வழி நடத்தும் இறைவன்
நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ? - எரேமியா 32:27. ஆண்டவர் அதிசயமாய் வழிநடத்துகிறவர். எகிப்து நாட்டிலே பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள் என கட்டளை இடுகிறான். இந்த கட்டளையினால் வந்த வேதனையை ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசீர்வாதமாய் மாற்றினார். எந்த இடத்திலிருந்து கடுமையான சட்டம் பிறந்ததோ, அதே இடத்திலிருந்து பாசமான வார்த்தைகள் வரும்படி செய்தார்.
பார்வோனுடைய குமாரத்தியின் மகள், குழந்தையான மோசேயைப் பார்த்துவிட்டு, அவனை தாயிடமே வளர உதவி செய்தது மாத்திரமல்ல, அவனை வளர்ப்பதற்கு சம்பளமும் கொடுத்தாள். அந்த குழந்தை தான் பின் நாளில் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வனாந்தரத்தில் அவர்களை வழி நடத்திய மோயிசன்.
பாலைவனத்தில் இஸ்ரேல் மக்களுக்கு மன்னா பொழிந்து உணவூட்டிய கடவுள், காகத்தின் மூலமாக உணவு கொடுத்த கடவுள் நம்மை வழி நடத்துவார். இந்த இக்கட்டான நேரத்திலும் நம்மை நடத்துவார். ஆண்டவரை பிடித்து கொள்வோம். இந்த சூழ்நிலையும் மாறும். நம் தேவைகளை நிறைவேற்றுவார். மீண்டும் நம் அன்றாட வாழ்வுக்கு திரும்புவோம். நம்புவோம். நமக்கு தடையாக இருக்கும் இந்த கொள்ளை நோயை முற்றிலும் அழித்து நம்மை அமைதியோடு வாழ வைக்க நம் ஆண்டவரால் முடியும். நம் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.
ஜெபம்: ஆண்டவரே எங்களை வழி நடத்தும். எங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றும். எங்களுடைய வாழ்வின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் இந்த வைரஸை முற்றிலும் அழித்து நாங்கள் அனைவரும் அமைதியோடு வாழ அருள் புரியும். ஆசீர்வதியும். ஆமென்.