உலகம் சாராத வாழ்வே நமது சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
15 மே 2024
பாஸ்கா 7ஆம் வாரம் - புதன்
தி.பணிகள் 20: 28-38
யோவான் 17: 11b-19
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், புனித பவுல் எபேசு நகர் தலைவர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் விடைபெறுகிறார். தலைவர்களை தங்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். ஏனெனில், பவுல் அவர்களை விட்டு சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் திருஅவைக்குள் நுழையும் என்பது அவருக்குத் தெரியும் என்றும், அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும் .என்றும் எச்சரிக்கிறார்.
தொடர்ந்து, அவர் மூன்றாண்டு காலமாக அறிவுறுத்திப் போதித்தவற்றை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர்களை முழுமையாகக் கடவுளிடம் ஒப்படைப்பதாகவும் கூறுகிறார்.
அத்துடன், அவருடைய பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மையை வலியுறுத்துகிறார். அவர் ஒருபோதும் பொருள் ஆதாயத்தை நாடவில்லை என்றும், எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ அவர் ஆசைப்பட்டதில்லை என்றும், அவருடைய தேவைகளுக்காகவும் அவரோடு இருந்தவர்களின் தேவைகளுக்காகவும் அவர் உழைத்துச் சம்பாதித்தார் என்றும் கூறுகிறார்.
பவுல் அடிகள் "பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை” என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்று இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, நலிவுற்றோர்க்கும் ஏழைகளுக்கும் சேவை செய்வதில் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி அவர் மூப்பர்களைக் கேட்டுக்கொளுகிறார்.
பவுல் அடிகளின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடையில் தொடர்ந்து அவர்களைக் கண்ணீர் மல்க அணைத்துக்கொண்டார், அவர்களும் மீண்டும் ஒருவரையொருவர் பார்க்க மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள். பவுல் தனது பயணத்தைத் தொடரத் தயாராகும்போது, பாசமிகு துக்கத்தின் தருணமாக அது மாறியது.
நற்செய்தி.
இது இயேசுவின் "பிரியாவிடை இறைவேண்டல்" என்று அடிக்கடி குறிப்பிடப்படுவதின் ஒரு பகுதியாகும். இந்த இறைவேண்டலில், இயேசு சில முக்கிய மன்றாட்டுக்களை தந்தையின் முன் வைக்கிறார்.
முதலாவதாக ஒற்றுமை. இயேசுவும் தந்தையும் ஒன்றித்திருப்பதைப் போல தமது சீடர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மன்றாடுகிறார். இந்த ஒற்றுமை என்பது மேலோட்டமான ஒற்றுமை மட்டுமல்ல, கடவுளுடனான அவர்களின் உறவில் வேரூன்றிய ஆழமான, ஆன்மீக ஒற்றுமையாக இது அமைகிறது.
இரண்டாவதாக பாதுகாப்பு. இயேசு அவர்களுடன் இருந்த காலத்தில், தம் சீடர்களை தந்தையின் பெயரால் பாதுகாத்ததை ஒப்புக்கொள்கிறார். அவர்கள் தொடர்ந்து கடவுளின் பெயரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார். தீங்கு மற்றும் தீயவரின் செல்வாக்கிலிருந்தும் சீடர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தந்தையை இறைஞ்சுகிறார்.
மூன்றாவதாக அவரது மன்றாட்டில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இயேசு தம்முடைய மகிழ்ச்சியில் அவரது சீடர்கள் முழுமையாகப் பங்குகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவரது பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிட்டும் மகிழ்ச்சியில் சீடர்கள் திழைக்க வேண்டும் என்று அவர் விரும்பி தந்தையிடம் மன்றாடுவது இந்த இறைவேண்டலின் சிறப்பாக அமைகிறது.
