“ஒன்றிணைந்த பயணத்தின் நடைமுறைப்படுத்தலில் உள்ளூர் திருஅவைகளே மையம்” – அருள்தந்தை ஜியாகோமோ கோஸ்டா | FABC | Veritas Tamil

ஆயர் மாமன்றத்தின் ஒன்றிணைந்த பயணத்தை நடைமுறைப்படுத்துவது, உரோமையிலிருந்து உள்ளூர் திருஅவைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதைக் காட்டிலும், உலகளாவிய திருஅவையுடன் ஒன்றிப்பில் தங்களுக்கான பாதையைப் பகுத்தறியும் வகையில் உள்ளூர் திருஅவைகளை வலுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் ஆலோசகரான அருள்தந்தை ஜியாகோமோ கோஸ்டா, SJ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூலை 24 அன்று ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் 12ஆவது நிறைவிறுதிப் பேரவையில், “ஆயர் மாமன்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பாதைகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், அடுத்த கட்ட ஒன்றிணைந்த பயணம் வத்திக்கானின் கூடுதல் வழிகாட்டுதல்களில் அல்ல; மாறாக, தங்களது சொந்தச் சூழல்களில் தூய ஆவியார் நற்செய்தியை எவ்வாறு வாழ அழைக்கிறார் என்பதைப் பகுத்தறியும் பொறுப்பை உள்ளூர் திருஅவைகள் ஏற்றுக்கொள்வதில் உள்ளது என்று கூறினார்.

உள்ளூர் திருஅவைகளின் பொறுப்பை உரோம் மாற்றியமைக்காது” என்று கூறிய அருள்தந்தை கோஸ்டா, ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் பணி உள்ளூர் திருஅவைகளுக்கு துணைநிற்பதும், ஆதரவளிப்பதும், தேவையான வளங்களை வழங்குவதுமே தவிர, அவற்றைக் கண்காணிப்பது அல்ல என்று விளக்கினார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கர்தினால்கள் குழுவினருக்கு அண்மையில் வழங்கிய செய்தியை மேற்கோள்காட்டிய அவர், ஆயர்கள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள திருஅவைகளில் ஒன்றிணைந்த பயணத்தை “உறுதியுடன்” முன்னெடுத்து, இறைமக்கள் மேலும் நற்செய்திக்குரிய வாழ்வுமுறையில் வளர உதவ வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பை நினைவுகூர்ந்தார்.

ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணம், நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் திருஅவையின் பணிகளின் மையமாக மாறக்கூடாது என்றும், “திருஅவையின் வாழ்வும் மறைப்பணியுமே உண்மையான மையம்” என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆவணங்கள் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, இயந்திரத்தனமாக நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் திருஅவைக்கு முக்கியத்துவம் அளிப்பது தனிமைப்படுவதையோ, பிற திருஅவைகளிலிருந்து விலகுவதையோ குறிக்காது என்றும் அருள்தந்தை கோஸ்டா விளக்கினார். “திருஅவை என்பது திருஅவைகளின் ஒன்றிப்பு” என்று கூறிய அவர், மறைமாவட்டங்கள், ஆயர் பேரவைகள், கண்ட அளவிலான பேரவைகள் மற்றும் உலகளாவிய திருஅவை ஆகியவற்றுக்கிடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

மேலும், ஒன்றிணைந்த திருஅவையில் ஆயர்கள் வெறுமனே நிர்வாகிகளாகச் செயல்படாமல், ஒன்றிப்பை வளர்ப்பவர்களாகவும், பங்கேற்பை ஊக்குவிப்பவர்களாகவும், இறைமக்கள் ஒன்றிணைந்து தூய ஆவியாரின் செயல்பாட்டைப் பகுத்தறிவதற்கான வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆசியாவின் பல்வேறு பண்பாட்டு மற்றும் சமயச் சூழல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து உள்ளூர் திருஅவைகளுக்கும் ஒரே மாதிரியான மேய்ப்புப்பணி முறையைப் பின்பற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு உள்ளூர் திருஅவையும் தனது சொந்தச் சூழலில் ஒன்றிணைந்த பயணம் எவ்வாறு வேரூன்ற வேண்டும் என்பதைப் பகுத்தறிந்து, அதேவேளையில் உலகளாவிய திருஅவையுடன் முழுமையான ஒன்றிப்பில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒன்றிணைந்த பயணத்தின் எதிர்காலம் புதிய கட்டமைப்புகளிலோ கூடுதல் ஆவணங்களிலோ அல்ல; மாறாக, தங்களது மறைப்பணிப் பொறுப்பை நம்பிக்கையுடன் ஏற்று, ஒன்றிணைந்து பகுத்தறிந்து, உலகளாவிய திருஅவையுடன் ஒன்றிப்பில் நற்செய்தியை வாழும் உள்ளூர் திருஅவைகளிலேயே உள்ளது என்று அருள்தந்தை கோஸ்டா அவர்கள்  எடுத்துரைத்தார்.

Tamil Survey Popup Image