பேராசைக்காரன் | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
ஒரு கிராமத்தில் பால்காரன் ஒருவன் இருந்தான். தினந்தோறும் பால் கறந்து அருகில் உள்ள நகருக்கு எடுத்துச்சென்று விற்று வருவான். அங்குள்ள பங்குத்தந்தையின் இல்லத்திற்கும் பால் கொடுத்து வந்தான். அவனது கடின உழைப்பையும், நேர்மையான நடத்தையையும் கவனித்த பங்குத்தந்தை, அவனை 'உண்மையுள்ள பால்காரன்' என்று உரிமையோடு பாராட்டினார்.
வாழ்க்கையில் நல்லவர்களுக்கும் நேர்மையாளர்களுக்கும் அதிகமான சோதனை வரும் என்று கூறுவார்கள். ஆண்டவர் இயேசுவும் சோதிக்கப்பட்டார் என்று நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். பால்காரனுக்கும் பெரிய பணக்காரனாக வேண்டும் என்று ஆசைவந்தது. அன்றிலிருந்து பாலில் தண்ணீரைக் கலந்து விற்று அதிகமாகப் பணம் சம்பாதிக்கத் தொடங்கினான். இதைக் கவனித்த மக்கள், பால்காரனை நோக்கி, "ஏன் பாலில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "பசுமாடுகள் பால் கறப்பதற்கு முன் தண்ணீர் நிறைய குடித்துவிடுகின்றன" என்று கூறி மக்களை ஏமாற்றி வந்தான்.
பங்குத்தந்தை அவனை அழைத்து "பால்கார ஐயா, பாலில் கலக்கும் தண்ணீர் சுத்தமானதா அல்லது அசுத்தமானதா?" என்று வினவ, அவன் "சுத்தமான ஆற்றுத் தண்ணீரைத்தான் கலக்குகிறேன்" என்றான். “நீ ஆற்றுத்தண்ணீரைக் கலந்து விற்றால் சம்பாதிக்கிற பணம் முழுவதும் ஆற்றுத்தண்ணீரோடு போய்விடும்" என்றார் பங்குத்தந்தை. அவர் கூறியதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தண்ணீர் கலந்த பாலை விற்றான்.
மாத இறுதியில், மாதம் முழுவதும் விற்ற பால் பணத்தை, ஒரு துணிப்பையில் போட்டுக்கொண்டு, வீட்டுக்குப் போகும் வழியில் பால் பாத்திரத்தைக் கழுவுவதற்காக, பணப்பையை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு, தண்ணீரில் இறங்கி பால் பாத்திரத்தைக் கழுவினான். அந்த நேரத்தில், குரங்கு ஒன்று அருகில் இருந்த மரத்திலிருந்து இறங்கி, பணப்பையைக் தூக்கிக் கொண்டு மரத்தில் ஏறிக்கொண்டது. இதைச் சற்றும் எதிர்பாராத பால்காரனுக்கு பெரும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது.
அந்த நேரத்தில், புத்தியை உபயோகித்தான்.'குரங்கானது மனிதன் செய்வதை அப்படியே செய்யும்' என்பது நினைவுக்கு வந்தது. தன் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து ஆற்றங்கரையில் எறிந்தான். உடனே குரங்கு தன் கையில் இருந்த பணப்பையைத் தூக்கி ஆற்றுத்தண்ணீரில் எறிந்துவிட்டது. பணம் முழுவதும் ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதைப் பார்த்த பால்காரன் வருத்தத்தோடு பங்குத்தந்தை கூறியதை நினைவு கூர்ந்தான்."அநியாயமாகச் சம்பாதிக்கும் பணம் ஆற்றுத் தண்ணீரோடு போய்விடும்."
பேராசை பெரு நஷ்டம்.
மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய். (நீமொ 19:18)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
