கொரோனா காலத்தில் புரியாத எதிர்காலம் | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

 வியாபாரி ஒருவர் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். நேர்மை, கடின உழைப்பு, உண்மையான வியாபாரத்தினால் மக்கள் அதிகமாக இந்தக் கடைக்கு வரத்தொடங்கினார். கடைக்கு நல்ல வருமானம்,

போட்டியும், பொறாமையும், அநீதியும் நிறைந்த இக்காலத்தில் நீதிக்கும், நேர்மைக்கும், உண்மைக்கும் சில நேரங்களில் மதிப்பு மறுக்கப்படுகிறது. நேர்மையோடு வியாபாரம் நடக்கும் இந்தக் கடையின் அருகில், பதவியும் பணமும் படைத்த ஒருவர், பெரிய கடை ஒன்றைத் திறந்தார். ஆடம்பர விளம்பரங்களுக்காகப் பணம் வாரி இறைக்கப்பட்டது. அமைச்சர் ஒருவர் வருகை தந்து கடையைத் திறந்து வைத்தார்.மக்கள் கூட்டம் புதிய கடைக்குப் படை எடுத்தது. பழைய கடைக்காரருடைய வியாபாரம் பாதிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களும் குறையத் தொடங்கினர். இனி இந்த இடத்தில் எப்படி கடை நடத்துவது என்ற கலக்கமும் கவலையும் ஏற்பட்டது பழைய வியாபாரிக்கு.

பங்குத்தந்தையைச் சந்தித்துத் தனது பிரச்சனையை எடுத்துக் கூறினார் வியாபாரி. பங்குத்தந்தை, "ஐயா, நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். நேர்மையோடும், கடின உழைப்போடும் கடையை நடத்துங்கள்.கடவுளை நம்பித் தொடர்ந்து வியாபாரம் செய்யுங்கள். பணக்காரர் பணத்தையும் பதவியையும் நம்பி கடையை நடத்துகிறார். பணமும் பதவியும் நிரந்தரம் அல்ல. ஆனால் நீங்கள், உழைப்பையும் நேர்மையையும் நம்பி கடையை நடத்துகிறீர்கள். நேர்மையும் உழைப்பும் நிரந்தரமானவை. இதை எல்லா மக்களும் மதித்து உமது கடைக்கு வருவார்கள். கவலைப்படவேண்டாம். மேலும் நான் உங்களுக்கு பார்சல் (பொட்டலம்) ஒன்று தருகிறேன். உங்கள் வியாபாரத்தில் பெரிய பிரச்சனை எப்போது வருகிறதோ அப்போது இதைத் திறந்து உபயோகியுங்கள்" என்று கூறி அவரை அனுப்பிவைத்தார்.

வியாபாரி நம்பிக்கையோடு வியாபாரம் செய்தார். தினமும் அதிகாலையில் கடைதிறக்கப்பட்டது. கடைக்குமுன் சுத்தம் செய்து கோலம் போடப்பட்டது. கலப்படம் இல்லாமல் நல்ல பொருள்கள் விற்கப்பட்டன. மக்கள் அதிகமாகக் கடைக்கு வரத்தொடங்கினர். வியாபாரம் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் 'கொரோனா' என்ற கொடிய கொள்ளை நோய் உலகம் முழுவதும் பரவுவதாகச் செய்திகள் வந்தன. திடீரென்று அரசு ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

பழைய வியாபாரியின் கடையும் மூடப்பட்டது. வியாபாரம் இல்லை. வருமானம் இல்லை. கையில் பணமில்லை. கடை மற்றும் வீட்டு வாடகை எப்படிக் கட்டுவது? கொரோனா நோய் எப்போது நம்மை விட்டுப்போகும்? கடை எப்போது திறக்கப்படும்? எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறதோ? ஒன்றும் புரியவில்லை. கவலை வியாபாரியை ஆட்கொண்டது. அப்போது பங்குத்தந்தை அளித்த பார்சல் நினைவுக்கு வந்தது. அதைப் பிரித்துப்பார்த்தார். அதில் அழகான செபமாலை இருந்தது. கையில் எடுத்தார். தரையில் மண்டியிட்டார். குடும்பத்தோடு கடவுளை மட்டும் நம்பி செபிக்கத் தொடங்கினார் வியாபாரி.

எதிர்காலம் புரியவில்லையே இறைவா!

நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார். (நீமொ 21:21)

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image