கூடாத காரியம் ஒன்றுமில்லை
நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன் - திருப்பாடல்கள் 32:8. இயேசு சீமோனை, கலிலேயா கடற்கரையின் அருகே கண்டார். சீமோன் இரவு முழுவதும் பிரயாசப்பட்டார். ஆனாலும், ஒரு சின்ன மீனைக்கூட அவரால் பிடிக்க முடியவில்லை. தோல்வியிலும் படுதோல்வி.
சீமோன் தன்னுடைய படகைக் இயேசுவுக்கு கொடுத்தார். இயேசு அந்த படகில் ஏறி உட்கார்ந்து, சூழ உள்ள மக்களுக்கு போதிக்கிறார். தனக்கு படகைக் கொடுத்த சீமோனுக்கு அற்புதம் செய்யாமல், அந்த இடத்தை விட்டு செல்ல இயேசுவுக்கு விருப்பம் இல்லை. சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்பணிந்தார். இரு படகுகளை மீன்களால் நிரப்பும் அளவுக்கு மீன் பிடித்தார்கள். கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை." நம்முடைய தோல்வியை வெற்றியாக மாற்றுகிறவர். அவர் நம் முயற்சியை ஆசீர்வதிக்கும்போது, நிச்சயமாகவே நாம் ஆசீர்வாதமுள்ளவர்களாய் மாறுவோம்.
இரவு முழுவதும், அந்த மீன்கள் எங்கே போயிற்று? ஆம், இல்லாத இடத்திலும் உருவாக்கி தருபவர் ஆண்டவர். அவரால் முடியும். எல்லாம் முடியும். ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்போம். படிப்பையும், அனுபவத்தையும், பணத்தையும் சாராது ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்போம். ஆண்டவருடைய ஆலோசனையைக் கேட்டு, அவருடைய வார்த்தையின்படியே செய்வோம். அவர் ஆலோசனையின்படி, நாம் நடக்கும்போது, முடியாதவைகள் முடியும். அற்புதங்கள் நடக்கும். அவரால் செய்ய முடியாத அதிசயமான செயல் ஒன்றுமில்லை.
செபம்: ஆண்டவரே, உம்மையே நம்பி இருக்கிறோம். ஆண்டவரே மகப் பேற்றுக்க்காக காத்திருப்போர், திருமணத்துக்காகக் காத்திருப்போர், வேலை தேடுவோர், நோயுற்றோர், அன்புக்காக ஏங்குவோர், சமாதானமின்றி தவிப்போர், அனைவரையும் உம் திருப்பாதம் வைக்கிறோம். ஆண்டவரே உம்மால் முடியாதது ஒன்றும் இல்லையே. இவர்களுடைய கண்ணீரை சந்தோசமாக மாற்றும். இவர்களை உம் ஆசீராலே நிரப்பும். ஆமென்.