உலகத் திருஅவையின் தலைவர்கள்: ஒன்றிணைந்த பயணம் பிளவுபட்ட உலகிற்கு நல்லிணக்கத்தின் பாதை | FABC | Veritas Tamil
வத்திக்கான், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஓசியானியா, அமெரிக்கா மற்றும் கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கத்தின் பிரதிநிதிகள், ஜூலை 21ஆம் நாள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது நிறைவிறுதிப் பேரவையில் பங்கேற்று, பிளவுபட்டுவரும் உலகிற்கு நல்லிணக்கத்தின் பாதையாக ஒன்றிணைந்த பயணம் (Synodality) அமைகிறது என்று வலியுறுத்தினர்.
பேரவையின் தொடக்க விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருஅவைத் தலைவர்கள், தங்கள் கண்டங்களில் திருஅவை எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தனர். வெவ்வேறு சூழல்களில் வாழ்ந்தாலும், "ஒன்றிணைந்த பயணம் என்பது ஒரு செயல்திட்டம் அல்ல; அது திருஅவையின் வாழ்வியல் முறையாக மாற வேண்டும்" என்ற ஒரே கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.
திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மரியோ கிரேச் அவர்கள், "கேட்கவும், பகிரவும், கற்றுக்கொள்ளவும் தான் நான் இந்தப் பேரவைக்கு வந்துள்ளேன்" என்று கூறினார்.
வேகமாக மாறிவரும் உலகில், தூய ஆவியானவர் உள்ளூர் திருஅவைகளிடம் என்ன கூறுகிறார் என்பதை கூட்டறிதலின் வழியாக உணர்வதே இன்றைய திருஅவையின் முக்கியப் பொறுப்பாகும் என்றும், ஒன்றிணைந்த பயணம் ஒன்றிப்பையும் மறைப்பணியையும் ஆழப்படுத்த அழைக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் (SECAM) தலைவர் கர்தினால் பிரிடோலின் அம்போங்கோ பெசுங்கு அவர்கள், ஆப்பிரிக்காவும் ஆசியாவும் "சகோதரக் கண்டங்கள்" என்று குறிப்பிட்டார்.
வறுமை, சமத்துவமின்மை, புலம்பெயர்வு, ஆயுத மோதல்கள், காலநிலை மாற்றம் போன்ற ஒரே மாதிரியான சவால்களை இரு கண்டங்களும் எதிர்கொள்வதாகக் கூறிய அவர், ஒன்றிணைந்த பயணம் என்பது "திருஅவையாக இருப்பதற்கான வாழ்வியல் முறை" என்று வலியுறுத்தினார்.
நற்செய்தி அறிவிப்பு, சமயங்களுக்கிடையேயான உரையாடல், இளைஞர் பணிகள், நீதி, அமைதி மற்றும் படைப்பைப் பாதுகாத்தல் போன்ற துறைகளில் ஆசியா–ஆப்பிரிக்கா திருஅவைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கவுன்சிலின் (CCEE) சார்பில் உரையாற்றிய பேராயர் கின்தராஸ் லினாஸ் க்ருஷாஸ் அவர்கள், உரோமில் நடைபெற்ற ஒன்றிணைந்த பேரவை, பல்வேறுபாடு திருஅவையை பலவீனப்படுத்தாமல், மாறாக வலுப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டியதாகக் கூறினார்.
பிளவுபட்ட உலகில் சுவர்களை எழுப்பும் மனப்போக்கை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், "மனிதரை இறைவனுடனும், மனிதரை மனிதருடனும் நல்லிணக்கப்படுத்தும் பாலமாகத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு கத்தோலிக்கத் திருஅவைகளின் தலைமைத் தந்தையர்களின் சார்பில் உரையாற்றிய ஆர்மேனிய கத்தோலிக்கத் திருஅவையின் தலைமை ஆயர் ரபேல் பெட்ரோஸ் இருபத்தொன்றாம் மினாசியன் அவர்கள், ஒன்றிணைந்தப் பயணப் பேரவையின் இறுதி ஆவணத்திலிருந்து மூன்று முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
அவை:
- கூட்டறிதலின் வழியாக ஆன்மிக மனமாற்றம்,
- திருஅவை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு,
- பல்வேறு மரபுகளையும் கலாச்சாரங்களையும் அரவணைக்கும் ஒன்றிப்பு.
