60வது ஆண்டில் தடம் பதிக்கும் இளம் கத்தோலிக்க மாணாக்கர் இயக்கம் (YCS/YSM) 1966-2026| Veritas Tamil

 60வது ஆண்டில் தடம் பதிக்கும் இளம் கத்தோலிக்க மாணாக்கர் இயக்கம் (YCS/YSM) 1966-2026

திருஅவையில் மறுமலரச்சியினைக் கொணர்ந்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் மலர்ந்த ‘இன்றைய உலகில் திருஅவை’ என்ற ஏடு உருவாக முன்னோடியாகத் திகழ்ந்தவர் கர்தினால் ஜோசப் கார்டைன் அவர்கள். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இவர் தொழிலாளர்களின் அவலநிலையை மாற்ற வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் செயலாற்றினார். 

முதல் உலகப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்காகக் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது அவர் படித்த திருவிவிலியமும் கார்ல் மார்க்சின் மூலதனமும் குறைந்த கூலி, பாதுகாப்பற்ற வேலைச்சூழல், வறுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் அதற்கான அருள்வாழ்வை உருவாக்கவும் உந்தித் தள்ளியது. 1924இல் கார்டைன் இளம் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து, குழுவாகச் செயல்பட இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத் தொடங்கினார். 
தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களில் மாணாக்கர்களும் ஆர்வத்துடன், தாங்களாக முன்வந்து இணைவதைக் கார்டைன் கவனித்தார். மாணாக்கர்களின் இந்தச் சமூகப் பொறுப்புணர்வைக் கண்ட திருத்தந்தை 11ஆம் பயஸ், மாணவர்களுக்கெனத் தனியாக ஓர் இயக்கத்தை உருவாக்கக் கேட்டுக்கொண்டார். இதன் விளைவாக 1931இல் இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் (YCS) உருவானது.

1960களில் சென்னையிலும் பெங்களூரிலும் இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விளைவாக, இந்தியாவில், தமிழ்நாட்டில் 1966ஆம் ஆண்டு சனவரி 16 அன்று சென்னையில் அருள்சகோதரி. ஜான் தேவோஸ் ICM அவர்களால் இயக்கம் தொடங்கப்பட்டது. 1973இல் அருள்பணி. ஜூடு பால்ராஜ் (பாளையங்கோட்டை மறைமாவட்ட மேனாள் ஆயர்) முதல் மாநில இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் 1974இல் நெதர்லாந்தில் நடைபெற்ற உலகப் பேரவையில் மாணாக்கருடன் பங்கேற்றார். இதன் மூலம் நம் நாட்டில் அனைத்துச் சமயத்தினரையும் உள்ளடக்கும் இயக்கமாக இயக்கம் மலர்ந்து, இளம் மாணாக்கர் இயக்கமாக (YSM) உருப்பெற ஏற்பிசைவு பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். 

இவரைத் தொடர்ந்து அருள்பணி. எம்.சி. மைக்கேல், இந்திய இயக்குநராகச் செயலாற்றிய அருள்பணி. இருதயம் அவர்களுடன் இணைந்து மாணாக்கர் தலைவர்களையும் வழிகாட்டிகளையும் உருவாக்கினார். இவரது காலத்தில் 'துடிப்பு' இதழ் தொடங்கப்பட்டது. 1981இல் பொறுப்பேற்ற அருள்பணி. பாலா (பெலவேந்திரன்), குன்னூரைத் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றினார். மாநில வழிகாட்டிகள் குழுவை உருவாக்கி, இயக்கத்தின் அருள்வாழ்வை விளக்க 'புதிய பாதை புதிய பயணம்' என்ற நூலை வெளியிட்டார். 1983இல் 6வது தேசியப் பேரவையை குன்னூரில் நடத்தினார்.

