விழித்திருப்போம் வருவேன் என்றவர் வருவார்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 21ஆம் வாரம் -வியாழன்
27 ஆகஸ்ட் 2026 

1 கொரி 1: 1-9
மத்தேயு  24: 42-51
 

 விழித்திருப்போம் வருவேன் என்றவர் வருவார்!

முதல் வாசகம்.

இந்த வாசகத்தில், பவுல் அடிகள் கொரிந்திய திருஅவை இறைமக்களுக்கு   வாழ்த்துக்களைத் தெரிவித்து, கிறிஸ்து இயேசுவில் அழைக்கப்பட்ட தூய மக்களாக அவர்கள் இருப்பதை நினைவூட்டுகிறார்.

கடவளின் அருளால் அவர்கள் கிறிஸ்துவில் செல்வந்தர்களாகவும், எல்லா விதமான ஆவிக்குரிய வரங்களிலும் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று வாழ்த்துவதோடு, கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி அவர்களிடையே உறுதியாக நிலைத்திருப்பதைப் பாராட்டுகிறார். அத்துடன், கொரிந்திய இறைமக்கள்   ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருப்பதையும் குறிப்பிட்டு எழுதுகிறார்.
  
நிறைவாக, இந்தப் பகுதியில்,  இறையருள், வரங்கள், கிறிஸ்துவின் வருகைக்கான எதிர்பார்ப்பு, மற்றும் கடவுளின் உண்மைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறார் பவுல்.  

 நற்செய்தி.

இந்த வாசகத்தில்,  
இன்றைய நற்செய்தியில்  இயேசுவின் இரண்டாம் வருகைக்காக எப்போதும் விழிப்போடும் ஆயத்தத்தோடும் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இயேசு வலியுறுத்தியதை வாசிக்கிறோம்.  இப்படிப்பினையை விவரிக்க இயேசு  திருடனின் உவமையைப் பயன்படுத்துகிறார்.  ஒரு வீட்டுக்காரருக்கு திருடன் எப்போது வருவான் என்று தெரிந்தால், அவர் விழித்திருந்து தன் வீட்டைக் காப்பார். அதுபோல, இயேசு (மானிடமகன் ) வரும் நேரத்தை யாரும் அறியாததால், நம்பிக்கையாளர்கள் எப்போதும் அவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றுரைக்கிறார்.

•    இதில், உண்மையுள்ள பணியாளர்  என்பவர்  தலைவர் இல்லாதபோதும் தன் கடமைகளைச் சரியாகச் செய்து, மற்ற வேலைக்காரர்களுக்குச் சரியான நேரத்தில் உணவளிக்கும் பணியாளன் ஆசீர்வதிக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார். தலைவர்  திரும்பி வரும்போது அவருக்கு அதிகப் பொறுப்புகளைக் கொடுப்பார் என்கிறார் ஆண்டவர். 

•    மாறாக, பொல்லாத ஊழியக்காரனோ  தன் தலைவர் வரத் தாமதமாகும் என்று நினைத்து, சக பணியாளர்களை அடிக்கத் தொடங்கி, வெறியர்களோடு குடித்துக் களித்திருக்கும் ஊழியக்காரன் தண்டிக்கப்படுவான் என்கிறார்.  அவன் சற்றும் எதிர்பாராத நாளில் தலைவர் வந்து, அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்குவார். அங்கு அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் என்று முடிக்கிறார் ஆண்டவர்.

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களையும்  ஒருமித்து ஆழச் சிந்தித்தால், அவை  நம் கிறிஸ்தவ வாழ்வுக்கான  ஒரு முக்கிய அழைப்பை நமக்கு முன்வைக்கின்றன. ஆம், அது “விழிப்புடன் இருங்கள்” என்பதாகும். விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் மீண்டும் வரவுள்ளார். அது எப்போது நிகழும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.  

