குடும்பமும் மன்னிப்பும் | VeritasTamil
ஒரு சில வாரங்களுக்கு முன்பாக தமிழகத்தில் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த வாரிசு படத்தின் படத்தினை பார்க்க நேர்ந்தது. நாயகனை உயர்த்தி பிடித்து கொண்டாட கொண்டாடும் படங்களை அதிகமாக நான் விரும்புவதில்லை எனினும் குடும்பம் சார்ந்த இந்த படம் எடுத்துரைத்த கருத்து "முழு நிறைவற்ற குடும்பமாக இருந்தாலும், நமக்கென்று இருப்பது ஒரு குடும்பமே" என்ற மையக்கருத்து என்னை கவர்ந்தது. குடும்பம் ஒரு கோவில் என்கின்ற பழமொழிகளோடு நம் மரபணுவில் பொதிந்துள்ள சொல்லாடல் நம் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக நிறைய இடங்களில் வெளிப்படுத்திகின்றது. கோயில் புனிதத்தை தன்னகத்தே கொண்டுள்ள அம்சம் இங்கு கோயில் பழுதடைந்தாலும், குடும்பத்தின் உறவுகளில் விரிசல் அடைந்தாலும் காலம் தாழ்த்தாமல் சீரமைப்பது அனைவருக்கும் நலம். இடிந்த கட்டடங்களை மண்ணும் கல்லும் புதுப்பொலிவாக்கிட உதவிடும். ஆனால் குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற மன காயங்களை மன்னிப்பு என்கின்ற பூவைக் கொண்டு சீரமைத்திட முடியும். நாசரேத் குடும்பங்களைப் போல வாழ்ந்திட ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பமும் அழைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் கிறிஸ்தவம் வழிபாட்டு முறையல்ல மாறாக வாழ்க்கை முறை என்று சொல்வார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக் கொண்ட மனிதர்கள் அவரை உள்வாங்கிக் கொண்டு அவரின் மதிப்பீடுகளை தன் தனிப்பட்ட வாழ்நாளில் வளரச் செய்ய குடும்பம் ஆகச்சிறந்த இடம்.
தண்ணீரை திராட்சை ரசமாகவும் நோயாளிகளை குணப்படுத்திய கிறிஸ்து செய்த மிகப்பெரிய அற்புதம் என்னவெனில் உலகத்திற்கு மன்னிப்பை கற்றுக் கொடுத்து சென்றது. ஒவ்வொரு முறையும் மன்னிப்பு ஒரு மனிதனை புதிய தொடக்கத்திற்கு அனுமதிக்கிறது; இது அழிவிலிருந்து மறு உருவாக்கத்திற்கான அழைப்பு. மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத அல்லது விரும்பாத ஒரு மனம் தனக்குத்தானே கல்லறை வெட்டிக்கொண்ட மனிதனுக்கு ஒப்பாவான். அவனின் இதயம் நெகிழ்வற்றும், வறண்ட ஒரு ஆறு போலும் காட்சியளிக்கும். அங்கு சமாதானமும் ஒற்றுமையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் தங்குவது கடினம். அவ்வகை மனிதர்கள் கண்களைத் திறந்து கொண்டே சுவற்றினை மோதிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். அவ்வகையான சூழ்நிலையில் குடும்பத்தில் முழுமையான அன்பையும் முழுமையான மனிதர் செய்யும் உணர வைப்பதும் உணர்வதும் கடினமான ஒன்று. மோசே போல பாறையை தட்டி தண்ணீர் வரவழைக்கும் ஆற்றல் இல்லாதிருந்தாலும், கல் நெஞ்சம் கொண்ட மனிதர்களின் இதயத்தை அன்பென்னும் மன்னிப்பால் மிருதுவாக்க முடியும். அதுதான் மன்னிப்பின் வல்லமை. அந்த மன்னிப்பை கடவுள் தன் மைந்தன் வழியாக உலகிற்கு கொடையாக கொடுத்துள்ளார். "தந்தையே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள்" என்று சிலுவையில் மரித்துக்கொண்டிருக்க நேரத்திலும் உலகத்திற்கு மன்னிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுத்துச் சென்றவர். இதையேதான், புனித அகுஸ்தினார் "கடவுளுடைய கருணை உன்னை முதலில் கண்ணோக்கியது, அவரை நீர் அறிந்து கொள்ளும் முன்பே," என்று கூறுவார்.
தன் குடும்பத்தை எரித்த மனிதர்களையும், தன் சகோதரியை கொன்ற மனிதர்களையும், தன் கணவன் நேர்மைக்காக துணை நின்ற காரணத்திற்காக சுட்டுக்கொன்ற மனிதர்களையும் எளிதாக கடவுளின் துணி கொண்டு மன்னித்து விட்டு அவர்களை புதிய வாழ்வுக்கு திரும்பிய கிறிஸ்தவர்கள் இந்த உலகில் ஏராளம். "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்று பாராமல் அன்பை ஆயுதமாக்கிய பல கிறிஸ்தவர்கள் நம் மத்தியில் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நம் குடும்பத்தில் நாம் மற்றவர்களின் குறைகளை ஆராய்ந்து நேரத்தை விரயமாக்குவதை விட மன்னிப்பு என்னும் சிறு புன்னகையை உதிர்த்து விட்டு செல்ல பழகிக் கொண்டால் குடும்பம் அன்பின் அடித்தளமாய் இருக்கும். நமக்கென்று இருப்பது ஒரு குடும்பமே, நாம் கொடுக்கும் மன்னிப்பும் அன்பும் நம் ரத்த சொந்தங்களுக்கு என்பதில் மனதில் இருந்தாலே மன்னிப்பு தானாக ஊற்றெடுக்கும்.