1984இல் பொறுப்பேற்ற அருள்பணி. ஜெரோசின், 1990 சூன் 27 அன்று திருச்சியில் 'இளைய தீபம்' என்ற மாநில தலைமையகத்தை உருவாக்கினார். 1991இல் தஞ்சாவூரில் இயக்கத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடினார். சமூகப் பிரச்சனைகளான அணு உலை எதிர்ப்பு, பெண்ணுரிமை போன்றவற்றில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்தார். 1992இல் பொறுப்பேற்ற அருள்பணி. பாக்கியநாதன், 1994இல் 'மாற்றுக்கல்வி ஒரு தேடல்' நூலை வெளியிட்டார். 1997இல் முதல் மாநில மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார். இயக்கத்தின் கொடி, பாடல், இலட்சினை ஆகியவற்றை உருவாக்கினார். 1998இல் பொறுப்பேற்ற அருள்பணி. பெரியநாயகம், 2000ஆம் ஆண்டு சென்னையில் 2வது மாநில மாநாட்டை நடத்தினார். 2001இல் இயக்கத்தின் முதல் அமைப்புச் சட்டப் புத்தகத்தைத் தொகுத்து 
நடைமுறைப்படுத்தினார். 2002இல் பொறுப்பேற்ற அருள்பணி. இராபர்ட் சைமன், 2004இல் சட்டப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். பள்ளி முதல் மாநிலம் வரை அனைத்து நிலைகளிலும் இயக்கத்தை வலுப்படுத்தினார். 2008இல் பொறுப்பேற்ற அருள்பணி. எஸ்தாகியூஸ் காலத்தில், 'துடிப்பு' இதழ் அரசு பதிவு பெற்ற இதழாக மாறியது.

2014இல் பொறுப்பேற்ற அருள்பணி. மரியானுஸ் ஐசக் காலத்தில், 2016இல் தஞ்சாவூரில் பணிக்குழுவின் பொன்விழா கொண்டாடப்பட்டது. 2018இல் பொறுப்பேற்ற அருள்பணி. மபா. மார்ட்டின் ஜோசப், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின் இயக்கத்தைப் புத்தாக்கம் செய்தார். 2023இல் 19வது தேசியப் பேரவையையும் மாணாக்கர் பங்கேற்ற 'இளைஞர் மாமன்றத்தையும்' நடத்தினார். கோட்டாறு, குழித்துறை மறைமாவட்டங்கள் தவிர்த்து பிற மறைமாவட்டங்களில் இயக்கத்தைப் பங்குகளில் விரிவாக்குவதற்குத் வித்திட்டார். 2024இல் திருத்தப்பட்ட இயக்கச் சட்டப் புத்தகத்தின் 3ஆம் பதிப்பு வரைவை வெளியிட்டு, இயக்கத்தைப் பவள விழாவை நோக்கி வழிநடத்திச் சென்றார்.

2024இல் பொறுப்பேற்ற பணி. ஜெனிபர் எடிசன் இயக்கத்தினை பள்ளிகளில் தளர்வுற்றிருந்த இயக்கங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். துறவியர் நடத்தும் பள்ளிகளில் இயக்கத்தினை உருவாக்குவதற்கான களசந்திப்பினை மேற்கொண்டு வருகிறார். இயக்கத்திற்கு வழிகாட்டிகள் ஆணிவேர் என்பதை உணர்ந்து, வழிகாட்டிகளுக்கான சிறப்பு பயிற்சியை ஒருங்கிணைத்து இயக்கத்தின் புத்தாக்கத்திற்கு வித்திடுகிறார். ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை உருவாக்கி, பவளவிழா நோக்கிப் பயணிக்கும் இயக்கத்தின் புத்தெழுச்சிக்குப் பாங்குடன் பணியாற்றுகிறார்.

கடந்த 60 ஆண்டுகளில், ஒரு சிறிய விதையாகச் சென்னையில் விதைக்கப்பட்ட இவ்வியக்கம், இன்று பல இயக்குநர்களின் ஈகத்தாலும் வழிகாட்டிகளின் உழைப்பாலும் இலட்சக்கணக்கான மாணாக்கரின் வாழ்வில் சமூக விழிப்புணர்வையும் ஆளுமை மாற்றத்தையும் ஏற்படுத்தி, புதிய சமுதாயம் படைக்கும் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.