ஆடுகளைப் பேணி காக்கும் பணி ஏற்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

17 மே 2024  

பாஸ்கா 7 ஆம் வாரம் - வெள்ளி
 
தி. பணிகள்  25: 13-21

யோவான் 21: 15-19

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் உரோமை நகருக்கு அழைத்துச் செல்லப்படும் நிகழ்வுகள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதைப் பற்றி நாம் வாசிக்கிறோம்.  கடவுள் தன் பணியாளர்கள் எங்கு இருக்க வேண்டும் என்று   விரும்புகிறாரோ, அங்கே அவர்கைள அனுப்ப கடவுள் அதற்கான வழிகளை வகுப்பார்.  கடவுள் பவுல் அடிகளை உரோமைக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார். இப்போது அதற்கான வழியைக் கடவுள் ஏற்படுத்துகிறார். பவுல் அடிகள் உரோமைக்குச் சென்று அங்கு சாட்சியம் பகிர வேண்டும் என்பது இயேசுவின் வேண்டுகோளும் ஆகும் (தி.ப. 23:11)

இந்தக் காலக்கட்டத்தில், பவுல் செசாரியாவில் சிறையில் உள்ளார். அப்போது, அக்கிரப்பா என்ற அரசன் (இயேசுவைக் கொல்ல முயன்ற ஏரோது அரசனின் பேரன்) அகிரிப்பா பெர்னிக்கியு என்பவரோடு செசாரியாவிலுள்ள ஆளுநர் பெஸ்துவைச் சந்திக்க வந்தார்.


அத்தருணத்தில், ஆளுநர் பெஸ்து பவுலுக்கு எதிராக யூதர்கள் தொடுத்துள்ள வழக்கை அக்கிரப்பா அரசனிடம் எடுத்துக் கூறினார். அவர், “குற்றம் சுமத்தியவர்கள்  கொடிய குற்றம் எதுவும் பவுல் மீது சுமத்தவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்' என்பதாகும் என்றார். 

பவுல் அடிகள் ஓர் உரோமை குடிமகன் என்பதால், அவர் உரோமையில் அரசனால் விசாரிக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறார்.  ஆனால், பவுல் அடிகளை உரோமை நீதிமன்றத்திற்கு  அனுப்ப வேண்டும் என்றால் ஒரு முறையான, ஆணித்தரமான காரணம் தேவை.  ஆணித்தரமான குற்றத்தை வைத்தே பவுல் அடிகள் மீது ஒரு குற்ற அறிக்கைத் தயாரிக்க முடியும். எனவேதான் பெஸ்து செசாரியாவுக்கு வந்துள்ள அக்கிரிப்பாவிடம் பவுல் அடிகளின் நிலையை எடுத்துக்கூறி, அவரை உரோமைக்கு அனுப்ப அக்கிரிப்பாவின் உதவியை நாடினார்.   
 

நற்செய்தி.

இன்றைய நற்செய்தி,  உயிர்த்தெழுந்த இயேசு தனது சீடர்களுடன்  வாழ்ந்த காலத்தின் முடிவில் இந்த நிகழ்வு  நடைபெறுகிறது. இயேசு பேதுருவிடம் இயேசுவின் மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றி கேட்டு உறுதிப்படுத்துகிறார்.  

இயேசு தம் சீடர்களுக்கு மூன்றாவது முறை தோன்றியபோது, அவர் பேதுருவுடன் மூன்று முறை வினவுகிறார்.   ஒவ்வொரு முறையும் இயேசு பேதுருவை என்னை அன்பு செய்கிறாயா?  என்று கேட்கும் போது, “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!”  பதிலளித்தார். மேலும் இயேசு ஒவ்வொரு முறையும், "என் ஆட்டுக்குட்டிகளை மேய்," "என் ஆடுகளை மேய்" மற்றும் "என் ஆடுகளை மேய்" என்று பணிக்கிறார்.  

மேலும் இயேசு, பேதுருவைப் பார்த்து, “நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்ற கூறியதை இன்று கவனத்தில் கொள்ள அழைக்கப்படுகிறோம். 

சிந்தனைக்கு.

இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையிலான இந்த உரையாடலை நாம் கருத்தில் கொள்ளும்போது, அன்பைப் பற்றிய இயேசுவின் புரிதலானது   இன்று நாம் புரிந்துகொண்ட விதத்திலிருந்து மிகவும் வேறுபட்டது  என்பது தெளிவாகிறது. 

இயேசு பேதுருவிடம், அவர் இயேசுவுக்காக ஒரு நாள் கொல்லப்படுவார்  என்று மட்டும் சொல்லவில்லை, ஆனால் பேதுருவின் மறைசாட்சி மரணத்திற்கு இயேசு தனது ஒப்புதலை தெளிவாக வழங்கினார் என்றும் அறிகிறோம். 


