அழிவின் விளிம்பில் ஒரு அறிய உயிரினம் | Veritas Tamil
எறும்புத்திண்ணிகள்: உலகிலேயே அதிகமாக வேட்டையாடப்படுவது ஏன்?
உலகளவில் அதிகப்படியாக கடத்தப்படும் ஒரு பாலூட்டி இனமாக பாங்கோலின்கள் என்று சொல்லக்கூடிய எறும்புத்திண்ணி உள்ளது.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாங்கோலின் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்த பாங்கோலின்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது.
பாங்கோலின் தினத்தையொட்டி ட்ராஃபிக் என்ற அமைப்பு மற்றும் உலக வன உயிர் நிதியம் - இந்தியா ஆகியவை இணைந்து பாங்கோலின்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டது. அதில் 2018 - 2022ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் பதிவான 342 சம்பவங்களில் 1,203 பாங்கோலின்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 - 2022 ஆண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 24 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் பாங்கோலின் கடத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆய்வின்படி ஒடிஷாவில் அதிகப்படியாக (154 பாங்கோலின்கள்) கடத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 47 பாங்கோலின்கள் கடத்தப்பட்டுள்ளன.
மனிதர்களுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்காத இந்த விலங்கு மனிதர்களால் அதிகம் வேட்டையாடப்படுவதும் கடத்தப்படுவதும் ஏன்?
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தகவல்படி 2000-2019 ஆம் ஆண்டுக்குள் சுமார் 9 லட்சம் பாங்கோலின்கள் கடத்தப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு சுமார் 1.9 கோடியாகும்.
இந்த பாங்கோலின் என்று சொல்லக்கூடிய எறும்புத்திண்ணியின் உடம்பில் செதில்களை கொண்டிருக்கும்.
உலகில் செதில்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு பாலூட்டி இனமாக இந்த பாங்கோலின் உள்ளது.
இந்த செதில்கள் கெரோட்டீனால் ஆனது. மனிதர்களின் நகங்களில் இந்த கெரோட்டீன் காணப்படுகிறது.
நீண்ட நாக்குகளை கொண்ட இவை எறும்புகளையும் பூச்சிகளையும் உண்ணுகிறது.
ஆசியாவில் நான்கு வகையான பாங்கோலின்கள் உள்ளன. அவை இந்திய பாங்கோலின், பிலிப்பைன் பாங்கோலின், சுண்டா பாங்கோலின் மற்றும் சீன பாங்கோலின், ஆப்ரிக்க மத்திய ரேகை பகுதியில் உள்ள மழைக்காடுகள் மற்றும் புல்வெளிகளில் காணப்படும் ராட்ச பாங்கோலின்கள் 1.8 மீட்டர் நீளமும் 30 கிலோ எடையும் கொண்டவை. இந்த பாங்கோலின்கள் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் எறும்புகளை உண்ணக்கூடியவை.
பாங்கோலின்களின் நாக்கு அதன் தலை மற்றும் வாலைக் காட்டிலும் நீளமானது. எறும்புகளை உண்ணும்போது எறும்புகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாங்கோலின்கள் தனது காது மற்றும் மூக்கை வலுவான தசைகளை கொண்டு மூடிக்கொள்ளும். இந்தியாவில் இந்திய பாங்கோலின் மற்றும் சீன பாங்கோலின் இனங்கள் காணப்படுகின்றன.
இந்திய பாங்கோலின் வங்கதேசம், இந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
இந்தியாவில் இந்த வகை ஆந்திரா, அசாம், பிகார், சத்திஸ்கர், கோவா, குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேஷ், மகராஷ்டிரா, மேகாலாயா, ஒடிஷா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தராகண்ட், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் காணப்படுகிறது.
பாங்கோலின்கள் ஏன் வேட்டையாடப்படுகின்றன?
பாங்கோலின்கள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் இதற்கான தேவை அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் சிகிச்சையிலும் பாங்கோலின்கள் பயன் தருவதாக நம்பப்படுகிறது. ஆனால் இதை நிரூபிக்க எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாங்கோலின் இறைச்சி, ருசியான ஒரு உணவாக கருதப்படுவதால் அதற்கு அதிக தேவை உள்ளது. பல ஆசிய நாடுகளில் இது இறைச்சிக்காகவே வேட்டையாடப்படுகிறது.
தாய்லாந்து, உகாண்டா மற்றும் ஹாங் காங் ஆகிய நாடுகளில் இந்த பாங்கோலின்கள் அதிகம் கடத்தப்படுகின்றன.
எனவே தாய்லாந்தை சேர்ந்த தாய் வாங் குயேன் என்ற நபர், பாங்கோலின் பாதுகாப்பிற்காக பணிபுரிந்து வருகிறார். அவர் 2014ஆம் ஆண்டு 'வியட்நாம் வைல்ட் லைஃப்' எனும் அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் அவர் இதுவரை 1500 பாங்கோலின்களை மீட்டுள்ளார்.
பாங்கோலின்களின் வாழ்க்கை முறை
இந்த பாங்கோலின்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பதை தெரிந்து கொள்ள உகாண்டாவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன.
இந்த கேமராக்கள் மூலம் குட்டி பாங்கோலின்கள் அதன் தாயின் பின்னே அமர்ந்து சவாரி செய்வது தெரிகிறது. அதேபோல பெரிய பாங்கோலின்கள் மரத்தில் ஏறுவதும் அந்த கேமராக்களில் கண்டறியப்பட்டுள்ளது.
ராட்சத பாங்கோலின்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் உகாண்டாவில் உள்ள ஜிவா பல்லுயிர் பூங்காவில் பதிவு செய்யப்பட்டது. இங்கு இந்த விலங்குகள் காண்டாமிருகங்களுடன் வாழ்கின்றன. இவற்றை கடத்தல்காரர்களிடமிருந்து காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உகாண்டா வன உயிர் பாதுகாப்பு திட்டம் மற்றும் உகாண்டாவின் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நிதி திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து பணிபுரியும் ஸ்டூவார்ட் நிக்சன், இதற்கு முன்பு பாங்கோலின்களின்கள் செய்கைகள் அதிகம் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த பாங்கோலின் குறித்த அதிகப்படியான தகவல்கள் இல்லை என்றும் தற்போது ராட்சத பாங்கோலின்களின் இருப்பிடங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிக்சன் தெரிவித்தார்.
எத்தனையோ முயற்சிகளுக்கு பிறகும் கடுமையான சட்டங்களுக்கு பிறகும் பாங்கோலின்களின் கடத்தல்களை அரசாங்கங்களால் தடுக்க முடியவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மோத் நகரில் உள்ள விஞ்ஞானிகள் பாங்கோலின்களின் சட்ட விரோத கடத்தல்களை தடுக்க வழிகளை கண்டறிந்தனர்.
பாங்கோலின்களின் செதில்களில் உள்ள கைரேகையை கண்டறிந்து கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியும் வழிதான் அது.
சிறிய கிட்டின் உதவியோடு பாங்கோலின் செதில்களில் இருந்து கைரேகையை கண்டறிய முடியும்.
இதன்மூலம் காவல்துறையினர் கடத்தல்காரர்களை கண்டறியலாம்.
- அருள்பணி வி. ஜான்சன்
(Sources from BBC News)