கி.மு.வின் அழியாத வரலாற்று நாயகன்!
வரலாற்று நாயகர்கள், வரலாற்றை மாற்றி எழுதியவர்கள், தங்கள் செயலால், வீரத்தால், சாதனையால், தடம் பதித்த வாழ்வால், இன்றும் நம் மனதில் மறக்க முடியாத மனிதர்களாய் இருக்கிற சில பேரை நாம் பார்க்கிறோம்.
வரலாறு என்பது என்ன? வரலாறு என்பது 'கடந்த கால சம்பவங்களின் பதிவேடு' (Record of the past) என்று நாம் ஒரே வரியில் பதில் கூறிவிடலாம்.
வரலாறு எதில் தொடங்குகிறது? எதில் முடிகிறது? உலகம் தோன்றிய காலத்தில் தொடங்குகிறது. நேற்றோடு அது முடிகிறது. ஆம். இன்று நடப்பது நிகழ்வு. அது செய்தி (News). நேற்றுவரை நடந்தது வரலாறு (History) ஆகிறது.
உலகம் எப்போது தோன்றியது? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. அக்காலம் பற்றி அறிய நமக்கு போதிய சான்றுகள் இல்லை. கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம், நாகரிக காலம், நவீன காலம், அதற்கு முன்பாக இடைக்காலம் என்றெல்லாம் நாம் வரலாற்றை நம் வசதிக்காகவே பிரித்துக் கொள்கிறோம்.
உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்றைவிட இன்று மாற்றம் அதிகம். இன்றைவிட நாளை நிச்சயம் மாறும். மாறுவதே வாழ்வு. மாற்றுவது மனிதர்கள்.
அப்படி கல்லை ஆயுதமாக்கிய அன்றைய மனிதன் இன்று நவீன அணுஆயுதங்கள் என வளர்ந்திருக்கிறான். மாறியிருக்கிறான்.
இந்த மாற்றங்கள் திடீர் என்று ஒரே நாளில் வந்த தல்ல. படிப்படியாக, யுகம் யுகமாக, காலம் காலமாக, சிறிது சிறிதாக ஏற்பட்ட வளர்ச்சியே இது.
இம்மாற்றங்கள் சில அறிவியல் அறிஞர்களால் நிகழ்ந்து இருக்கின்றன. சில மாற்றம் ஆன்மிக ஞானி களால் வந்தன. சில தத்துவஞானிகளால் தோன்றின. சில சீர்திருத்தவாதிகளால் (Reformers) தோன்றின. பல அரசர்களால், ஆட்சி நிர்வாகிகளால் எழுந்தன.
அந்த வகையில், மிகப் பழங்காலப் பேரரசர் ஒருவர் தொடங்கி, நேற்றுவரை உலகம் தந்த நாயகர்களில், மிகச் சிறப்பான சிலரைக் காணும்போது நாம் அறிய வேண்டிய ஒரு பெயர் அலெக்ஸாண்டர். கிரேக்கம் தந்த மாவீரன் இவன். உலகையே ஆட்சிசெய்ய ஆசைப்பட்ட அற்புத வீரன். அதில் ஓரளவு வெற்றியும் கண்டு உலகச் சித்திரத்தில் அழியாத சுவடுகளை அவசரம் அவசரமாகப் பதித்துச் சென்றவன். உலக வரலாற்றில் 'மாவீரன்' என அழைக்கப்படும் மகாமனிதர் இவர். இவர் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் கிரீஸ் நாடு ஒரு மலைப்பகுதி யான நாடு. நாகரிகத்திற்கும், வீரத்திற்கும், தத்துவத்திற்கும் புகழ் பெற்ற நாடு. இது ஸ்பார்ட்டா, ஏதென்ஸ் போன்ற சிறுசிறு நகர அரசுகளாக இருந்தன. கிரீஸ் உலக நாகரிகத்திற்கு அளித்த நன்கொடை மிக அதிகம்.
இந்த கிரீஸ் நாட்டில் 'மாசிடோனியா' என்பது ஒரு சிறுபகுதி. இது ஒரு தனிநாடாக இயங்கியது. இதன் மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர். இரண்டாம் பிலிப். இவரின் இனிய புதல்வரே இந்த அலெக்ஸாண்டர்.
இரண்டாம் பிலிப் மிகச்சிறந்த வீரர், வெற்றியாளர். இவரின் மகன் என்ற பெருமை மட்டுமில்லாது, அலெக் ஸாண்டருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது, மிகச்சிறந்த கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் என்பவரின் மாணவர் என்பதும்.
