5 ரூபாய் டாக்டர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

பணமே இல்லாமல் பலரும் வருவார்கள், அவர்களின் சுமைகளை அதிகரிக்க விரும்பவில்லை.

வேலியே பயிரை மேயலாமா ? நோயாளிகளைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவர்களே வீதிக்கு வந்துப் போராடினால் உயிருக்காகப் போராடும் நோயாளிகளின் நிலை என்னவாகும் ? மருத்துவர்கள் போராட்டம் மேற்கொள்வதால் நோயாளிகள் பலர் இறக்கும் அவல நிலையை நம் நாட்டில்தான் பார்க்க முடிகிறது. அப்படியெனில் மனித உயிர் இன்று மலிவாகப் போய்விட்டதா? "பணத்தைக் கட்டினால்தான் முதலுதவியே செய்வேன்" என்று அடம் பிடிக்கும் மருத்துவர்களின் கூட்டத்தில், 5 ரூபாய் மருத்துவராக வலம் வருபவர் 84 வயதான ராமமூர்த்தி என்பவர். நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைத் தம் சொந்த நகரமாகக் கொண்டவர்.

விரட்டிய வறுமை, பசித்திருந்த பொழுதுகளையும் மறந்து பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் நெடுந்தூரம் நடந்து சென்று பள்ளிப் படிப்பை முடித்தார். 1958ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பையும் நிறைவு செய்தார். உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இவர், ஓய்வு நேரங்களில் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு நடந்தே சென்று இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். இவருக்கு ஓய்வு என்பதே இல்லை. வாரத்தில் ஏழு நாள்களுமே நோயாளிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

மருத்துவர் ராமமூர்த்தி ஏழைக் குடும்பத்தில் பிறந்தமையால், ஓர் ஏழை எந்தளவுக்கு துன்பப்படுவார் என்பதை முழுமையாக அனுபவித்தவர். எனவே, நோயென்று வருபவர் எவரிடமும் முழுமையான பணத்தை வாங்கக்கூடாது என முடிவு செய்தார்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தமது வீட்டிலேயே சிறிய கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் எவரிடமும் கட்டணம் மருத்துவக் எதையும் பெற்றுக்கொள்வதில்லை. தொடக்கத்தில் ஒரு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த இவருக்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். அதுவும் அவர் எவரிடமும் கைநீட்டிப் பணம் பெறுவதில்லை. மக்கள் தாங்களாகவே மேசையின்மீது பணத்தை வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். “பணம் இல்லாமல் பலரும் வருவார்கள். அவர்களின் சுமைகளை அதிகரிக்க விரும்பவில்லை. தினமும் கிடைக்கும் 600 ரூபாயே எனக்குப் போதுமானதாக இருக்கிறது” என்று பெருந்தன்மையோடு கூறுகிறார் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள்.

ஏழை மக்களுக்குக் குறைந்த பணத்திலும் தரமான மருத்துவச் சிகிச்சைச் சாத்தியம்தானே!


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image