ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் 60ஆம் ஆண்டு விழா தொடக்கம்: 2027 திருத்தந்தை புனித ஆறாம் பவுலுக்கு அர்ப்பணம் | Veritas Tamil

ஆசிய மக்களுக்குச் சேவையாற்றி வரும் கத்தோலிக்க பல்லூடக அமைப்பான வானொலி வேரித்தாஸ் ஆசியா (RVA), தனது 60ஆம் ஆண்டு விழாவான RVA@60 கொண்டாட்டங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டைத் திருத்தந்தை புனித ஆறாம் பவுலுக்கு அர்ப்பணித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மெட்ரோ மணிலா, குவேசோன் நகரில் உள்ள வானொலி வேரித்தாஸ் ஆசியாவின் மூன்று புனிதர்கள் சிற்றாலயத்தில், அக்டோபர் 9ஆம் நாள் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியின்போது இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

மணிலா பேராயர் கர்தினால் ஜோசே அட்வின்குலா அவர்கள் திருப்பலிக்குத் தலைமை தாங்கினார். சான் பாப்லோ ஆயர் மார்செலினோ அந்தோனியோ “ஜூனி” மராலித் இளையவர், பாசிக் ஆயர் மைலோ ஹூபர்ட் கிளாடியோ வெர்காரா, நோவாலிச்சஸ் ஆயர் ரொபேர்டோ கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆயர் ஜோசே சில்வா ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

வானொலி வேரித்தாஸ் ஆசியாவின் மத்திய அலுவலகத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மற்றும் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழிப்பணி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட ஏறத்தாழ 100 பேர் இத்திருப்பலியில் பங்கேற்றனர்.

இறுதி ஆசியைப் பெறுவதற்கு முன்பாக, திருப்பலியின் நிறைவில் நடைபெற்ற நிகழ்வில், வானொலி வேரித்தாஸ் ஆசியாவின் பணியாளர்கள், மொழிப்பணி பிரதிநிதிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, கடந்த 60 ஆண்டுகளாக இவ்வமைப்பு ஆற்றிவரும் நற்செய்திப் பணியை நினைவுகூர்ந்தனர்.

இந்நிகழ்வுக்கு முன்னதாக, கர்தினால் அட்வின்குலா அவர்களின் தலைமையில் நன்றியறிதல் மற்றும் அர்ப்பணிப்பு இறைவேண்டல் நடைபெற்றது. கடந்த 60 ஆண்டுகளாக வானொலி வேரித்தாஸ் ஆசியா, “ஆசிய மக்களிடையே நற்செய்தியின் குரலாகவும், ஒன்றிப்பின் பாலமாகவும், நம்பிக்கையின் தூதராகவும்” ஆற்றிய பணியை நினைவுகூர்ந்த இவ்விறைவேண்டல், புதியதொரு பணிக்காலத்தில் அடியெடுத்து வைக்கும் இவ்வமைப்பின் மறைப்பணி ஆர்வத்தை இறைவன் புதுப்பிக்க வேண்டும் என்று வேண்டியது.

மேலும், 2027ஆம் ஆண்டைத் திருத்தந்தை புனித ஆறாம் பவுலின் பரிந்துரைக்கு ஒப்படைத்த இறைவேண்டலில், அவரது திருத்தூதுப் பணி ஆர்வம் வானொலி வேரித்தாஸ் ஆசியாவைத் துணிவுடன் கிறிஸ்துவைப் பறைசாற்றவும், திருஅவைக்கு உண்மையுடன் பணியாற்றவும், ஆசியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நற்செய்தியின் ஒளியைக் கொண்டு செல்லவும் ஊக்குவிக்க வேண்டும் என்று வேண்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கர்தினால் அட்வின்குலா அவர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளுடன் இணைந்து தொடக்க விசையை அழுத்தினார். இதன் மூலம் RVA@60 கொண்டாட்டங்களும், 2027ஆம் ஆண்டைத் திருத்தந்தை புனித ஆறாம் பவுலுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.