கி.மு. 356இல் இவர் பிறந்தார். இவரின் தந்தை ஆட்சிப் பகையால் கொலை செய்யப்பட்டார். அப்போது அலெக்ஸாண்டருக்கு இருபதே வயது.கி.மு. 336இல் மாசிடோனிய மன்னராக அலெக்ஸாண்டர் பதவி ஏற்றார். இதன் பிறகு 13 ஆண்டுகளே இவர் மன்ன ராக இருந்தார். இந்தக் குறுகிய காலத்தில் உலகில் யாருமே உருவாக்காத மாபெரும் கிரேக்க சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
'உலகையே வெல்ல வேண்டும். அதற்கு ஒரு மாபெரும் சக்கரவர்த்தியாக வேண்டும்'- இதுவே இவரின் ஆசை. கனவு. எண்ணம். ஏன் லட்சியமும்கூட. அன்று அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் அறியப் படாத நேரம். உலகம் என்பது அக்கால கட்டத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று மட்டுமே அறியப்பட்டிருந்தது. இந்த மூன்று கண்டத்திலும் வெற்றியைக் கண்டவர் இவர்.
வீரம் - நம்பிக்கை - துணிவு இந்த மூன்றுமே இவரை மூன்று கண்டங்களில் அரசை ஸ்தாபிக்கச் செய்தது)
கி.மு. 333இல் பெர்னிய நாட்டு பேரரசர் மூன்றாம் டாரியஸ் தோற்கடிக்கப்பட்டு பெரிய நாடு இவர் வச மானது. இது ஒரு மாபெரும் வெற்றி. இந்த வெற்றியால் தனது தந்தையிடமிருந்து கிடைத்த பகுதியைவிட 50 மடங்கு பகுதிகளை இவர் பெற்றார்.
அடுத்து ஆப்பிரிக்கா அதில் எகிப்து, மத்திய ஆசியா பகுதிகள் எல்லாமே இவர் வசமாயின. ஐரோப்பிய டான்யூப் நதி கடந்து, நைல் நதி கடந்து, கங்கை நதி வரை இவர் படையெடுப்பு தொடர்ந்தது.
மாசிடோனியப் பேரரசை தமது தந்தையின் நம்பிக்கை பெற்ற அமைச்சரான ஆன்டிபேட்டர் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும்படையுடன் நாடுதேடிய அவர் வீரப்பயணம் தொடர்ந்தது.
ஹெல்லஸ் பாண்டைக் (Helles pont) கடந்து, ஆசியா மைனர் (Asia Minor) மீது படையெடுத்தார். கிரானிகஸ் ஆற்றங்கரைப் போரில் (Granicus) 334இல் பாரசீகர்களுக்கு எதிராக இவர் பெரும்வெற்றி பெற்றார். இஸ்ஸஸ் (Issus) போரில் கிமு 333இல் பாரசீக அரசர் டாரியஸ் மீது வெற்றி. பிறகு சிரியா,பிறகு எகிப்து என ஆப்பிரிக்கா மீது படையெடுப்பு. அப்போது எகிப்தை ஆண்ட பாரசீக ஆளுநர் சரணடைந்தார். எகிப்தியப் பஃரோ என்ற பட்டத்தை அலெக்ஸாண்டர் சூட்டிக் கொண்டார். அங்கே நைல்நதி முகத்துவாரத்தில் அலெக்ஸாண்டிரியா (Alexandria) எனும் புகழ்மிக்க நகருக்கு கால் கோளிட்டார்.
எகிப்தில் இருந்து சிரியா வழியாகச் சென்று, யூப்ரடீஸ், டைகிரிஸ் நதிகளைக் கடந்து மூன்றாம் டாரியலை கி.மு. 331இல் அர்பேலா (Arbela) வில் தோற்கடித்தார். போர்க் களத்தில் இருந்து டாரியூஸ் புறங்காட்டி ஓடினார். கி.மு. 330இல் பாக்டீரிய ஆளுநர் பேச்சால் கொல்லப்பட்டார்.
அலெக்ஸாண்டர் எதிர்ப்பில்லாது பாரசீகத்தின் அதிபதியானார். மூன்றாம் டாரியஸ் மகளான ஸ்டதீரா (Statira) என்பவளைத் திருமணம் செய்துகொண்டார்.
இவ்வெற்றிக்குப் பின் வேட்கை அதிகமாகியது. தனது படைகளை மத்திய ஆசியா மூலம் செலுத்தி பாக்டீரியா, சாக்டியானா, அரகோசியா ஆகிய இடங்களை வெற்றி கண்டார்.
மூன்றாம் டாரியஸ் மருமகன் என்ற முறையில், இந்தியாவில் இழந்த பாரசீக அரசை திரும்பப் பெற அலெக்ஸாண்டர் விரும்பினார். இவரின் கவனம் இந்தியா மீது திரும்பியது. அப்போது வடஇந்தியாவில் வலிமையான அரசு இல்லை.
கி.மு. 327இல் இந்து குஷ் மலையைக் கடந்து ஸ்வத், பஜெனர் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த கொடிய ஆற்றல் படைத்த குடிகளை அடக்கினார். கிமு 326இல் சிந்து நதியைக் கடந்து தட்சசீலம் அடைந்தார். அங்கு அரசராக இருந்த 'அம்பி' அவரை வரவேற்று சரண் அடைந்து வெகுமதிகளையும் கொடுத்தார்.
