பத்தோடு பதினொன்று அல்ல சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

3 ஜூலை 2025
பொதுக்காலம் 13 ஆம் வாரம் – வியாழன்
புனித தோமா – திருத்தூதர் (விழா)
எபே 2: 19-22
யோவான் 20: 24-29
பத்தோடு பதினொன்று அல்ல சீடத்துவம்!
முதல் வாசகம்.
இன்று திருத்தூதர் தோமாவின் விழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய முதல் வாசகமான எபேசியருக்கு எழுதிய கடிதத்தில், புனித பவுல் திருஅவையை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்துகிறார். இந்தக் கட்டிடமானது, திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோரை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாக உள்ளது என்கிறார் பவுல் அடிகள்.
நிறைவாக, கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறர்கள் என்றும் விவரிக்கிறார்.
நற்செய்தி
தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசு தம்முடைய சீடர்களுக்குத் தோன்றினார், ஆனால் அவ்வேளையில், தோமா அங்கு இல்லை. மற்ற சீடர்கள் உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் கண்டதாகக் கூறும்போது, தோமா இயேசுவின் காயங்களைத் தானே பார்த்து, அதில் தன் விரலை விட்டு, அவர் விலாவில் தன் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் என்றார்.
அடுத்து, எட்டு நாள்களுக்குப் பின், கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார்’ என்று யோவான் குறிப்பிடுகிறார். அப்போது, தோமா அங்கிருந்ததினால், அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்று அறிக்கையிட்டார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றுரைத்தார் என யோவான் மேலும் விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்று தாய் திருஅவை திருத்தூதர் தோமாவின் விழாவைக் கொண்டாட அழைக்கிறது. இவர் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் உடன் வாழ்ந்த திருத்தூதர் ஆவார். ணற்செய்தயை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு தோமா ஒரு சந்தேகப் பேர்வழியாகத் தோன்றக்கூடும். ஏனெனில் அவர் ஆண்டவரின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தார். உண்மையில், இவ்வுலக மாந்தர்களில் இயேசுவை கடவுளாகவும் ஆண்டவராகவும் ஏற்று அறிக்கை இட்ட முதல் மனிதர் தோமாதான். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என இயேசுவை அறிக்கையிட்டார். நற்செய்தி தோமாவின் இந்த அறிக்கை முதல் விசுவாச அறிக்கையாக உள்ளது.
இவர் இந்தியாவில் நற்செய்தியைப் பரப்பியதற்காக இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். அடுத்து, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19) என்ற ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டு இந்தியாவிற்கு வந்து மறைசாட்சியாக மரித்தார்.
இறுதி இராவுணவுக்குப் பின் இயேசு வழங்கிய பிரியாவிடை உரையில், ‘ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?’ என்று கேட்கின்றார் தோமா. அவருக்கு விடையளிக்கின்ற இயேசு, ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என அறிக்கையிடுகின்றார்.
யோவான் நற்செய்தியில் இயேசு இலாசரை உயிர்பிக்க செல்லும் போது மற்ற திருத்தூதர்கள் அவரது உயிர்க்கு ஆபத்து என்று தடுத்தபோது, தோமா, “நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தயாராய் இருப்போம்” என்று (11:16) துணிவுடன் கூறினதை வாசிக்கிறோம்.
தோமாவை கேள்வி கேட்கும் சீடராகவும் பார்க்கிறோம். ‘ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?’ (யோவா 14:5) என்று இயேசுவை வினவுகிறார். எடுத்த எடுப்பில் எதையும் இலகுவாக நம்பிவிடும் இயல்பு தோமாவிடம் இல்லை. "ஐயம் தவிர்" அவரது கொளகையாகப் பார்க்கிறோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’ (குறள் 423)
எனும் குறளுக்கு ஏற்ப உண்மை நிலையை ஆய்ந்தறிவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நம்பிக்கை என்பது சந்தேகத்திற்கு உட்பட்டதல்ல. இயேசுவும் தோமாவில் எழுந்த சந்தேகத்தை மதித்து அவருக்குத் தோன்றி தோமாவைத் தெளிவுப்படுத்தினார்.
தோமாவைப்போல் நமக்கு மனதில் உறுதி வேண்டும். குறிப்பாக சீடத்துவ வாழ்வில் அறிவுத்தெளிவு இன்றியமையாதது என்பதை திருத்தூதர் தோமா இன்று நமக்கு நினைவூட்டுகிறார். நம்மில் எழும் சந்தேகங்களை மூட்டைக் கட்டி வைக்காமல், அவற்றில் அவ்வப்போது தெளிவுப் பெறுவது பல சிக்கல்களைத் தீர்க்க வழிவகுக்கும்.
இறைவேண்டல்.
“நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றுரைத்த ஆண்டவரே, தோமைவைப்போல் உண்மையை ஆழ்ந்தறிந்து செயல்படும் மனதை எனக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
