பரிவிரக்கம் நம்மில் ஊற்றெடுக்கட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
19 பிப்ரவரி 2024,
தவக்காலம் முதல் வாரம் - திங்கள்
லேவியர் 19: 1-2, 11-18
மத்தேயு 25: 31-46
முதல் வாசகம்
லேவியர் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு நல்ல மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதற்கான முக்கிய நெறிமுறைகளை வழங்குகிறார்.
முதலாவதாக, ஆண்டவர் மோசேயை நோக்கி, நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: “தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!” என்று மக்களிடம் கூற பணிக்கிறார். அவரது படிப்பினையில்:
1.நன்னெறி
பிறருக்கு உரியதைத் திருடக் கூடாது.
பொய் சொல்லக்கூடாது, உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
மற்றவர்களை ஏமாற்றக் கூடாது.
பொய்யான சத்தியம் செய்யக் கூடாது.
கடவுளின் திருப்பெயரை வீணாகப் பயன்படுத்தக் கூடாது.
2.மற்றவர்களுக்கு மரியாதை:
பிறரை ஏமாற்றுதல் அல்லது கொள்ளையடித்தல் கூடாது.
மற்றவர்களை நியாயமாக நடத்தவேண்டும்.
பிறரை சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.
பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
2.தீர்ப்பிடுகையில்.
பாரபட்சமற்ற தீர்ப்பு கடைப்பிடிக்கப்பட வேண்டும். அவதூறு பேசக் கூடாது.
மற்றவர்களைப் பற்றிய உண்மைக்கு எதிரான தகவல்களைப் பரப்பக் கூடாது.
ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது வேண்டிய உதவியை விரைந்து செய்ய வேண்டும்.
3.உள்ளத்தில் பகை
சகோதரரை உள்ளத்தில் பகைக்கலாகாது.
உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர வேண்டும்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு இரண்டாம் வருகையின்போது அவர் மேற்கொள்ளவிருக்கும் நீதித்தீர்ப்பின் வழிமுறையை விவரிக்கிறார். ஆடுகளை மேய்ப்பவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதை ஓர் உருவகமாகப் பயன்படுத்துகிறார்.
அவரது வலதுபுறத்தில் இருப்பவர்களுக்கு (செம்மறி ஆடுகள்), பசித்தவர்களுக்கு உணவளிப்பது, தாகமுள்ளவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, அந்நியர்களை வரவேற்பது, ஆடையற்றவர்களுக்கு ஆடைகள் அணிவது, நோயாளிகளைப் பராமரிப்பது, சிறையில் உள்ளவர்களைச் சந்திப்பது போன்றவற்றின் மூலம் பரிவிரக்கம் காட்டுவதற்காக அவர்களைப் பாராட்டுகிறார். இவற்றை மற்றவர்களுக்கு செய்யும் போதெல்லாம் அவர்கள் அவருக்கே செய்கிறார்கள் என்று இயேசு கூறுகிறார்.
அவரது இடதுபுறத்தில் உள்ளவர்களிடம் (ஆடுகள்), இந்த பரிவிரக்கச் செயல்களைச் செய்யாததற்காக அவர் அவர்களைக் கண்டிக்கிறார். மற்றவர்களுக்கு உதவி செய்வதை புறக்கணித்ததால், அவர்கள் தங்கள் மேல் தண்டனைத் தீர்ப்பைத்தேடிக்கொண்டார்கள் என்கிறார்.
சிந்தனைக்கு.
கடவுள் மீதான நமது அன்பை நாம் எப்படி வெளிப்படுத்துவது? என்ற கேள்விக்கு நாம் பதில் காண வேண்டும். நமது கடவுளன்பு சுய இறைவேண்டல், சிலுவைப் பாதை தியானம், நோன்பு, சைவ உணவு, வழிபாடு ஆகியவற்றை மட்டும் சார்ந்திருக்கிறதா? அல்லது இவற்றோடு, பிறர் அன்புப் பணியைச் சார்ந்திருக்கிறதா? இன்றைய வாசகங்கள் மேற்கண்ட கேள்வி குறித்து ஆழ்ந்து சிந்திக்க அழைக்கின்றன.
தவக்காலமானது, நம் மத்தியில் வாழும் மனிதர்களில் வாழும் கடவுளின் குரலுக்கு செவிமடுக்க நம்மைப் பயிற்றுவிக்கிறது. மலை ஏறுவது கடினமாக இருந்தாலும் அதன் உச்சியில் நின்று இயற்கை அழகைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதுபோல இத்தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் தவ முயற்சி நாளைய வாழ்வுக்கு பல நன்மைகளை ஈட்டித்தரும் என்பது திண்ணம்.
ஆனாலும், என்னதான் நாம் கடும் தவத்திலும் இறைவேண்டலிலும், தர்ம செயல்களிலும் ஈடுபட்டாலும், நம்மை கர்வமும், வைரக்கியமும், பகையும், பிடிவாதக் குணமும் பற்றிக்கொண்டிருக்கும்போது, நாம் பிறரொடு நல்லுறவில் வாழ இயலாது என்பதை முதல் வாசகத்தில் கடவுள் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆண்டவர் இயேசு வாழ்ந்து காட்டிய அன்பு, பரிவு, நீதி, சமத்துவம், மன்னிப்பு மற்றும் சகோதரத்துவம் போன்ற விழிமியங்களின் அடிப்படையில் நாம் அன்றாடம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு அடித்தளமிடுவது தவக்காலம். நம்மில் இறையாட்சிதான் நமது இலக்கு. இதற்கு, இன்றைய திருஅவை வாழ்ந்து காட்டுகிற, மனிதநேயமிக்க சீடர்களை நம்பியுள்ளது.
எனவே, தவக்காலத்தை நமக்கான வசந்த காலத்தின் வாசலாக எண்ணிப்பார்க்க வேண்டும். நமக்கு வசந்த காலமானது நமது விண்ணக வாழ்வு. ஆண்டவரின் வலது பக்கமா? அல்லது இடது பக்கமா? தேர்வு நமது மனமாற்றைத்தைப் பொறுத்தது. பிறர் அன்பை மறுத்து, இறையன்பில் இணைய விழைவது பகல் கனவாகிவிடும்.
இறைவேண்டல்.
பரிவிரக்கத்தின் ஆண்டவரே, இயேசுவே, நான் வாழும் காலத்தில் எனக்கு அடுத்திருப்பவர் மீது பரிவிரக்கம் காட்டுவதில் ஆழ்ந்திருக்க துணைபுரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Thank you very much
- Reply
Permalink