மௌனக் குரல்... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

பெற்றோருக்கு அவள் ஒரே மகள். செல்லமாக வளர்க்கப்பட்டாள். அழகாக இருப்பாள். மூன்று வயது நடக்கும் போது சிறுமியை பள்ளியில் சேர்த்தார்கள். அவள் நன்றாகப் படிப்பாள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பாள். மற்ற மாணவிகளோடு ஓடி ஆடி விளையாடுவாள். சிரிப்பாள், பேசுவாள். அவள் முகத்தில் எப்பொழுதும் புன்னகை தவழும். இதைப் பார்த்த அவளுடைய ஆசிரியை புன்னகை பாப்பா என்று அழைப்பார்.

மகிழ்ச்சியாக வாழ்ந்த சிறுமியின் முகத்தில் சோகமும் கவலையும் காணப்பட்டது. சிரிப்பு மறைந்துவிட்டது. பேச்சும் நின்றுவிட்டது. உணவும் உறக்கமும் குறைந்துவிட்டது. கை, கால்கள் நடுங்கத் தொடங்கின. இதைக் கவனித்த பெற்றோருக்குக் கவலையும் அச்சமும் ஆட்கொள்ள, சிறுமியை மருத்துவரிடம் தூக்கிச் சென்றார்கள். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், "மனதளவில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார். உடனே மனநல மருத்துவரிடம் சென்றார்கள். அவர் சிறுமியை அன்போடும் பாசத்தோடும் உற்று நோக்கினார். வாடிய முகம், வதங்கிய உதடுகள், சோகம் நிறைந்த கண்கள், கொட்டும் கண்ணீர், "ஏன் அழுகிறாய்?" என்று மருத்துவர் கேட்டார்.

சிறுமி தயங்கித் தயங்கி பேசத் தொடங்கினாள். "என்னுடன் படிக்கும் மாணவிகள், பள்ளிக்கு வரும்போது, அவர்களுடைய அப்பா, அம்மாவோடு ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு வருகிறார்கள். ஆனால் நான் தனியாக வருகிறேன்.

அப்பா குடிகாரர். வீட்டில் அன்பும் அமைதியும் இல்லை. நான் ஒரு அனாதை" என்று கூறும்போதே, கண்களில் கண்ணீர்கொட்ட, கண்கள் மூடத்தொடங்கின. பெற்றோர்களிடம், "குழந்தை அன்புக்காக ஏங்கித் தவிக்கிறது. உங்கள் இருவரிடமும் அன்பு பாசத்தை உருவாக்குங்கள். அதையே குழந்தைக்கும் கொடுங்கள். குழந்தைக்கு அன்னையின் பெயரைச் சூட்டியிருக்கிறீர்கள். குழந்தையை ஆரோக்கிய அன்னையின் திருத்தலத்துக்குத் தூக்கிச் சென்று செபியுங்கள்" என்று கூறினார். ஆரோக்கிய

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு பெற்றோர்கள் அன்னையின் திருத்தலத்தில் நுழைந்தார்கள். சிறுமியை, ஆரோக்கியத் தாயின் பாதத்தில் கிடத்தி, "ஆரோக்கிய அன்னையே! இந்தக் குழந்தை நீர் எங்களுக்குப் போட்ட பிச்சை. இவளைக் காப்பாற்றுங்கள் தாயே!" என்று கண்ணீரோடு செபித்தார்கள். பகல் முழுவதும் அன்னையின் ஆலயத்தை விட்டு வெளியே செல்லவில்லை.

மாலை சுமார் ஐந்து மணிக்கு சிறுமியின் மூடிய கண்கள் மெதுவாகத் திறந்தன. உதடுகள் அசைந்தன.

"அப்பா! அம்மா!" என்று சிறுமி அழைக்க, சிறுமியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தாய். அன்போடும் நன்றியோடும் ஆலயத்தை விட்டுச்சென்றார்கள்.

இல்லத்தில் அன்பு நிறைந்தது! மௌனம் கலைந்தது! மகிழ்ச்சி நிரம்பியது!!!

பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான். (நீமொ 17:28)

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image