சிறுவர்களின் உலகளாவிய செயல்பாடுகளைப் பாதுகாக்க அழைப்பு! | Veritas Tamil
பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பான நடைமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான திருத்தூதரக ஆணையத்தின் அக்டோபர் மாத முழுநிறை பொதுக்கூட்டம் உரோம் நகரில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை இடம்பெற்றது.
இந்த ஆணையத்தின் புதிய சட்ட விதிகள், பகுதிசார் முன்னுரிமைகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளின் நிலைத்தன்மை குறித்து இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
வன்முறைக்கு எதிரான நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கும், பயனுள்ள தடுப்பு நடவடிக்கைக் கொள்கைகளை உருவாக்குவதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பு இன்றியமையாதது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
உலகளாவிய பாதுகாப்புக் கட்டமைப்பின் அடுத்த கட்டத்தையும், உள்ளூர் திருஅவை அமைப்புகள் மூலம் அதன் செயலாக்கத்திற்கு ஆதரவளிக்கும் வழிகளையும் ஆணையம் ஆராய்ந்தது.
அதிகார வரம்பு மீறல், உளச்சான்று மீறல், ஆன்மீக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் வரம்பு மீறல் உள்ளிட்ட துறவற வாழ்வில் இடம்பெறும் பல்வேறு வகையான முறைகேடுகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கும், இத்தகைய சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதற்குத் தடையாக உள்ள காரணிகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. துறவற வாழ்வில் வன்முறையைத் தடுப்பது குறித்த கூட்டம், 2026 டிசம்பரில் உரோம் நகரில் நடைபெற உள்ளது.
மனித மாண்பைப் பாதிக்கும் பலவீனம் மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர், மேலும் திருத்தப்பட்ட பணித்திட்டத்திற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளை இணையவழி ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதும் இக்கூட்டத்தின் மற்றொரு முக்கிய முன்னுரிமையாக இருந்தது. பெற்றோர், மறைமாவட்டங்களுக்கிடையேயான அமைப்புகள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்கள் இத்தகைய சவால்களுக்கு திறம்படப் பதிலளிக்க உதவும் வகையில், எண்ணிமத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையத் தளங்களுடன் தொடர்புடைய ஆபத்துக்கள் குறித்தும் ஆணையம் ஆராய்ந்தது.
பொறுப்புக்கூறல், நிலைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் உள்ளூர் கூட்டாண்மைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மெமோரே திட்டத்தையும் இந்தக் கூட்டம் ஆய்வு செய்தது.
