தாழ்ச்சி நிறைந்த வாழ்வு உயர்வைத் தரும் | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பெதுக்காலம் வாரம் 7 செவ்வாய்
I: சீஞா: 2: 1-11
II: திபா 37: 3-4. 18-19. 27-28. 39-40
III: மாற்: 9: 30-37
நம்முடைய மனித வாழ்க்கையில் தாழ்ச்சி என்ற பண்பு மிகவும் முக்கியமான ஒன்று. அகந்தை வானதூதரை கூட சாத்தானாக மாற்றியது. தாழ்ச்சி நிறைந்த மனநிலை தான் உண்மையான நிறைவைத் தரும். கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் "யார் பெரிய ஆளு " என்று தங்களுக்குள்போட்டியிட்டு கொள்வார்கள்.ஒரு சில நேரங்களில் அந்த குறிப்பிட்ட சிறுவனின் உடலமைப்போ பேச்சுத் திறமையோ குடும்ப பின்னணியோ அவனை பெரியவனாகக் காட்டும். எதற்கு இந்த போட்டி அந்த சிறுவர் மத்தியில் இருக்கிறதென்றால் பெரியவராக யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவரின் சொல்லை தான் பிறர் கேட்க வேண்டும்.
இன்றைய நற்செய்திலும் கூட இப்படிப்பட்ட சிறுபிள்ளைத்தனம் தான் சீடர்கள் மத்தியில் காணப்படுகிறது. தங்களுள் பெரியவர் யார் என்பதை இயேசுவோடு பயணிக்கும் பொழுது ஒருவர் மற்றவரோடு வாதாடத் தொடங்கினர்.எனவே தான் ஆண்டவர் இயேசு மிக அருமையாக "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும்
அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்' '' (மாற்கு 9:35) என்று கூறியுள்ளார்.
தாழ்ச்சி நிறைந்த மனநிலை இறைவனுடைய வழியில் வழிநடத்தும். அன்னை மரியாள் தன்னையே தாழ்த்தினார். எனவே அவர் இறைவனின் தாயாகவும் உலகத்தின் தாயாகவும் உயர்த்தப்பட்டார். திருமுழுக்கு யோவான் தன்னையே தாழ்த்தினார். எனவே மனிதராய் பிறந்தவருள் திருமுழுக்கு யோவானைப் போல உயர்ந்த மனிதன் யாருமில்லை என்று இயேசு புகழும் அளவுக்கு உயர்த்தப்பட்டார். நூற்றுவத் தலைவர் இயேசுவுக்கு முன்பாக தன்னையே தாழ்த்தினார். எனவே அவர் இயேசுவால் புகழப்பட்டார். ஆம் அன்புக்குரியவர்களே! தாழ்ச்சியுள்ள மனிதர்கள் ஒருபோதும் கடவுளால் கைவிடப்பட மாட்டார்கள்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பணம் பட்டம் புகழ் பெயர் வந்தாலும் தாழ்ச்சியான உள்ளத்தோடு வாழுகிற பொழுது, நாம் இம்மையிலும் மறுமையிலும் கடவுளின் பார்வையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும்.
ஆண்டவர் இயேசு ஒரு கிறிஸ்தவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அருமையாக நற்செய்தியில் கூறியுள்ளார். முதலாவதாக "ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,
'இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும்
என்னையே ஏற்றுக்கொள்கிறார்...' என்றார்'' (மாற்கு 9:36-37). தாழ்ச்சியான உள்ளத்தோடு இந்த சமூகத்தில் அடையாளம் காணப்படாத மக்களை ஏற்றுக் கொண்டுஅன்பு செய்யவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இரண்டாவதாக ஆண்டவர் வெற்று போதனை மட்டும் செய்யாமல் போதித்ததைத் தன் வாழ்வில் வாழ்ந்து காட்டினார். "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் " (மாற்: 9:35) என்று கூறியுள்ளார். எனவே தான் இராவுணவின் போது இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி பிறருக்கு தொண்டாற்றி தாழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற வாழ்வியல் பாடத்தை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நம்மை பெரியவராக மற்றவர்கள் மத்தியில் உயர்த்த நினைக்காமல், கடவுளுக்கு முன்பாகவும் பிறருக்கு முன்பாகவும் தாழ்ச்சியான உள்ளத்தோடு பணிவிடை செய்யும் மனநிலையில் சிறப்பாக வாழ்வில் பயணிக்க தேவையான அருளை வேண்டுவோம். அகந்தை அலகையின் பாதையில் வழி நடத்திச் செல்கிறது. தாழ்ச்சி இறைவனின் பாதையில் வழிநடத்திச் செல்கிறது. தாழ்ச்சியின் மனநிலையைப் பெற்றிடத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பின் இறைவா! தாழ்ச்சியான மனநிலையில் வாழ்ந்து உம் திருமகன் இயேசுவை போல பிறருக்கு பணிவிடை செய்யும் நல்ல ஊழியர்களாக மாறிட அருளை தாரும். ஆமென்
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்