ஆண்டவரின் இறைவேண்டலில் மனவுறுதி | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 27-ம் வாரம்-புதன்
07 அக்டோபர் 2026
கலாத்தியர்   2: 1-2, 7-14
லூக்கா 11: 1-4


முதல் வாசகம்.


இவ்வாசகத்தில், பவுல் அடிகள், கடவுள் அவருக்கு அளித்த   வெளிப்பாட்டின்படி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு எருசலேமுக்குச் சென்று, அவர் யூதர் அல்லாத புறவினத்தாருக்கு அறிவித்துவரும் நற்செய்தியை அங்குள்ள தலைவர்களிடம் எடுத்துரைக்கிறார். அவருடைய மறைபரப்புபணியானது இறைவனின் அருளால், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


பேதுருவிடம் யூதர்களுக்கான நற்செய்தி அறிவிப்புப் பணியும் பணியும், பவுலிடம் புறவினத்தாரிடையே நற்செய்தி அறிவிப்புப் பணியும் ஒப்படைக்கப்பட்டதை திருத்தூதர்களை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக, திருஅளையின்  தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா (பேதுரு), யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஆதரவு அளித்து வரவேற்றனர் என்கிறார் பவுல். மேலும், அவர்கள் ஒருவரையொருவர் மதித்து, ஏழைகளை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திதை கலாத்தியருக்கு எடுத்துரைக்கிறார்.  


ஆனால் அந்தியோகியாவில் பேதுரு முதலில் புறவினத்தாருடன் அமர்ந்து உணவருந்தியபோதும், பின்னர், அங்கு வந்து சேர்ந்த  எருசலேம் திருஅவையின் ஆயாராக இருந்த   யாக்கோபின் ஆள்களுக்கு அஞ்சி, பேதுரு உறவினத்தாருடன் உணவு உண்பதை நிறுத்திவிட்டார். எனவே பேதுருவோடு, சில யூதர்கள்   விலகினார்.   எனவே பவுல், அனைவருக்கும் முன்பாக பேதுருவைக் கண்டித்து, நற்செய்தியின் உண்மைக்கு ஏற்ப நேர்மையாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தயில்,  இயேசு தம் சீடர்களுக்கு எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்த தை லூக்கா விவரிக்கிறார். சீடர்கள், “ஆண்டவரே, எங்களுக்கும் இறைவேண்டல் செய்ய கற்றுக்கொடுங்கள்” என்று கேட்டபோது, இயேசு ‘ஆண்டவருடைய இறைவேண்டலை’  அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்.


இயேசு முழுமையாகத் தெய்வீகமானவராக இருந்தபோதிலும், மனிதராகிய நிலையில் அவர் அருளைப் பெறுவதற்காக அல்ல, தந்தையின்மீது தமக்கிருந்த முழுமையான  கீழ்ப்படிதலையும் மகனுக்குரிய அன்பையும் வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி இறைவேண்டலில் தந்தையோடு இணைந்தார். இன்று அவர் காட்டிய எடுத்துக்காட்டானது, எவ்வாறு நாம் எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதையும், நாம் வழிபடும் கடவுள் யார் என்பதையும் நமக்குக் காட்டுகிறது.  

இயேசு இரு பிரிவுகள் கொண்ட இறைவேண்டலை முன்மொழிகிறார். இவை இரண்டுமேயிது  தந்தையை நோக்கி மன்றாடும் வேண்டல்கள். இது ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்று தொடங்குகிறது. இதனால், நமக்கு விண்ணகத் தந்தை ஒருவரே. நாம் அனைவரும் அவரது பிள்ளைகள் எனும் பேருண்மையை இயேசு முன்வைக்கிறார். இயேசு கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் அவரில் ‘சகோதர சகோதரிகள்’ என்பதை இயேசு இங்கே வலியுறுத்துகிறார். புறவினத்தாரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை முதல் வாசகத்தில் பவுல் எடுத்துரைக்கிறார்.  


