நாம் பணி வாழ்வுக்குரியவர்கள், பார்வையாளர்கள் அல்ல! | ஆர்கே. சாமி | Veritas Tamil
8 ஜூலை 2025
பொதுக்காலம் 14 ஆம் வாரம் – செவ்வாய்
தொடக்க நூல் 32: 22-32
மத்தேயு 9: 32-38
நாம் பணி வாழ்வுக்குரியவர்கள், பார்வையாளர்கள் அல்ல!
முதல் வாசகம்.
இங்கே மற்றொரு சந்திப்பு நிகழ்கிறது. யாக்கோப்பு தன் சகோதரன் ஏசாவைச் சந்திக்கச் செல்கிறார். இவர் முன்பு ஏசாவை ஏமாற்றியதால் அவருக்கு அஞ்சினார். ஆனாலும் தம் மந்தைகளில் பாதியை அவருக்கு அளித்து சமரசம் செய்ய எண்ணி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்தையை வேலையாள்கள் வழி முன் அனுப்பி வைக்கிறார். அன்றிரவை அவர் தம் மனைவிமார்களோடும் வேலையாள்களோடும் ஆற்றைக் கடக்க, அவர் மட்டும் பின் தங்கி இருக்க ஓர் ஆடவர் மட்டும் அவரோடு மற்போரிட்டார்.
ஆனாலும் அந்த ஆட்வர் கடவுள் என்று அறிந்து அவரிடம் எப்படியாவது ஆசி பெற வேண்டும் என்று விடியும் வரை மற்போரில் ஈடுபடுகிறார். இப்பகுதியில் காணப்படும் ‘தொடை சந்து’ என்பது, தொடைக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட இடம் என நாம் பொருள் கொள்ளலாம்.
பொழுது புலரும் நேரத்தில் வானத்தூதர் யாக்கோப்பின் பெயரை மாற்றுகிறார். “உன் பெயர் இனி யாக்கோப்பு எனப்படாது; இஸ்ராயேல் எனப்படும். கடவுளோடு போரிட்டு வெற்றி பெற்றதால் அந்தப் பெயர் வழங்கப்படும்” என்றார். அன்று முதல் யாக்கோப்பு இஸ்ராயேல் எனும் பெயராலும் அழைக்கப்பட்டார். அதே பெயர் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கும் பெயராக மாறியது.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவின் மூப்பணியைக் குறித்து மத்தேயு குறிப்பிடுகிறார். அவை, கற்பித்தல், போதித்தல் மற்றும் குணப்படுத்துதல் ஆகும். இங்கு, பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரை இயேசு குணப்படுத்துகிறார். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். இது கூடியிருந்த மக்களுக்கு வியப்பூட்டியது.
\
அடுத்து, ஆயன் இல்லாத ஆடுகளைப் போல இருந்த மக்கள் மீது இயேசு பரிதாபப்பட்டதால், அவர் தொடர்ந்து மக்களுக்கு நற்செய்திப் பணி செய்கிறார். மேலும் அவரது இரக்கமே அவரை அற்புதங்களைச் செய்யத் தூண்டுகிறது. தனது குறுகிய மண்ணுலகப் பணியில், தேவையில் உள்ள அனைவருக்கும் அவர் ஒருவரால் உடல் ரீதியாக அணுக முடியாது என்பதையும் அவர் உணர்ந்தார், எனவே கடவுளின் அறுவடையில் அதிக வேலையாட்களுக்காக இறைவேண்டல் செய்ய அவர் தனது சீடர்களைப் பணிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களை வாசிக்கும் போது, எனது சிந்தையை கவர்ந்த பகுதி கடவுளின் அளவற்ற இரக்கம்தான். கடவுள் உண்மையிலேயே அனைத்து படைப்புகள் மற்றும் மனிதர்கள் மீது அக்கறை கொள்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
முதல் வாசகத்தில், யாக்கோபு, தன்னுடன் மற்போர் செய்த ஆடவரிடம், 'நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்!' என்கிறார். தன் சகோதரன் ஏசாவை 'ஏமாற்றுவதா? வேண்டாமா?' என்று மனத்திற்குள் போராடி, 'ஏமாற்றுவதில்லை. சகோதரனை நேருக்கு நேர் எதிர்கொள்வோம்' என்று முடிவெடுக்கிறார் யாக்கோபு. ஆகையால்தான், 'யாக்கோபு' (ஏமாற்றுபவன்) என்ற பெயர் மாற்றப்பட்டு, 'இஸ்ரயேல்' (போரிடுபவன்) என்ற பெயர் அவருக்கு கடவுளால் வழங்கப்பட்டதை வாசித்தறிந்தோம்.
