தமிழர்களே நாம் எங்கே தொலைத்தோம் இரண்டு லட்சம் நெல் வகைகளை?

தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் இரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் இரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும். நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளைக் கையாண்டனர். தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு, விதைகளை காய வைத்தனர். இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது. பஞ்சாங்கம் போன்றவை உருவாக்கி, அதன் வழியாக கால நிலைகளை அறிந்து, இயற்கைக்கு இயைந்த வகையில் விதைகளை நட்டனர். பருவத்தே பயிர் செய்தனர். இவையெல்லாம் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள்தான். நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாய் செல்வக்குவியலாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

கண் இருந்தும் குருடராய், அயலான் காட்டிய தவறான வழியில் சென்று, தரமற்ற விதைகளை நட்டதால், நாம் நம் நிலத்தை மாசுபடுத்தினோம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை அழித்தோம். ஆனால், இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள், பாரம்பரிய விதைகளின் அருமையை உணர்ந்து, அதனைச் சேகரித்து பயிர் இடுகின்றனர். மேலும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர். இவையெல்லாம் நன்மைமிகு மாற்றங்கள் ஆகும். இவை, வரவேற்கப்பட வேண்டியவை, ஊக்கமளிக்கப்பட வேண்டியவை.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)