அருள்வாழ்வுக்கு மணிமகுடம் மலைப்பொழிவு! | ஆர்.கே. சாமி | VeritasTamil
10 ஜூன் மே 2024
பொதுக்காலம் 10ஆம் வாரம் - திங்கள்
1 அரசர் 17: 1-6
மத்தேயு 5: 1-12
அருள்வாழ்வுக்கு மணிமகுடம் மலைப்பொழிவு!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் எலியா இறைவாக்கினர் இஸ்ரயேலின் (வடக்கு நாடு) அரசரான ஆகாபு அரசனிடம், அரசரின் மற்றும் மக்களின் பாவத்தின் காரணமாக வரவிருக்கும் பேரழிவின் செய்தியை அறிவிப்பதன் மூலம் தனது உயிரைப் பணயம் வைக்கிறார். அவர் அரசரிடம் ‘என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது” என்கிறார்.
இஸ்ரயேலில் வறட்சி ஏற்படும் என்பது செய்தி. கடவுள் எலியாவைக் காப்பாற்ற யோர்தான் ஆற்றின் கிழக்கே (இன்றைய யோர்தான் நாடு) பாலைநிலத்திற்குச் செல்லும்படி பணிக்கிறார். அங்கு யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்றும், . அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.
அங்கே வயிற்றுப் பசிக்கு உணவளிக்க காகங்கள் வழியாக ஏற்பாடு செய்கிறார். இன்றைய திருப்பாடலில், விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார். என்று கூறப்படுவதும் முதல் வாசகத்தையொட்டி அமைகிறது. கடவுளின் கட்டளைப்படி, கிழக்குப் பாலைநிலைத்தில் மறைந்திருந்த எலியாவுக்குத் தேவையான உதவியைக் கடவுள் செய்தார் என்று அறிகிறோம்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் நற்செய்தியாளர் மத்தேயு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழங்கிய ‘மழைப்பொழிவை’ நமக்கு வழங்குகின்றார்.
மலைப்பொழிவில் இயேசு கிறிஸ்து எட்டுவிதமான பேறுபெற்றவர்களைக் குறித்துப் பேசுகிறார். ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், இயேசுவின் பொருட்டு இகழ்ந்து துன்புறுத்தப்படுவோர் இவர்கள் யாவரும் பேறுபெற்றவர்களாகவும் அவர்களுக்குக் கிடைக்கும் கைமாறுகளையும் பட்டியலிட்டுள்ளார்.
சிந்தனைக்கு.
இன்று நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு ஆண்டவரின் மலைப்பொழிவு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழங்கிய ‘கிறிஸ்தவத்தின் மணிமகுடம்’ என்றும் அழைக்கிறார்கள். நற்செய்தியில், இயேசு மலைமீது ஏறி அமர்ந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார். அமர்தல் அல்லது உட்கார்ந்து பேசுதல் என்பது பொதுவாக, மிக முக்கிய செய்தி தரப்படப்போகிறது எற்பதாகப் பொருள் கொள்ளலாம்.
இந்த மலைப்பொழிவை சீனாய் மலையில் மோசேவுக்குக் கடவுள் கொடுத்தப் பத்துக் கட்டளையோடு ஒப்பிடலாம். நற்செய்தியில் இயேசுவும் மலைப்பொழிவை மலைமீது ஏறியமர்ந்து, சீனாய் மலையில் கடவுள் மோசேவுக்கு வழங்கியதைப்போல் வழங்கியதால், மத்தேயு இயேசுவை புதிய மோசேவாக வெளிப்படுத்துகிறார்.
மக்கள் மத்தியில் தோன்றிய இந்தப் புதிய போதகர் (இயேசு) புதிய அதிகாரத்துடனும் விவேகத்துடனும் பேசுவதைக் கேட்ட மக்கள் உற்சாகத்தோடு குழப்பமும் அடைந்திருக்கலாம். நீதியின் மீது பசி மற்றும் தாகம், இரக்கம் மற்றும் உள்ளத் தூய்மை இவற்றோடு அமைதி ஏற்படுத்தும் மக்களாக இருப்பது குறித்த இயேசுவின் அறிவுறுத்தலை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஒரு காலத்தில் இறைவாக்கினர்களும் இதே போதனையைத் தான் தந்தார்கள்.
ஆனால் ஏழைகளாகவும், துயருறுவோராகவும், அமைதியாகவும் இருப்பது எப்படி கடவுளின் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டது என்பதைக் கேட்டு வியந்திருக்கக்கூடும். மற்றொன்று, இயேசுவின் நிமித்தம் அவமதிக்கப்பட்டு பொய்யாகக் குற்றம் சாட்டப்படுவோர் எப்படி பேறுபெற்றவர் ஆவர்? என்பதும் பெரும் கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
இயேசுவின் மலைப்பொழிவு நமது முழுமைக்கான ஆண்டவரின் அழைப்பு. கடவுளுக்கு உகந்த தூய வாழ்வுக்கான, விண்ணகப் பயணத்திற்கான வழிகாட்டல் என்று கூறலாம். அவை கிறிஸ்தவ வாழ்வில் தீவிர மனமாற்றத்திற்கு நம்மை அழைக்கின்றன. அவை "எளிதில்" ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, அதாவது, நம்மிடம் உள்ள ஒவ்வொரு சுயநலப் போக்கிலிருந்தும் நாம் விலகி, உலகப் பற்றிலிருந்து விடுபட்டு கடவுளின் அருள்வாழ்வில் பங்கேற்க மலைப்பொழிவை ஏற்போமானால் நிலைவாழ்வு நமதாகும் என்கிறார் ஆண்டவர்.
இவ்வுலக வாழ்வில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டு நம் வாழ்வையே இழப்போமானால், நமக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மத் 16:26) என்பதுதன் இயேசுவின் கேள்வி.
இறைவேண்டல்.
மனிதகுல நல்வாழ்வுக்கு மலைப்பொழிவை அருளிய ஆண்டவரே, மலைப்பொழிவின் சாரம்சத்தை ஏற்று உமது சீடராக வாழும் வரத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452