என்னைத் தேடிவந்த ராஜா...| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
அரசரது ஐம்பதாவது பிறந்த நாள் வந்தது. நாடு முழுவதும் விடுமுறை. வீதிகள், வீடுகள் எல்லாம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, எங்கு பார்த்தாலும் கொண்டாட்டமாக இருந்தது. பிறந்த நாளன்று அரசர் விருந்தும், பரிசும் கொடுப்பார் என்று நினைத்து.மக்கள் அனைவரும் அரசரின் அரண்மனை நோக்கிச் சென்றனர். ஆனால் அரசரோ மக்களைச் சந்திக்க, அரண்மனையிலிருந்து மாறுவேடம் பூண்டு மக்கள் வாழ்கின்ற இடங்களுக்குச் சென்றார்.
வீதியின் வழியாக வரும்போது குடிசை ஒன்று காணப்பட்டது. அரசர் குடிசையினுள் சென்று பார்த்தார். வயதான பாட்டி ஒருவர், கூடை பின்னிக் கொண்டிருப்பதைக் கண்ட அரசர் அருகில் சென்று, 'பாட்டி! அரசரைப் பார்த்து பிறந்தநாள் பரிசுகள் வாங்கச் செல்லவில்லையா"? என்று கேட்டார். உடனே அந்தப் பாட்டி, "எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. இறைவன் கொடுத்துள்ள இந்த நாளில் மூன்று கூடைகள் பின்னி விடுவேன். அதை விற்றால் மூன்று நாட்களுக்கு வேண்டிய உணவு கிடைத்துவிடும். எனது உழைப்பை நம்பி, நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் அரசர் என்ன பரிசு கொடுப்பார்? எப்போது கொடுப்பார் என்று எனக்குத் தெரியாது. நீ போய் வா சாமி" என்று அனுப்பி வைத்தாள்.
மறுநாள் காலையில், அரசரது சேவகர்கள்,'அரசர் வருகிறார், தேரில் வருகிறார்' என முழக்கமிட்டனர். ஊர் மக்கள் யாவரும்,தேர் எங்கு செல்கிறது என்று பார்க்க,தேர் பின்னாலேயே சென்றனர்.தேர் நேராக பாட்டியின் குடிசையை நோக்கிச் சென்றது. குடிசையின் முன் நின்றது. அரசர் தேரிலிருந்து இறங்கி, பாட்டியிடம் சென்றார். அரசரைப் பார்த்ததும் பாட்டி, 'என் ராஜா என்னைத் தேடி வந்துள்ளார்" எனப் பூரிப்படைந்தாள். அரசர் தான் கொண்டு வந்த தங்கக் காசுகளைப் பரிசாகக் கொடுத்துவிட்டு, பாட்டியைப் போன்று உழைக்கிற மக்கள்தான் நாட்டின் உண்மையான குடி மக்கள் என்று கூறி பாட்டியைப் பாராட்டினார்.
'செய்யும் தொழிலே தெய்வம்'
உண்மையாக உழைக்கும் மக்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் சம்பாவணை இருக்கிறது. மத். 25:20-21.
கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே. (நீமொ 14:23)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
