பட்டாலும், மூன்றரை நாட்களுக்குப் பிறகு கடவுளின் வல்லமையால் மீண்டும் உயிர்பெற்று எழுகிறார்கள். வானத்திலிருந்து வந்த குரல் அவர்களை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று யோவான் மறைமுகமான காட்சிசை விவரிக்கிறார்.

நற்செய்தி. 

இந்த நற்செய்தி வாசகத்தில், உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். அதாவது, ஏழு சகோதரர்கள் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து, அனைவரும் இறந்துவிட்டால், உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அந்தப் பெண் யாருடைய மனைவியாக இருப்பார் என்று கேட்டு இயேசுவைச் சோதிக்கிறார்கள். அதற்கு இயேசு, இவ்வுலக வாழ்க்கைக்கும் உயிர்த்தெழுதலுக்குப் பிந்தைய வாழ்வுக்கும் வேறுபாடு உண்டு என்று விளக்குகிறார். உயிர்த்தெழுந்தவர்கள் இனி சாகமாட்டார்கள்; அவர்கள் கடவுளின் பிள்ளைகளாக இருப்பார்கள் என்று எடுத்துரைக்கிறார்.

மேலும், மோசேயின் நூலில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள் என்று ஆண்டவர் அழைக்கப்படுவதைக் குறிப்பிட்டு, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.

சிந்தனைக்கு.

முதலில், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் மூப்பர்கள் இயேசு கொண்டிருந்த அதிகாரத்தில் சவால் விடுகிறாரகள்.   பலிபீடத்திற்காக விலங்குகளை விற்பவர்களையும் நாணயம் மாற்றுபவர்களையும் ஆலயத்திலிருந்து வெளியேற்ற அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இயேசு, அவர்கள் தம் தந்தையின் இல்லத்தைக் கள்வர்களின் குகையாக மாற்றிவிட்டார்கள் என்று கண்டித்தார்.

இன்றைய நற்செய்தியில், இயேசுவைச் சிக்கவைக்க முயற்சி செய்வதற்காக இப்போது சதுசேயர்கள் முன்வருகிறார்கள். சதுசேயர்கள் குருத்துவப் பணியோடும் ஆலய வழிபாட்டோடும் நெருங்கிய தொடர்புடையவர்கள். மலும், சமூகத்தில்  உயர்குடி மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தனர். உரோமை ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க்து.

பரிசேயர்கள் போலன்றி  சதுசேயர்கள் இறந்தோர் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை அற்றவர்கள்.  ஆன்மா அழியாதது என்பதையும், வானதூதர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் மறுத்து வந்தன்ர.  ஆனால் இவை அனைத்தும் இயேசுவின் போதனைகளில் அடிப்படையான நம்பிக்கைகளாக இருந்தன. மேலும், மோசேயின் முதல் ஐந்து நூல்களான திருச்சட்ட நூல்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான இறைவார்த்தையாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனால்தான், இயேசுவிடம் அவர்கள் எழுப்பிய  கேள்வியை மோசேயின் திருச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பினர்.

இயேசு மருண்டவர் அல்ல. அவர் அவர்களுடைய திருச்சட்டத்தையே அவர்களுக்கு எதிரான சான்றாகப் பயன்படுத்தி, எரியும் முட்புதரிலிருந்து கடவுள் உரைத்த வார்த்தைகளைச் சுட்டிக்காட்டுகிறார்: “நானே ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்” என்று ஆண்டவர் கூறியதை நினைவூட்டி, அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார். 

முதல் வாசகத்தில், கடவுளின் வார்த்தைக்குச் சாட்சிகளாக வாழ்ந்த இருவர் கொல்லப்பட்டாலும், கடவுளின் வல்லமையால் மீண்டும் உயிர்பெற்று எழுகிறார்கள். இதன் மூலம்  மரணத்தை வெல்லக்கூடியவர் ஆண்டவர் என்பது புலனாகிறது.   நற்செய்தியில், உயிர்த்தெழுதலை மறுத்த சதுசேயர்களுக்கு இயேசு, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள் என்று தெளிவுபடுத்துகிறார். உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாம் புதிய வாழ்வில் கடவுளோடு என்றும் வாழ்வோம் என்பதை எடுத்துரைக்கிறார்.

ஆம், இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது. ஆனால் கடவுள் நமக்கு வாக்களித்துள்ள நிலைவாழ்வு ஒன்றே நிலையானது. அது இறப்புக்குப் பிறகு நமக்கான கடவுளின்  கொடை.  எனவே, துன்பங்கள், சோதனைகள், மரணம் ஆகியவற்றைக் கண்டு அஞ்சாமல், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு வாழ நாம் அழைக்கப்டுகிறோம். அதேவேளையில், நமது அன்றாட வாழ்க்கையில் இறைவனுக்கு உண்மையான சாட்சிகளாகத் திகழவும்  வேண்டும்.

நற்செய்திக்கான சாட்சிய வாழ்வே நிலையான விண்ணக வாழ்வுக்கு அடித்தளம். எந்தளவுக்கு நாம் திருவிவிலியம் அறிந்துள்ளோம் என்பதல்ல, எந்தளவுக்கு திருவிவலியம் அறிந்த நாம் சாட்சிகளாக வாழ்கிறோம் என்பதே இன்றியமையாதது. 

இறைவேண்டல்.

ஆண்டவரே. நான் நாளும் பொழுதும் மணரத்தை எண்ணி அஞ்சாமல், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.
 

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image