ஆனால், அவருடைய வருகைக்காகக் காத்திருப்பது என்பது பயத்துடனும் சமயச் சடங்குகளைப் பின்பற்றியும்   வாழ்வதாக நாம் நினைக்கக்கூடும். இது தவறானது.   மாறாக, அவரை எதிர்கொள்ள நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் வாழ வேண்டியதை  நற்செய்தி அறிவுறுத்துகிறது.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், அவர்கள் “கிறிஸ்து இயேசுவில் தூய்மைப்படுத்தப்பட்டவர்கள்” என்றும், “புனிதர்களாக அழைக்கப்பட்டவர்கள்” என்றும் கூறுகிறார்.

அவரது இக்கூற்று, நமக்கும் பொருந்துகிறது. நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை நம்முடைய திறமையால் அல்லது தகுதியால் மட்டும் உருவானது அல்ல. முதலில் அது கடவுளின் பெருங்கொடை என்பதை உணர வேண்டும்.  நாம் சில நேரங்களில் நம்பிக்கையில் தளரலாம். இருந்தாலும், அழைத்தக் கடவுள் நம்மை கைவிடுவதில்லை. பவுல் கூறுவது போல, கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியில் நாம் நிலைத்திருக்கவும், அவருடைய வருகைக்காகக் காத்திருக்கவும் கடவுள் எப்போதும் நம்மை உறுதிப்படுத்துகிறார்.

எனவே, நம்முடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது, “நான் எவ்வளவு நல்லவன்?” என்று மட்டும் கேட்பதைவிட, “கடவுள் எனக்குக் கொடுத்த அருளுக்கு, கொடைக்கு யை நான் எவ்வாறு பதிலளிக்கிறேன்?” என்று கேட்க வேண்டும்.
 
மேலும், “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் வரும் நாள், நேரம் உங்களுக்குத் தெரியாது” என்று கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.  இங்கே, விழிப்புடன் இருப்பது என்றால் எப்போதும் பயத்தில் இருப்பது அல்ல. அது நம் இதயத்தைத் அடிக்கடி தூய்மை செய்து, ஆண்டவருக்குத் தயாராக இருப்பதை குறிக்கிறது. 
  
இன்றைய நற்செய்தியில் வரும் ‘உண்மையுள்ள பணியாளன்’ என்பவனை  மிகவும் அழகான முன்மாதிரியாக ஆண்டவர் நமக்குத் தந்துள்ளார். அவனுடைய தலைவர் எப்போது வருவார் என்று அவனுக்குத் தெரியாதிருந்தும்  அவன் தன் பொறுப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உண்மையுடன் செய்தார். அவன் தனது அன்றாட பணிகளை நேர்மையுடன் நிறைவேற்றி வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாம், நமது அன்றாட வாழ்வில்  பெரிய காரியங்களைச் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குக் கொடுக்கப்பட்ட சிறிய பொறுப்புகளை அன்புடனும் உண்மையுடனும் செய்ய வேண்டும் என்பதே இன்றியமையாதது.

முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கடவுள்  நம்மை அழைத்தவர் மட்டுமல்ல; இறுதிவரை நம்மை உறுதிப்படுத்துகிறவரும் அவரே என்கிறார். ஆகவே, நாம் நாளைய தினத்தைப் பற்றி கவலைப்படாமல், இன்றைய நாளை ஆண்டவருக்குரிய நாளாக வாழ்வோம்.  ஆண்டவர் எப்போது வருவார் என்பதை நாம் அறியோம். ஆனால் அவர் வரும்போது அவர் நம்மைக் குறித்து, “நல்லதும் நம்பிக்கைக்குரியதுமான பணியாளனே” என்று சொல்லக்கூடியவர்களாக இருக்க முயற்சிப்பம்.  
  
இறைவேண்டல்.

ஆண்டவரே, எப்போதும் நான் விழிப்புடன் இருந்து உமது வருகைக்காக ஆயத்தமாக இருக்கவும்,  இன்றும் என்றும் உமது திருவுளப்படி வாழவும் வரமருளும். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image