அருகில் இருக்க
குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள் - சீராக் 2:1. நாம் நம் வாழ்க்கையில் அதிகமாக சோதிக்கப் படுகிறோம். இந்த சோதனைகள் ஏன் என்று பார்த்தால்:
1. கடவுளுடைய வல்லமையை உணர்வதற்காக. சோதனைகளில் முடிவில் பார்த்தல் , நாம் எப்படி இதை கடந்தோம் என்ற அளவுக்கு பல எதிர்பாராத நிகழ்வுகள் கடவுளால் நடந்திருக்கும்.
2. இந்த சோதனைகளில் நாம் அவரை அன்பு செய்கிறோமா ? அவரை விட்டு தூரப் போகிறோமா? என்று அறிய சோதனைகளை சந்தித்த சிலர் அவரை விட்டு ஓடி போய் விடுவார்கள். இறுதி வரை நிலைத்து நிற்பவனே நிலை வாழ்வை பெறுவான்.
3. நாம் ஒன்றும் இல்லை என்பதை நமக்கு உணர்த்த நம்முடைய தற்பெருமை, அகம்பாவம், ஆணவம் எல்லாம் நிலைத்து நிற்பது இல்லை. சோதனைகளை மேற்கொள்ள அவை உதவாது. ஆண்டவர் துணையின்றி எதுவும் முடியாது.
4. இந்த சோதனைகளும் துன்பங்களும் நமக்கு பொறுமையையும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. குயவன் கையில் இருக்கும் களிமண் போல நாமிருக்கிறோம். சோதனைகள் துன்பங்கள் மூலம் நாம் அழகான பாத்திரங்களாக உண்டாக்கப்படுகிறோம். இயேசு இறைமகனாக இருந்த போதும், உயிர்ப்பின் வெற்றியை அனுபவிக்க எத்தனை துன்பங்கள் வேதனைகளை அனுபவித்தார். அவரது மீட்பு பணியில் வெற்றி , சிலுவை மரணம் என்னும் கொடிய துன்பத்தில் தான் கிடைத்தது.
கடவுளாகிய ஆண்டவர் நம்மை நடத்தி செல்லும் எல்லா வழிகளையும் நினைத்து பார்த்தால் நம் கண்களுக்கு வியப்பாக இருக்கும். அவர் நம்மை எளியவராக்கி அவருடைய வார்த்தையினால் நம்மை வாழ வைக்கிறார். அவர் அன்பில் நிலைத்து நிற்போம். அவர் நடத்தி செல்லும் வழிகள் மிக அதிசயமானதாகும்.
ஜெபம்: ஆண்டவரே, உமது கையில் களி மண்ணாக இருக்கிறேன். என்னை உடையும் உமக்கேற்ற பாத்திரமாக மாற்றும். நான் பிறருக்கு ஆறுதலாக அமைய வேண்டும் பிறரை அன்பு செய்ய வேண்டும். என்னில் உம்மை பிரதிபலிக்க வேண்டும். அருள் தாரும். ஆமென்.