சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்| பாரதி மேரி | VeritasTamil
ஐநா பொது சபையால் (UN General Assembly) அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் (International Human Solidarity Day) ஆண்டு தோறும் டிசம்பர் 20-ஆம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மனிதர்களிடம் உள்ள ஒற்றுமை உணர்வு அனைத்து மட்டங்களிலும் சமூக உறவுகளில் அமைதியை கொண்டு வரும். உலக மக்களிடையே, குறிப்பாக உலக அரங்கில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20 அன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை போற்றுகிறது ஐக்கிய நாடுகளின் இந்த சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம். சர்வதேச உடன்படிக்கைகளின் படி உலக நாடுகள் நடக்க வேண்டும் என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது. வறுமை மற்றும் பிற உலகளாவிய பிரச்சனைகளை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிக்கிறது
உலகளாவிய ஒற்றுமையை போற்றும் இந்நாளின் போது இதன் கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி மேலும் அறிந்து கொள்வோம்..
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தின் நோக்கம்:
வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு அடிப்படையாக இருக்கும் ஒற்றுமையை மக்கள் மற்றும் நாடுகளிடையே ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த நாள் உலகெங்கிலும் உள்ள மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ஒற்றுமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.