பாலனின் சிரிப்பு... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
கிறிஸ்துமஸ் பண்டிகை அருகிலிருந்தது. பண்டிகை என்றால் முதலில் செய்வது கடைக்கார வியாபாரிகள்தான். கடைகளெல்லாம் காகித மலர்கள் மற்றும் மின் விளக்குகளாலான அலங்காரங்கள். கடைவீதிகளெல்லாம் விழாக்கோலம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.
தங்கம்மாள் பண்டிகைக்குப் புத்தாடை வாங்கக் குடும்பத்தோடு வேலைக்காரி சின்னம்மாளை அழைத்துக் கொண்டு தன் காரில் புறப்பட்டாள். வேலைக்காரியையும் அவளுடைய மூன்று வயது குட்டிப்பாப்பாவையும் கடையின் முன் பகுதியிலிருந்த வரவேற்பு அறையில் அமர வைத்துவிட்டு, குடும்பத்தோடு கடையின் உள்ளே சென்றாள் தங்கம்மாள் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த குட்டிப்பாப்பா, கடையின் முன்பகுதியில் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த, குழந்தைகளுக்கான சிறிய சுடிதாரைப் பார்த்ததும், மெதுவாக நடந்து ஆடையிருந்த இடத்தை அடைந்தது. ஆடையைத் தொட்டுப் பார்த்தது. தன் தாயிடம் சென்று அதை வாங்கிக் கொடுக்கும்படி அடம்பிடித்தது. ஆனால் தாயிடம் வாங்கிக் கொடுக்க பணம் இல்லை.
இந்த நிகழ்வைக் கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு ஏழைப்பெண் கவனித்துக் கொண்டேயிருந்தாள். குழந்தையின் ஏக்கத்தையும் தாயின் இயலாமையையும் அறிந்த பணிப்பெண் இரக்கப்பட்டு, நேராக கடைமுதலாளியிடம் சென்று "ஐயா, விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் சுடிதாரை இந்த ஏழைக் குழந்தைக்காக நான் வாங்கிக் கொள்கிறேன். இதற்குரிய பணத்தை இந்த மாதம் எனது சம்பளத்திலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்றாள். புத்தாடையைப் பெற்ற குட்டிப்பாப்பா மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள்.
மறுநாள் டிசம்பர் 24-ம் நாள். அன்று இரவு கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட மக்கள் புத்தாடை அணிந்து ஆலயத்துக்குச் சென்றார்கள். திருப்பலி முடிந்தவுடன், புத்தாடை அணிந்த மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர். ஆனால், துணிக்கடையில் வேலை செய்த ஏழைப் பெண், இயேசு பாலன் பிறந்துள்ள குடிலின் முன் மண்டியிட்டு கண்களை மூடி செபித்தாள். "பாலன் இயேசுவே! இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட எனக்குப் புத்தாடை கிடையாது. பழைய ஆடையுடன் உமது விழாவைக் கொண்டாடுகிறேன். எனது தியாகத்தை ஏற்றுக்கொள்ளும்" என்று நீண்ட நேரம் செபித்தாள். அதன்பின் தன் கண்களை மெதுவாகத் திறந்தாள். குட்டிப்பாப்பா தான் வாங்கிக் கொடுத்தச் சுடிதாரை அணிந்து கொண்டு வந்து புன்னகையோடு அவள் முன் காட்சி கொடுத்தாள்.
தான் கொடுத்த பரிசை பாலன் இயேசு ஏற்றுக்கொண்டார் என்ற மகிழ்ச்சியில் குட்டிப்பாப்பாவை அணைத்துக் கொண்டாள் அந்த ஏழைப் பணிப்பெண். ஒரு ஏழை தான் மற்ற ஏழையின் கஷ்டத்தையும், தேவையையும் புரிந்துகொள்ள முடியும்.
சின்னச் சின்ன பாலன், உனக்கு என்ன வேண்டும்?
பரிசு கொடுப்போம்! பகிர்ந்து வாழ்வோம்!...
மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்;ஆனால், ஆண்டவரது திட்டமே நிலைத்து நிற்கும். (நீமொ 19:21)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