பிறகு கிழக்குப்புறமாகப் படைகளை செலுத்தி, ஜீலம் நதிக்கரையை (ஹிடாஸ்பெஸ்) அடைந்தார். ஜீலம் - சீனாப் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியின் அரசரான போரஸ், அம்பியைப் போல் இல்லாது தீரமுடன் எதிர்த்துப் போரிட்டார். ஆனபோதும் இவர் தோற்றார். போரஸ் கைதியானார். இவருக்கு புருஷோத்தமன் என்ற பெயரும் உண்டு. அலெக் ஸாண்டர் இவரை மிகவும் பெருந் தன்மையுடன் நடத்தினார். பேரரசின் பகுதிகளை அவருக்கே தந்தார். மேலும் பல புதிய பகுதிகளையும் இணைத்துத் தந்தார். இது உலக வரலாற்றில் மிகப் பெரிய செயல் எனலாம்.
பிறகு பியாஸ் (ஹிபாசிஸ்) நதியை போக்கி, அலெக்ஸாண்டர் முன்னேறினார். பல போர்க்குடிகளை இடையில் வென்றார்.
ஆனால் அவரது போர் வீரர்கள் அதற்குமேல் முன்னேற மறுத்தார்கள். காலநிலை, குடும்பம் - நாடு பிரிந்த கவலை அவர்களை மேலும் போர்செய்ய உடன் படவில்லை.
கைப்பற்றிய பகுதிகளை ஆட்சிசெய்யும் ஏற்பாடு களை செய்து முடித்துவிட்டு, தாயகம் திரும்ப முடிவு செய்தார். படை மாசிடோனியா திரும்பியது. 325இல் இவர் இந்தியாவைவிட்டுத் திரும்பினார். படைகளின் ஒரு பகுதி அலெக்ஸாண்டருடன் புறப்பட்டது. படையின் எஞ்சிய மீதிப்பகுதி அவரது கடற்படைத் தலைவன் நியார்க்கஸ் தலைமையில் கடல்வழியாகப் புறப்பட்டது.
அலெக்ஸாண்டர் கிமு 323இல் பாபிலோனியாவை அடைந்தார். அங்கே நோய் ஏற்பட்டு தனது 33ஆம் வயதிலேயே இறந்தார். விஷசுரம் வந்ததாகக் கருதப்படு கிறது. 33 வயதில் உலகச்சாதனை படைத்த வரலாற்று நாயகர் இவர்.
இவருக்கு உடல் நலம் சரியில்லை. கூட இருந்த மருத்துவர்கள் கைவிட்டனர். இறக்கப்போகிறோம் என்பது இவருக்குப் புரிந்தது. இவருக்காக சவப்பெட்டி யும் தயார் ஆகிறது. அதனையும் அலெக்ஸாண்டர் பார்க்கிறார். சவப்பெட்டி செய்பவரை அருகில் அழைத்து - அதன் முன்பகுதியில், தலை வைக்கப்படும் இடத்தின் அருகே இருபுறமும் இரண்டு பெரிய ஓட்டை விடச்சொல்கிறார். எல்லாரும் அது ஏன் என திகைக் கின்றனர். அவர்களிடம் அலெக்ஸாண்டர் கூறுகிறார், ''உலகையே வெல்ல ஆசைப்பட்ட அலெக்ஸாண்டர் இறுதிநாளில், வெறும் கையோடுதான் செல்கிறான் என்பதை உலகம் அறியட்டும்" என்று. தான் அரிஸ்டாட்டிலின் அருமை மாணவன் என்பதை இந்த இறுதிநாளில் மெய்ப்பித்து தானும் ஓர் ஞானி என நிரூபிக்கிறான்.
கி.மு.வில் நாம் சந்திக்கும் அழியாத வரலாற்று நாயகன் இவர் அல்லவா? இவரின் லட்சியம் ஓரளவு நிறைவேறியது. அதோடு இந்த மூன்று கண்ட படையெடுப்பால், அலெக்ஸாண்டர் உலக சரித்திரத்தில் பலப்பல மாறுதல்களை உருவாக்கினார். ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது. கிரேக்க - இந்திய கலை உருவானதும், மேலைநாடுகளுடன் தொடர்பும் ஏற்பட இது வழி வகுத்தது. புதிய அலெக்ஸாண்டிரியா நகர் உருவானது. வாணிகம் பெருக வாய்ப்பு இருந்தது. அலெக்ஸாண்டருடன் இந்தியக் கலை - பண்பாடும் கூடவே கிரீஸ் சென்றது.
இந்த வரலாற்று நாயகனுக்கு வரலாற்றில் என்றும் ஒரு தனியான பக்கம் ஒதுக்கப்படும்.