ஆசியாவின் ஒவ்வொரு பங்கிலும் ஒன்றிணைந்த பயணம் வாழ்வியல் முறையாக மாற வேண்டும்: கர்தினால் ஃபிலிப் நேரி பெர்ராவ் | Veritas Tamil

ஆசியாவில் உள்ள ஒவ்வொரு பங்கு, மறைமாவட்டம், துறவறச் சமூகம் மற்றும் குடும்பங்களிலும் ஒன்றிணைந்த பயணம் (Synodality) வெறும் கலந்துரையாடலாக இல்லாமல், வாழ்வியல் முறையாக மாற வேண்டும் என்று, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவர் கர்தினால் ஃபிலிப் நேரி பெர்ராவ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஜூலை 21ஆம் நாள் தொடங்கிய FABC-யின் 12ஆவது நிறைவிறுதிப் பேரவையின் தொடக்கவிழாவில் ஆற்றிய முதன்மை உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேரவையில் பங்கேற்ற ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய கர்தினால் பெர்ராவ், இந்தக் கூட்டம் வெறும் நிர்வாகச் சந்திப்பு அல்ல; மாறாக, இறைவனின் திருவுளத்தை இணைந்து அறிந்துகொள்ளும் ஆன்மிகப் பயணம் என்று கூறினார்.

"ஆசியத் திருஅவையின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்பதற்காக மட்டும் நாம் இங்கு கூடவில்லை. மாறாக, இறைமக்களுக்காக இறைவன் விரும்புவது என்ன என்பதை இணைந்து கண்டறியவே நாம் ஒன்று கூடியுள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த பயணத்திற்கான மனமாற்றம்

"ஒன்றிணைந்த மனமாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை அமைப்பவர்களாகவும் இருப்பதற்கான திருப்பணியும்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அவரது உரை அமைந்தது. இந்தக் கருப்பொருள், கேட்பது, பங்கேற்பு மற்றும் கூட்டறிதல் ஆகியவற்றை வளர்க்கும் திருஅவையின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

ஒன்றிணைந்த பயணம் என்பது புதிய மேய்ப்புப்பணித் திட்டமோ அல்லது நிர்வாகச் சீர்திருத்தமோ அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"ஒன்றிணைந்த பயணம் முக்கியமா என்பது கேள்வியல்ல; அது நமது மறைமாவட்டங்கள், பங்குகள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், துறவறச் சமூகங்கள், குடும்பங்கள் ஆகியவற்றில் எவ்வாறு ஆழமாக வேரூன்றும் என்பதே உண்மையான கேள்வியாகும்" என்று அவர் வலியுறுத்தினார்.

சந்திப்பிலிருந்து தொடங்கும் திருத்தூதுப் பணி

திருத்தூதுப் பணி எப்போதும் சந்திப்பிலிருந்தே தொடங்குகிறது என்று குறிப்பிட்ட கர்தினால் பெர்ராவ், நத்தனியேலை "வந்து பாருங்கள்" என்று அழைத்த பிலிப்புவின் நற்செய்தி நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

நற்செய்தி அறிவிப்பு என்பது வாதங்களில் வெல்வதல்ல; மக்களை இயேசு கிறிஸ்துவை நேரில் சந்திக்க அழைப்பதே அதன் மையமாகும் என்று அவர் கூறினார்.

அதே மனப்பான்மை இந்தப் பேரவையிலும் வெளிப்பட வேண்டும் என்றும், ஆசியா முழுவதிலுமிருந்து வந்துள்ள ஆயர்கள் ஒன்றிணைந்து செபிப்பதும், ஒருவரையொருவர் கேட்பதும், கூட்டறிதலில் ஈடுபடுவதும், தங்கள் உள்ளூர் திருஅவைகளின் மேய்ப்புப் பணிச் சவால்களைப் பகிர்ந்து கொள்வதும், ஒன்றிணைந்த பயணத்தின் உண்மையான வெளிப்பாடுகள் என்றும் அவர் விளக்கினார்.

ஆசியாவில் பாலங்களாக இருக்க அழைப்பு

பல்வேறு நாகரிகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமய மரபுகள் நிறைந்த கண்டமாக ஆசியா திகழ்கிறது. இந்தப் பல்வகைமையே திருஅவைக்கு வாய்ப்புகளையும் சவால்களையும் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

"ஆசியத் திருஅவை பாலமாகவும், பாலங்களை அமைப்பவராகவும் அழைக்கப்பட்டுள்ளது" என்று கூறிய அவர், கலாச்சார மற்றும் சமய வேறுபாடுகளைத் தாண்டி உரையாடல், நல்லிணக்கம் மற்றும் ஒன்றிப்பை வளர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.

இன்றைய சவால்களுக்கு நம்பிக்கையுடன் பதிலளிப்போம்

செயற்கை நுண்ணறிவு, புலம்பெயர்வு, சுற்றுச்சூழல் சீரழிவு, சமத்துவமின்மை மற்றும் ஆயுத மோதல்கள் போன்றவை ஆசியாவை மாற்றியமைத்து வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவை கிறிஸ்தவ நம்பிக்கையை பலவீனப்படுத்துவதில்லை; மாறாக, ஒற்றுமை, இரக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி அர்ப்பணிப்பு வழியாக நம்பகமான சான்று வாழ்வை வழங்குவதற்கான அழைப்பாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.

வாழ்வில் நடைமுறைக்கு வரும் ஒன்றிணைந்த பயணம்

இந்த வாரம் முழுவதும் நடைபெறும் பேரவையில் தூய ஆவியானவரின் வழிநடத்தலுக்குச் செவிசாய்க்குமாறு அனைவரையும் கர்தினால் பெர்ராவ் கேட்டுக்கொண்டார்.

பேரவையின் இறுதி ஆவணம் வெறும் கலந்துரையாடல்களின் தொகுப்பாக இல்லாமல், ஆசியாவின் உள்ளூர் திருஅவைகள் ஒன்றிணைந்த பயணத்தை வாழ்வியல் அனுபவமாக ஏற்றுக்கொள்ள உதவும் நடைமுறை வழிகாட்டுதலாக அமைய வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதற்கும், விவாதங்கள் நடைபெறுவதற்கும், தீர்மானங்கள் ஏற்கப்படுவதற்கும் முன்னர், "இன்று ஆசியத் திருஅவையிடம் இறைவன் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இணைந்து அறிந்துகொள்வதே நமது முதன்மைப் பணி" என்று அவர் கூறினார்.

இறுதியாக, 12ஆவது FABC நிறைவிறுதிப் பேரவையின் வெற்றி அது வெளியிடும் ஆவணத்தால் அளவிடப்படாது; மாறாக, ஜகார்த்தாவிலிருந்து தங்கள் உள்ளூர் திருஅவைகளுக்குத் திரும்பும் அனைவரும் தூய ஆவியானவருக்குச் செவிசாய்ப்பவர்களாகவும், ஒருவருக்கொருவர் அதிக அர்ப்பணிப்புடன் இருப்பவர்களாகவும், ஆசியா முழுவதும் பாலங்களை அமைப்பவர்களாகவும் மாறுகிறார்களா என்பதால்தான் அதன் வெற்றி அளவிடப்படும் என்று கர்தினால் ஃபிலிப் நேரி பெர்ராவ் அவர்கள் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Tamil Survey Popup Image