இறையாட்சி நமக்குள்ளேயே இருக்கிறது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
12 நவம்பர் 2026
பிலமோன் 7-20
லூக்கா 17: 20-25
இறையாட்சி நமக்குள்ளேயே இருக்கிறது!
முதல் வாசகம்.
கொலோசை நகரிலிருந்த முக்கிய கிறிஸ்தவரும் செல்வருமான பிலமோன் என்பவரிடம் ஒனேசிம் என்பவர் அடிமைத் தொழில் செய்து வந்தார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் எஜமான் பிலமோனிடமிருந்து தப்பியோடிவிட்டார். இதற்கு உரோமைச் சட்டப்படி மரணதண்டனை கொடுக்கலாம். பவுல், ஒனேசிமுவை மன்னித்து ஒரு சகோதரராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிலமோனுக்கு பரிந்துரைக்கிறார்.
பிலமோனிடமிருந்து தப்பி வந்த ஓனேசிமு, பவுலின் வழியாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனமாற்றம் அடைந்தார். எனவே, அவரை இனிமேல் ஓர் அடிமையாகப் பார்க்காமல், கிறிஸ்துவில் அன்பிற்குரிய சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு பவுல் வலியுறுத்துகிறார். மேலும், ஒனேசிமுவால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கான பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் பவுல் கூறுகிறார்.
இதன் வழியாக, கிறிஸ்தவ வாழ்வில் அன்பு, மன்னிப்பு, மனமாற்றம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மிகவும் முக்கியமானவை என்பதை பவுல் எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்திப் பகிர்வில், இறையாட்சி பற்றிய விளக்கத்தை இயேசு எடுத்துரைக்கிறார். இது பரிசேயரின் கேள்விக்குப் பதிலாக அமைகிறது.
இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டபோது, இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் அடையாளங்களுடன் வருவதில்லை என்றும், அது நம்மிடையே இருக்கிறது என்றும் இயேசு கூறுகிறார். இறையாட்சி என்பது கடவுளின் அன்பு, நீதி, அமைதி ஆகியவை மனிதர்களின் உள்ளத்திலும் வாழ்விலும் வெளிப்படுவதாகும்.
மேலும், மானிட மகன் பல துன்பங்களை அனுபவித்து, மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று இயேசு எடுத்துரைக்கிறார். அவருடைய வருகை மின்னலைப் போல அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். எனவே, வெறும் வெளிப்புற அடையாளங்களைத் தேடாமல், இயேசுவின் போதனைகளின்படி வாழ்ந்து, இறையாட்சியின் மதிப்பீடுகளை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இயேசு தெளிவுப்படுத்துகிறார்.
சிந்தனைக்கு.
பரிசேயர்களும், அக்காலத்தில் வாழ்ந்த பல யூதர்களைப் போலவே, இறையாட்சி வியப்பூட்டும் வகையிலும், வெளிப்படையாகவும், அரசியல் மாற்றத்தின் வழியாகவும் வரும் என்று எதிர்பார்த்தனர். தாவீது அரசரின் வழிமரபில் தோன்றும் மெசியா (மீட்பர்), உரோமையரின் ஆட்சியிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்து, அவர்களுக்கு மீண்டும் நாட்டின் விடுதலையையும், எதிரிகளை வெற்றிகொள்ளும் மகிமைமிக்க மண்ணுலக அரசையும் ஏற்படுத்துவார் என்று அவர்கள் பெரிதும் எதிர்ப்பாரத்து காத்திருந்தனர். இதில் நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், அவர்களுடைய எதிர்பார்ப்பு முழுவதும் இவ்வுலக வாழ்வையும் அரசியல் விடுதலையையும் சார்ந்ததாக இருந்ததே தவிர, ஆன்மீக வாழ்வை அல்லது மறுவாழ்வைச் சார்ந்ததாக இருக்கவில்லை.
மேலும், கூர்ந்து கவனித்தால், அவர்களின் கேள்வி வெறும் ஆர்வத்தினால் எழுப்பப்பட்ட ஒன்றாக மட்டும் இருந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, அது இயேசுவைச் சோதிப்பதற்காகவோ அல்லது அவரைச் சிக்கலில் மாட்ட வைப்பதற்காகவோ கேட்கப்பட்ட கேள்வியாக இருந்திருக்கலாம். இயேசு அவர்களின் அறியமையைத் தெளிவுப்படுத்துகிறார். ஆம், இறையாட்சி என்பது மண்ணுலகக் கண்களால் பார்த்து அறிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல என்றும், அது புவியியல் அல்லது அரசியல் அடிப்படையில் “இதோ இங்கே” அல்லது “அதோ அங்கே” என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றும் அல்ல என்றும் விவரிக்கிறார்.
முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல் பிலமோனிடம் ஒனேசிமுவை ஓர் அடிமையாகப் பார்க்காமல், அன்பிற்குரிய சகோதரராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். கிறிஸ்தவ வாழ்வில் மனிதர்களைப் பிரிக்கும் வேறுபாடுகளுக்கு இடமில்லை. அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம் ஆகியவையே நமது உறவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ஏனெனில், இறையாட்சி என்பது அதிகாரம், அடக்கி ஆள்தல், ஆடம்பரம், அரசியல் வெற்றி ஆகியவற்றில் அடங்கியதல்ல. மாறாக, அன்பு, நீதி, அமைதி, மன்னிப்பு, இரக்கம் ஆகிய நற்பண்புகள் வழியாக இறையாட்சி நம் வாழ்வில் வெளிப்படுகிறது என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும்.
மீட்பராகிய இயேசு நம்மில் வாழ்கிறார் என்றால், இறையாட்சி நம்மில் உதித்துள்ளது என்பது பொருள். இறையாட்சி எங்கோ தொலைவில் இருக்கும் ஒன்றல்ல; நமது அன்பான செயல்கள் வழியாக இன்றே நம்மிடையே மலர வேண்டிய ஒன்றாகும். ஆம், இறையாட்சி விண்ணகத்தில்தான் உள்ளது என்று எண்ணுவது தவறு. அது தமது இதயங்களிலும், நாம் வாழும் இந்த மண்ணகத்திலும் உள்ளது.
"இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது" என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார் (லூக்கா 17:21). அதாவது, அன்பு, நீதி, அமைதி, சமத்துவம் ஆகிய நல்மதிப்பீடுகள் எங்குச் செயல்படுகின்றனவோ, அங்கு இறையாட்சி நிலவுகிறது என்பதை நாம் அறிந்துணர வேண்டும். ‘இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது’ (உரோ 14: 17) என்கிறார் பவுல், எனவே, நாம் நீதியையும் உண்மையையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து, இறையாட்சி நம் நடுவில் செயல்படச் செய்து, இறையருளை நிறைவாகப் பெற முற்படுவோம்.
இறைவேண்டல்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