முதல் பிரிவு: கடவுளின் மாட்சிமை (முதல் 3 வேண்டுதல்கள்)  அவை: 

1.    "உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!"   கடவுளின் திருப்பெயர் உலகில் உள்ள எல்லா மக்களாலும் தூய்மையாகக் கருதப்பட்டு, போற்றப்பட வேண்டும் என்ற வேண்டுதலாக இது அமைகிறது. அடுத்து,  "உமது ஆட்சி வருக!" என்பது, உலகில் அமைதி, நீதி, அன்பு மற்றும் மனிதநேயம் பெருகி, கடவுளின் உண்மை, நீதி, நேர்மை கொண்ட ஆட்சி நம் இதயங்களிலும் உலகிலும் மலர வேண்டும் என்று மன்றாட இயேசு அழைக்கிறார். முன்றாவது, "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!" என்பதில், விண்ணகத்தில் உள்ள தூதர்கள் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது போல, பூமியில் உள்ள அவரது பிள்ளைகளாகிய  நாமும் சுயநலமின்றி கடவுளின் விருப்பப்படி வாழ வேண்டும் என்று மன்றாட அழைக்கிறார். 


2.    இரண்டாம் பிரிவு: மனிதனின் தேவைகள் (அடுத்த 4 வேண்டுதல்கள்)

இந்தப் பகுதியில்,  மனிதர்களாகிய நமக்குத் தேவையான அன்றாட உணவு, மன்னிப்பு மற்றும் பாதுகாப்புக்காக தய்தையிடம் மன்றாடுமாறு படிப்பிக்கிறார்.
 
"எங்களுக்குத் தேவையான அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும் " என்பதில், 
 உடலுக்குத் தேவையான அன்றாட உணவு, உடை, இருப்பிடம், உடல் நலம் போன்ற   வாழ்வாதாரங்களுக்காக  மன்றாடி கேட்க வேண்டும் என்று போதிக்கிறார். 
 
"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் “ என்பதில், மற்றவர்கள் நமக்குச் செய்த தவறுகளை நாம் முழு மனதோடு மன்னித்தலின் இன்றியமையாதத்  தன்மையை இந்த மன்றாட்டில் இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார்.  


தொடரந்து,  "எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் " என்ற மன்றாட்டை வைக்கிறார் ஆண்டவர். சோதனை என்பது சாத்தானிடமிருந்து வரவல்லது, கடவுளிடமிருந்து அல்ல. எனவே,  தீய வழிகளில் செல்லத் தூண்டும் உலகச் சோதனைகளையும், பாவ சூழ்நிலைகளையும் தாங்கி நிற்கும் மன வலிமையை வழங்குமாறு கடவுளை நாம் மன்றாட வேண்டும் என்கிறார். நிறைவாக, "தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் " எ்ன்று மன்றாடுவதன் வழி, நம்மை சூழ்ந்திருக்கும், கடவுளோடான உறவிலிருந்து நம்மை பிரிக்க நினைக்கும் சாத்தான், பாவம், தீமை மற்றும் ஆன்மாவை அழிக்கும் ஆபத்துகளிலிருந்தும் கடவுள் நம்மைப் பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்று இறைஞ்சிட ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார்.  

கடந்த ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளாக நம்மிடையே நிலைத்துள்ள, தலைமுறை தலைமுறையாக ஒப்படக்கப்பட்டு வரும்  இந்த இறைவேண்டல் ஒரு மாதிரி மட்டுமல்ல,  இதுவே நம் நம்பிக்கைக்கும், தந்தையோடு கொண்ட உறவுக்கும்,  மற்றும் உண்மை கிறிஸ்தவ வாழ்வுக்கும் வழிகாட்டியாகவும் அமைகிறது.  இத்தகைய  எளிய பொதுவுடமை கொண்ட போதனையை இதுவரை யாரும் இவ்வுலகில் தந்ததில்லை. சாத்தான் (சுயநலம், பேராசை, மனுக்குலத்தில் வேற்றுமை போன்றவை) நம்மை அணுகவிடாமல் பெரும் தடை சுவராகவும் இருந்திட  இந்த  இறைவேண்டல் நமக்குத் தரப்பட்டுள்ளது. 


இறைவேண்டல். 


விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்களுக்குத் தேவையான அன்றாட உணவை,
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.


ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image