பின்னர், வானொலி வேரித்தாஸ் ஆசியாவின் பயணத்தை விளக்கும் குறுகிய ஒளி-ஒலி காட்சிப்பதிவு திரையிடப்பட்டது. வானொலியாகத் தொடங்கி, இன்று பல மொழிகளில் இணையதளங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகச் செயல்படும் பல்லூடக அமைப்பாக அது வளர்ந்துள்ள பயணத்தை இக்காட்சிப்பதிவு எடுத்துரைத்தது. தேசிய, பண்பாட்டு மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து ஆசிய மக்களிடம் நற்செய்தியின் குரலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அதன் தொடக்ககால நோக்கமும் நினைவுகூரப்பட்டது.

வானொலி வேரித்தாஸ் ஆசியாவின் வரலாற்றில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் ஆற்றிய பங்கும் இக்காட்சிப்பதிவில் எடுத்துரைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு, வானொலி வேரித்தாஸ் தொடங்குவதற்கு அவர் ஆசி வழங்கினார். நற்செய்தியை அறிவிப்பதில் நவீனத் தகவல் தொடர்புச் சாதனங்கள் கொண்டுள்ள ஆற்றலை அவர் அங்கீகரித்தார்.

மேலும், 1970ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள், மணிலாவில் உள்ள வானொலி வேரித்தாஸ் ஆசியாவிற்கு வருகை தந்த திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், ஆசிய மக்களிடம் உரையாற்றினார். கிறிஸ்துவைப் பறைசாற்றவும், நற்செய்தியின் அன்பின் வழியாக மக்களிடையே உறவுகளை வளர்க்கவும் இவ்வமைப்பை ஊக்குவித்தார்.

குறுகிய அலைவரிசை வானொலியிலிருந்து இணையதளங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வரை வானொலி வேரித்தாஸ் ஆசியா மேற்கொண்டுள்ள வளர்ச்சியையும் இக்காட்சிப்பதிவு எடுத்துக்காட்டியது. தகவல் தொடர்பு முறைகள் மாறிவந்தாலும், புதிய தலைமுறையினரைச் சென்றடையும் அதன் நற்செய்திப் பணி தொடர்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

வானொலி வேரித்தாஸ் ஆசியா தனது 60ஆம் ஆண்டு நிறைவை நெருங்கும் நிலையில், 2027ஆம் ஆண்டைத் திருத்தந்தை புனித ஆறாம் பவுலுக்கு அர்ப்பணிப்பது, அதன் தொடக்கத்திற்குத் தூண்டுதலாக அமைந்த மறைப்பணி நோக்கை மீண்டும் நினைவூட்டுகிறது. உண்மை, நம்பிக்கை மற்றும் நற்செய்தியின் செய்தியை ஆசியக் கண்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், குறிப்பாக விளிம்புநிலை மக்களிடமும் கொண்டு செல்லப் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு இக்காட்சிப்பதிவு வானொலி வேரித்தாஸ் ஆசியா சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.

இவ்வாண்டு நிறைவுக் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, அக்டோபர் 5 முதல் 8 வரை, காவித்தே மாகாணத்தின் சிலாங் நகரில் உள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் மேரி, கேர்ல்ஸ்டவுனில் மொழிப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கான தீவிரப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 9ஆம் நாள் காலை, குவேசோன் நகரில் உள்ள வானொலி வேரித்தாஸ் ஆசியாவின் தலைமையகத்தில் ஆண்டுக்கான நிதிநிலைத் திட்டக் கூட்டமும் நடைபெற்றது.

RVA@60 தொடக்க நிகழ்வு, வானொலி வேரித்தாஸ் ஆசியாவின் வரலாற்றைக் கொண்டாடுவதுடன், நற்செய்தியைத் தொடர்புகொள்வதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும், ஆசிய மக்களிடையே ஒன்றிப்பை வளர்ப்பதிலும் தனது அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

Tamil Survey Popup Image