என் உள்ளம் கடவுளுக்கு அருகாமையில் உள்ளதா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 5 செவ்வாய்
I: தொநூ: 1: 20 - 2: 4
II: திபா 8: 3-4. 5-6. 7-8
III: மாற்: 7: 1-13
மனிதர்களாகிய நாம் அனைவரும் படைக்கப்பட்டதன் முதல் மற்றும் முக்கிய நோக்கமே கடவுளோடு இருக்கவும் அவரை அன்பு செய்யவும் தான். கடவுளுக்கு அருகிமையில் நாம் செல்ல நமக்கு உதவுபவை ஆலயம், இறைவேண்டல் அத்தோடு ஒருசில சடங்கு முறைகள். இவை யாவும் நாம் கடவுளருகில் செல்ல நமக்கு வழிகாட்டுபவையே. ஆனால் பல வேளைகளில் இவற்றை நாம் கடவுளுக்கு இணையாக்குகிறோம். ஏன் இவற்றிற்கு கொடுக்கப்படும் மதிப்பும் நேரமும் கடவுளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
சமீபத்தில் ஒரு கோவிலுக்கு திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த கோவில் பிள்ளை கோவில் காரியங்களை பரபரப்போடு செய்து கொண்டிருந்தார். திருப்பலி முழுதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருந்தார். ஆனால் திருப்பலியில் முழுமையாக பக்தியாக அவர் பங்கு கொள்ளவில்லை.
இதே போலத்தான் நாமும் பல சமயங்களில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. அலங்காரங்களுக்கும், பிறர் மெச்சிக் கொள்ளும் அளவுக்கு காணிக்கை செலுத்துவதற்கும் ,சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கடவுளை கைவிட்டுவிடுகிறோம். கடவுளை நோக்கி வழிநடத்த வேண்டியவை எல்லாம் நம்மை கடவுளைவிட்டு வெகுதொலைவில் அழைத்துச்சென்று விடுகிறது.
இதையே "இம்மக்கள் உதட்டினால் என்னைப் புகழ்கின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகுதொலைவினில் இருக்கின்றது " என்ற வார்த்தைகள் உணர்த்துகின்றன.
நம்மையே நாம் இன்று ஆய்வு செய்வோம். நாம் கடவுளுக்கு அருகில் அவரைப் பிடித்துக்கொண்டிருக்கிறோமா?அல்லது இயேசு சுட்டிக்காட்டிய யூதர்களைப்போல வெறும் சட்டங்களையும் சடங்குகளையும் பிடித்துக்கொண்டிருக்கிறோமா? .சட்டங்களையும் சடங்குகளையும் முறையாகப் பயன்படுத்தி கடவுளின் அருகே செல்ல முயற்சி செய்தால் அவரை உள்ளத்தால் புகழ்கின்ற மக்களாக நாம் மாறுவோம். தயாரா?
இறைவேண்டல்
அன்பு இறைவா உள்ளத்தால் உம் அருகே இருக்கும் மக்களாக எம்மை மாற்றுவீராக. ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்