ஆழத்தில் வலைவீசி உன்னைக் கண்டெடுக்கத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 22 வியாழன்
I: கொலோ:1: 9-14
II: திபா: 98: 2-3, 3-4. 5-6
III: லூக்: 5: 1-11
ஒரு மனிதனின் மனம் ஆழ்கடலுக்குச் சமம். அம்மனிதனாலேயே அவ்வாழ்கடலின் ஆழத்தை அறிந்துகொள்ள இயலாது. அவ்வாறெனில் பிறர் அறிந்து கொள்வது இன்னும் கடினமன்றோ. நம் வாழ்வில் பலமுறை பிறர் நம்மை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நம்மைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ளவில்லை என சோர்ந்து விடுவதுண்டு. ஆனால் நம்மைப்பற்றி நாம் எவ்வளவு அறிந்து வைத்துள்ளோம்? இன்று இயேசு நம் மனத்தின் ஆழத்தில் வலைவீசி நம்மையே கண்டெடுக்க அழைக்கிறார்.
ஒரு இளைஞன் ஒருவர் மீது மிகுந்த பாசத்தை வைத்திருந்தார். அந்த இளைஞனின் பாசம் உண்மையானதாகவும் ஆழமானதாகவும் இருந்தது. ஆனால் மற்றவரோ மேலோட்டமாக பாசம் வைத்திருந்தார். இதையறியாமல் பாசம் வைத்திருந்தவர் தங்கள் இருவருக்குமிடையே ஆழமான பாசம் இருந்ததாக எண்ணி பெருமை பாராட்டினார். அவரின் பாசம் தான் உலகிலேயே சிறந்தது என்று கூட நினைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த பாசம் உண்மையானதாக இருந்தாலும் பாசம் வைக்கப்பட்ட அந்த நபரின் பாசம் உண்மையற்றத்தாய் இருந்தது. அதை அறியும் நேரம் வரும்போது மனக்காயத்திற்கு உள்ளானார். கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்பொழுதுதான் அவர் தெளிவை புரிந்துகொண்டார் இந்த உலகத்தில் முதலில் தன்னுடைய வாழ்வை சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று. அவரின் பாசம் உண்மையானதாக இருந்தாலும் பாசம் வைக்கப்பட்ட அந்த நபரின் மனநிலையை சரியாக புரியாதது மேலோட்டமான புரிதலை சுட்டிக்காட்டுகிறது. கண்ணீர் விட்டு அழுத அந்த நபர் தன்னை மனதை அதன் ஆழத்தை புரிந்து கொண்ட பிறகு தன் வாழ்வை சீரமைக்கத் தொடங்கினார். தேவையற்ற உறவினை நினைத்து மனம் வருத்தப்படாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு தன் இலட்சியத்தை நோக்கி பயணமானார். அதன் பிறகு தன் வாழ்வில் யார் அவரை ஏளனமாகவும் அவரது அன்பை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ அவர்களுக்கு முன்பாக சாதனைகள் பல புரிந்து மிகச்சிறந்த மாமனிதராக உயர்ந்தார்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் பல நேரங்களில் தேவையற்றவற்றை நினைத்து வருந்துகிறோம். உண்மையில்லாத உறவினைப் பற்றி வருந்துகிறோம்.பிறரின் புரிதலின்மையையும் விமர்சனங்களையும் எண்ணிக் கலங்குகிறோம். இவை அனைத்தும் தவறு என்ற சிந்தனையை அந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மேலோட்டமான வாழ்வு வாழ்ந்து மேலோட்டமாக தங்களுடைய பணியினை செய்த சீமானை சற்று ஆழத்திற்கு செல்லுமாறு இயேசு அழைப்பு விடுத்தார். "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, ``ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அதன் விளைவாக மிகுந்த மீன்ப்பாட்டை அவர்கள் பெற்றார்கள். அத்தோடு மட்டுமல்ல சீமோன் தன்னுடைய நிலையை உணர்ந்து ததன் முன் நிற்பது ஆண்டவர் என்பதையும் அறிந்து ஆண்டவரே நான் பாவி என அறிக்கையிட்டார்.
ஆம் இயேசுவின் வார்த்தையைக் கடைபிடித்ததால் ஆழமாக தன்னை உணர்ந்தார் சீமோன் பேதுரு.
நம்முடைய அன்றாட வாழ்வில் மேலோட்டமான வாழ்வு வாழாமல் ஆழமான வாழ்வு வாழ இயேசுவின் சொல்படி நாம் நடக்க வேண்டும். நாம் வாழுகின்ற கிறிஸ்தவ வாழ்வும் இம்மனித வாழ்வும் நிறைவுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் இயேசு கற்றுத்தந்த மதிப்பீடுகளை உள்வாங்கி ஆழமான வாழ்வு வாழவேண்டும்.ஆழமான வாழ்வு என்பது கடவுளின் துணையோடு நம்மையே அறிந்து வாழ்வது. இவ்வுலகம் சார்ந்த சிற்றின்பகளுக்கும் மாயக் கவர்ச்சி களுக்கும் நிலையற்ற உறவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவர் இயேசுவை பற்றி படித்து அவர் வழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது நம்மை உலகமே கைவிட்டாலும் நம் ஆண்டவர் இயேசு நம்மைக் கைவிடமாட்டார். எனவே இன்றைய நாளில் சீமோன் ஆழத்திற்கு சென்று மீன் என்ற ஆசீர்வாதத்தை பெற்றது போல, நாமும் ஆண்டவரின் ஆசீர்வாதத்தை நிறைவாகப் பெற இயேசுவின் வார்த்தைகளை கேட்டு ஆழமாகச் சென்று நம்மையே கண்டெடுத்து சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ்ந்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
ஆழத்திற்கு கொண்டு போங்கள் என்று கூறிய இயேசுவே! எங்களுடைய அன்றாட வாழ்வில் உம்முடைய வார்த்தைகளைக் கேட்டு எமக்குள்ளேயே அழமாக வலைவீசி உம் பார்வையில் எம்மைக் கண்டெடுத்து உமக்குச் சான்றாக வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்