பெரும்பாலும் நாம் ஒருவரை அன்பு செய்யும்போது,  அவரக்கு நேரிடவிருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.  இங்கு, இயேசு அவ்வாறு பேதுருவைக் காப்பாற்ற எண்ணவில்லை. பேதுருவை இயேசு தடுத்தும் நிறுத்தவில்லை.

மாறாக, இயேசுவின் மீது கொண்ட ஆழ்ந்த அன்பின் காரணமாக, ஒரு மறைசாடச்சியாக இறக்கவிருக்கும்  பேதுருவின் நிலைவாழ்வில்  இயேசு அக்கறைக்கொண்டார். இது பேதுரு மீது இயேசுவின் முழுமையான அன்பின் வெளிப்பாடாக இருந்தது. ‘என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!’ (மத் 5:11) என்று இயேசு கூறியது பேதுருவில் நிறைவேறுவதைக் காண்கிறோம். 

பேதுரு இயேசுவுக்காகத் துன்பப்பட்டு இறப்பார் என்று அறிந்தும், இயேசு அவர் இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு, பேதுருவிடம், “என்னைப் பின் தொடர்” என்றார்.

ஆகவே, திருஅவையில் இறைமக்களை மேய்ப்போருக்கு துன்பம் என்பது நிச்சயம். அவர்கள் மாட்சியுற துன்பத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கடவுளை மாட்சிபடுத்த அருள்பணியாளர்கள் பணியை ஏற்கிறார்கள். தங்களது மந்தையைக் காக்க உயிர்த் தியாகம் செய்ய முன் நிற்பவர்கள் இவர்கள். 

ஒருமுறை, ஒரு அருள்பணியளர் அவரது மறையுரையில், ‘அருள்பணியாளர்கள் அனாதை பிணங்கள்' என்றார். மறையுரையைக் கேட்டோர் நிலைக்குத்தி நின்றாரகள். இயேசுவுக்காகத் துன்பத்தை மனமுவந்து ஏற்பதும், பணி வாழ்வில் முன்னோக்கிச் செல்வதும் எளிதல்ல.  எனவேதான் கடவுள், ‘‘நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்!  (தி.பா. 105:15)) என்றார்  

 
நிறைவாக, இயேசுவை மூன்று முறை பேதுரு மறுதலித்தார் என்பதை நாம் அறிவோம். ஒருவகையில் பேதுருவும் நம்பிக்கை துரோகம் செய்த ஒரு குற்றவாளிதான்.  அவருக்குத்தான் இயேசு  பெரும் பொறுப்பை அளிக்கிறார். இறுதியில் இயேசுவுக்காக உடல், உள்ள ரீதியாகப் பெருந்துன்பத்தை பேதுரு ஏற்றார்.

நாமும் இயேசுவின் சீடர்களாக இருந்துகொண்டு அறிந்தும் அறியாமலும்  பல தவறுகள் செய்கிறோம்.  ஆனால்,   புனித பேதுருவைப் போல வலிமையான மனிதர்களாக, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு பணியேற்க வேண்டும். பாவிகளை இயேசு விரும்பி அழைக்கிறார். அவர்களில் நம்பிக்கை கொள்கிறார்.  ஆகவே, கடவுளின் மாட்சிக்காக நம்மைக் கையளிக்க முற்படவேண்டும்.  நமக்கும் நிலைவாழ்வு உரிமையாகும்.

சிலர் இறைப்பணிக்கு நான் தகுதியற்றவன் என்று  கூறி ஒதுங்கி வாழ்வதுண்டு. இவ்வாறு நடந்துகொள்வது மடமையாகும். பேதுரு போன்ற குறையுள்ளவர்களைதான் இயேசு தலைமை நிலைக்கு உயர்த்தினார். தப்பு செய்தவர் திருந்தப் பார்க்கனும். பேதுருவைப் போல வருந்தி வருவோரை கைத்தூக்கிவிட்டு, பணியில் அமர்த்துகிறவர் ஆண்டவர் இயேசு என்பதை மனதில் கொள்வோம். இயேசுவின் இறைமக்களை அன்பு செய்து  பெணிகாக்க அவருக்கு பணியாளர்கள் தேவை. 


இறைவேண்டல்.

உமது ஆடுகளைப் பேணி வளர்க்கப் பேதுருவைப் பணித்த ஆண்டவரே, உம்மை அன்புசெய்து நீர் பணித்தவாறே, நானும் என்னைக் கையளிக்க அருள்புரிவீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452