நிறைவாக, இயேசு தம் சீடர்கள் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்துவதோடு, அதைத் தெளிவுப்படுத்துகிறார். தந்தை தம்மை இவ்வுலகிற்கு அனுப்பியது போல், தம்முடைய சீடர்களை உலகிற்கு அனுப்புகிறார் என்பதையும் இயேசு உறுதிப்படுத்துகிறார். ஒட்டுமொத்தமாக, இந்த இறைவேண்டல் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் நல்வாழ்வு, ஒற்றுமை மற்றும் பணிக்கான இயேசுவின் அக்கறையை பிரதிபலிக்கிறது என்பதை நாம் அறிய வருகிறோம்.
சிந்தனைக்கு.
இன்று நமது வாசகங்களில் இருவரின் பிரியாவிடை செய்திகள் இடம் பெறுகின்றன. முதல் வாசகத்தில் பவுல் அடிகளும் நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவும் தங்களது சீடர்களிடமிருந்து பிரியாவிடை பெறுகின்றனர். இதனிமித்தம் இவர்களின் நீண்ட உரையை கேட்கிறோம். தங்களைப் பின்தொடர்பவர்களை விட்டுப்பிரியும் நேரம் நெருங்கி வருவதை அவர்கள் உணர்கிறார்கள். சீடர்களின் நலன் கருதி அவர்களோடு உரையாடுகிறார்கள்.
‘உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்” (17:14-15) என்ற இயேசு கிறிஸ்துவின் அன்பான மற்றும் உரிமையான மன்றாட்டு என்னை மிகவும் கவர்ந்தது.
இயேசு, தமது மன்றாட்டில், ‘தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்’ என்று வேண்டுகிறார். தீயவரின் பொய்யும், பித்தலாட்டமும், சூழச்சியும் நிறைந்த உலகில் நாம் சிக்கிக்கொள்ளாமல், தந்தை வழி நடக்க, நமக்கு உதவியாக இந்த இறைவேடல் அமைகிறது. ஆகவே, தீயோரின் மத்தியில் கடவுளின் குரலைப் பகுத்தறிவதற்கு நாம் முற்பட வேண்டும்.
இயேசுவின் நற்செய்தியின்படி நமது வாழ்வை அமைத்துக்கொண்டால், அது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தருவதாக இருக்கும் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார். ஆனால் அப்படி வாழ்வது, சவாலான, கடினமான வாழ்வுதான். எது எப்படி இருப்பினும் இயேசு மீது நிலைப்பெயரா நம்பிக்கை வைத்து முன்னோக்கி செல்லும்போது, அது நமக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தந்தே தீரும்.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள், அவர் ஒருபோதும் பொருள் ஆதாயத்தை நாடவில்லை என்றும், எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ அவர் ஆசைப்பட்டதில்லை என்றும். அவருடைய தேவைகளுக்காகவும் அவரோடு இருந்தவர்களின் தேவைகளுக்காகவும் அவர் உழைத்துச் சம்பாரித்தார் என்றும் கூறுகிறார். ஆம், சிறந்த சீடத்துவ வாழ்வுக்கு பவுல் அடிகளின் இந்த முன்மாதிரி நமக்கு ஒளியாக உள்ளது. நமது உடல் நலமாக இருக்கும் வேளை, அடுத்தவர் உழைப்பில் பிழைப்பு நடத்த விழைவது நமக்கு மகிழ்வைத் தராது.
‘உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா!’
என்ற ‘நாடோடி மன்னன்' திரைப்பட பாடல் வரிகள் உழைப்பின் உயர்வைக் காட்டுகின்றன. உழைப்பில்தான் இன்பமும் மகிழ்ச்சியும் வெளிப்படும். இந்த உலகம் சார்ந்த குறுக்கு வழிகள் அல்ல. இதை நாம் உணரும் வகையில் இயேசு நமக்காக தந்தையிடம் மன்றாடுகிறார். அவர் சொல் வழி நடப்போம்.
இறைவேண்டல்.
‘நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல’ என்று தந்தையிடம் வேண்டிய ஆண்டவரே, உலகம் சார்ந்த வாழ்க்கையால் எனது சீடத்துவதை தொலைத்துவிடாமல் உம்மைப் பற்றி வாழும் வரம் அருள் உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452