தனது மனப்போராட்டத்தின் இறுதியில் நல்லதொரு முடிவை யாக்கோபு எடுக்கிறார். தன் சகோதரனுடன் ஒப்புரவாக முடிவு செய்கிறார். இங்கே மனம் மாறுகின்ற யாக்கோபு துணிவுடன் ஏசாவை எதிர்கொள்ள விழைகிறார். இந்த வாழ்க்கை மாற்றம் தான் இவர் பெற்ற ஆசி எனலாம்.
நற்செய்த்தியில், வாய்பேச இயலாத பேய்பிடித்தவனை அவரின் நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசு குணமாக்குவார் என்ற நம்பிக்கை அந்த நண்பர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு நேயுற்றிருந்த அம்மனிதர் மீது அக்கறையும் பரிவன்பும் இருந்ததை அறிகிறோம். இவர்கள் நல்ல ஆயன்களாக தங்கள் பணியைச் செய்தனர்.
மறுபுறம், பரிசேயர், “இயேசு பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்று குற்றம் சுமத்தினர். இயேசுவோ, ‘நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்’ என்று மத்தேயு குறிப்பிடுகிறார். நல்லவர்கள் மத்தியல் சில குள்ள நரிகளும் இருக்கத்தான் செய்யும். இயேசுவோ, குள்ள நரிகளைப் பொருட்படுத்தவில்லை. அவர் பணியில் முன்னேறிச் செல்கிறார்.
மக்கள் உதவியற்றவர்களாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் இருப்பதால், ஆயன் இல்லாத ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டதைக் கண்டு அவர்கள் மேல் பரிவு கொள்கிறார்' இயேசு. அவர் அவர்களைப் பார்க்கிறார். அவர்கள் மத்தியில் நடமாடிய தலைவர்களின் செயல் (பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள்) வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருந்தது. வேலியாக இருக்க வேண்டியவர்கள் பயிருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லையெனில், பயிர்களின் கதி என்னவாகும்?
பேய்பிடித்தவனை, அவரின் நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வரும்போது, அவனது முரட்டத்தனத்தால் அவனோடு போராடியிருப்பர். அவர்களுடய ஆடைகள் கிழிந்தும் இருக்கலாம். உடலில் கீரல்கள் ஏற்பட்டும் இருக்கலாம். ஆனாலும் அவனை குணப்படுத்த அவர்கள் எடுத்த முயற்சி வீண் போகவில்லை. நண்பன் நலம் பெற்றான்.
அந்த நண்பர்களைப் போல, நாம் அனைவரும் நற்செய்திப் பணிக்கு அழைக்கப்பட்டவர்கள். கடவுளின் பணியாளராக நமது திறமைகளையும் ஆற்றலையும் அதிகபட்சமாகப் பயன்படுத்தி, மந்தைகளைக் கண்காணிக்க வேண்டியவர்கள். நாமோ, ஆடையில் அழுக்குப்படாமலும், சிறிதேனும் வியர்வை சிந்தாமலும் இயேசுவுக்குப் பணியாளராக இருக்க விரும்புகிறோம். பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படும் பணியாளர்களாக இருப்பது எளிது. ஆனால், அத்தகைய பணியாளர்களை இயேசு வரவேற்பதில்லை. ஆடைகள் கிழிந்தாலும், உடலில் கீரல்கள் ஏற்பாட்டாலும் நண்பன் நலம்பெற வேண்டும் என்று செயலில் இறங்கிய நண்பர்களைப்போல் நமது பணி வாழ்வும் அமைய வேண்டும்.
கடவுளின் அறுவடையில் அதிக வேலையாட்களுக்காக இறைவேண்டல் செய்ய அவர் நம்மை பணித்துள்ளார்.
இறைவேண்டல்.
ஆண்டராகிய இயேசுவே, துன்பப்படும் அயலார் மீது பரிவிரக்கம் கொள்ளும் நல் மனத்தையும் உதவிசெய்யும் நல்லுள்ளத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
