அமெரிக்கா - மேற்கிந்திய தீவுகள்!
மார்க்கோபோலோ சீனா சென்றுவரும் வரை சீனா பற்றியோ, மற்ற ஆசியா நாடுகள் பற்றியோ ஐரோப்பா அதிகம் அறிந்திருக்கவில்லை. கான்ஸ்டாண்டி நோபிளை, துருக்கியர்கள் கைப்பற்றியதால், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு தரைவழி தடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மிளகு, ஏலம், யானை தந்தம், துகில் போன்ற முக்கிய பொருள்கள் தரைவழியே ஐரோப்பியா சென்றது. இதனால் கடல்வழி காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மார்க்கோபோலோவின் பயணம் தரைவழிப் பயணம். அது மிக நீண்ட தூரப் பயணம். ஆபத்தும், கடினமும் நிறைந்த பயணம் அது எனலாம். எனவே சுலபமான, எளிய கடல் வழிகாண வேண்டிய கட்டாயம் எழுந்தது. இந்த சமயத்தில் மரக்கப்பல் வசதி, துணிவுமிக்க மாலுமி, ஆதரவு செய்யும் அரசர்கள் என்ற ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டது. அதோடு உலகம் உருண்டை வடிவம் என்ற அறிவியல் உண்மை உறுதி செய்யப்பட்டதால், மேற்கு நோக்கிப் பயணம் செய் தால், திரும்பி உலகம் சுற்றி, புறப்பட்ட இடத் திற்கே வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. துணிவும், சாகஸம் செய்யும் ஆர்வமிக்க மாலுமிகள் பலர் இக்காலக்கட்டத்தில் உருவாகினர். போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்பெயின், டச்சுக்காரர்கள் இதில் ஆர்வம் காட்டினர். அந்நாட்டு அரசர்கள் இதற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தனர். இதுவே புதிய கடல்வழி காணும், கடல்வழிப் பயணத்தின் வளர்ச்சி.
இந்தப் பயணத்தில் வாஸ்கோடகாமா தென்னாப் பிரிக்கா வந்து, நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டு, பின் இந்தியா வந்தார். மெகல்லன் போன்றவர்களும் சாதித்தனர். அதோடு நாம் அறிய வேண்டிய ஒரு பெயர் கொலம்பஸ். இவரது காலம் 1451 - 1506. நீண்ட கடல் பயண சாதனை இவரது சாதனையாகும். இவர் இத்தாலி நாட்டில் உள்ள ஜெனோவா நகரில் பிறந்தவர். இது ஒரு துறைமுக நகரம். அங்கே கப்பல்களும் மாலுமிகளும் நிறைந்திருப்பார்கள். அது கண்ட கொலம்பஸுக்கு கடல்வழிப் பயண ஆர்வம் மிகுந்தது. மேற்கு நோக்கி கடலில் சென்றால், தூரகிழக்கு நாடுகளை அடையலாம் என கொலம்பஸ் நம்பினார். இதற்கான உதவியை ஜெனோவா, வெனிஸ், மற்றும் போர்ச்சுக்கல் அரசுகளிடம் கோரினார். பிறகு ஸ்பெயின் நாட்டு அரசர் பெர்டினாண்ட், அரசி இஸபெல்லா உதவியை நாடினார். அவர் நினா, பிண்டா, சாண்டா, மரியா, (Nina, Pinta, Santamaria) என்று மூன்று கப்பல்கள் தந்து உதவினார். இந்த அரசரும், அரசியும் கடல் பயணத்தை மிகவும் ஊக்கு வித்தவர்கள்.
செப்டம்பர் 6, 1492இல் கொலம்பஸ் கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டார். மேற்கு இந்தியத் தீவான சால்லடார் பகுதியில் அக்டோபர் 12இல் இறங்கினார். பிறகு மார்ச் 15, 1493இல் ஸ்பெயின் திரும்பினார்.
அதன் பிறகு 1493, 1500, 1502 என பல கடல் பயணத்தை இவர் மேற்கொண்டார். 1506இல் இவர் மரணம் அடையும் வரையில் கடல் பயணத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டினார். கடல் வழிப் பயணம் என்பது ஒரு கனவாக இருந்த காலத்தில், கொலம்பஸின் பயணம் துணிவுமிக்க முன் உதாரணமாக இருந்தது. அமெரிக்கா முழுமையாக கண்டுபிடிக்கப்படவும், இந்தியாவிற்கு கடல்வழி காணவும், பிறகு ஆஸ்திரேலியா அறியப் படவும், இவரது பயணம் வழி காட்டியது எனலாம்.
இந்தியாவிற்கு கடல்வழியை இவரால் காண முடியாது போயினும், புதிய உலகமான அமெரிக்கா அறியப்பட இவரே காரணம். இவர் அமெரிக்காவில் கண்டுபிடித்த தீவை மேற்கு இந்தியா என்று பெயரிட்டதும், அங்குள்ள மக்கள் மேற்கிந்தியர்கள் என அழைக்கப்படவும் இவரே காரணம் எனலாம்.