"திருஅவையின் ஒன்றிப்பு என்பது அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது அல்ல; வேறுபாடுகளின் இசைவாகும்" என்று அவர் கூறினார்.
ஓசியானிய கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FCBCO) பொதுச் செயலர் அருள்பணி கிறிஸ்டோபர் டி சோசா அவர்கள், இந்த FABC நிறைவிறுதிப் பேரவையில் ஓசியானியா முதன்முறையாக பங்கேற்பதாகக் குறிப்பிட்டார். "கேட்கவும் கற்றுக்கொள்ளவும் தான் நாங்கள் வந்துள்ளோம்" என்று கூறிய அவர், பழங்குடியின மக்களிடம் கூட்டறிதல் மரபுகள் இருந்தாலும், ஒத்திசைவுப் பயணத்தில் ஆசியாவின் அனுபவம் ஓசியானியாவிற்கு பயனளிக்கும் என்றார்.
ஆசிய கிறிஸ்தவ மாநாட்டின் (CCA) பொதுச் செயலர் ஜங் யூன் கிரேஸ் மூன் அவர்கள், FABC மற்றும் CCA இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார்.
ஒன்றிணைந்த பயணத்தை வெறும் மேய்ப்புப் பணிமுறையாக அல்லாமல், செபம், கேட்பது, கூட்டறிதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிக வாழ்வியலாக FABC ஏற்றுக்கொண்டிருப்பதை அவர் பாராட்டினார்.
"ஆசியா போன்ற பல்வேறுபாடுகளும் சவால்களும் நிறைந்த கண்டத்தில், ஒன்றிணைந்த பயணம் பொருத்தமானது மட்டுமல்ல; அது இன்றியமையாத ஒன்றாகும்" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவையின் (USCCB) சார்பில் பங்கேற்ற சாக்ரமென்டோ துணை ஆயர் ரெய்னால்டோ பெர்சபால் அவர்கள், "நானும் ஒரு சக யாத்திரையாளராகவே இங்கு வந்துள்ளேன்" என்று கூறினார்.
திருஅவையின் உண்மையான புதுப்பிப்பு நிர்வாக மாற்றங்களால் மட்டும் ஏற்படாது; மாறாக, தாழ்ச்சி, ஒருவரையொருவர் கவனமாகக் கேட்பது, தூய ஆவியானவர்மீது நம்பிக்கை கொண்டு இணைந்து நடப்பது ஆகியவற்றின் வழியாகவே அது சாத்தியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கத் திருஅவையின் வாழ்விலும் திருப்பணியிலும் ஆசிய கத்தோலிக்கர்கள் ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
பல்வேறு கண்டங்களையும் திருஅவை மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருந்த போதிலும், அனைவரும் ஒரே கருத்தை வெளிப்படுத்தினர். அதாவது, பிளவுபட்ட உலகில் திருஅவை பாலங்களை அமைப்பவராக இருக்க வேண்டும் என்பதே அது.
இவ்வாறு அவர்கள் பகிர்ந்த கருத்துகள், ஒன்றிணைந்த பயணத்திற்கான மனமாற்றமும், பாலங்களை அமைக்கும் திருப்பணியும் என்ற இப்பேரவையின் கருப்பொருளை மேலும் வலுப்படுத்தியதோடு, ஆசியாவின் ஒன்றிணைந்த பயணம் ஆசியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய திருஅவைக்கும் ஒரு அரிய கொடையாக அமைகிறது என்பதையும் எடுத்துக்காட்டின.
