நம்மை காக்கும் கடவுள்
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! - திருப்பாடல்கள்121:5. ஆண்டவர் நம்மை காக்கிறவர். அவர் கடைசிவரை பாதுகாக்கிறவர். அவர் இரக்கமும் அன்பும் உடைய கடவுள். நோயின் படுக்கையின் நேரத்திலும், போராட்டத்தின் மேல் போராட்டம் வந்து, அவற்றால் அமிழ்ந்து போகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் கவலை பட வேண்டாம். ஆண்டவர் நம்மை காப்பார்.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவருக்கு அவர் அடைக்கலம் கொடுப்பார். கண்மணிபோல நம்மை காப்பார். நம் வழிகளிலெல்லாம் அவர் நம்மை காப்பார். அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை இறுதிவரை காத்திடுவார். ஆயன் தன் மந்தையை காப்பது போல நம்மைக் காப்பார். நிறைவான சமாதானத்துடன் நம்மை காப்பார். நம் கால் வழுவாதபடி நம்மை காப்பார். எல்லாத் தீமையிலிருந்தும் நம்மை காப்பார்.
அவர் உண்மையுள்ளவர். அலகை பல நேரங்களில் நம் உள்ளத்தில் பயத்தையும் அவ நம்பிக்கையையும், சோர்வையும் கொண்டு வரும்போது நாம் சோர்ந்து போகாது அவர் பாதம் அமர்வோம். ஜெபிப்போம். அல்லது அமைதியாக ஜெபிக்கும் இடத்தில் அமர்வோம் .
தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார் (உரோமையர் 8:26).
ஜெபம்: ஆண்டவரே, என்னை காக்கும் கடவுளே, உமக்கு நன்றி. ஆண்டவரே எங்கள் பலவீனங்கள், சோதனைகள், துன்ப வேளைகளில் எங்களோடு இருந்து வழி நடத்தும். பாதுகாத்து கொள்ளும். தூய ஆவியாரே துணை வாரும். ஆமென்.