மனிதா உன்னால் என்ன பயன்? || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.05.2024

மனிதா உன்னால்
என்ன பயன்?

மனிதன் இல்லாத
உலகம் பேரழகு.
மனிதன் வந்த பின்
நம் பூமிக்குப் பேரழிவு.

மனிதா!
உன்னைக் கூட்டிக்கழித்தால்
ஆறடி உயரம்.
உன் உடலின் மிச்சம்
யாருக்கு உபயம்.?

காலை நீட்டி மண்ணில்
படுக்கும் வரைக்கும்
எத்தனை நாடகம்
பேராசைகள் ஆயிரம்.

உன்னைத் தவிர வெறெதுவும்
இந்த மண்ணை 
மலடாய் மாற்றவில்லை.

தன்னை ஈன்ற தாய்மடியை
திராவகம் வீசி எரிக்கவில்லை.

நீ எட்டு வைத்தத் தடங்களிலெல்லாம்
பச்சையம் இழந்தது தாவரங்கள்.

வெளிச்ச நதியைக் கறுப்பாக்கி
நாகரீகம் உமிழ்ந்த எச்சங்கள்.

உயிர் விளைந்த வயல்களிலெல்லாம்
ஒட்டகம் மேயும் பரிதாபம்.

பூமியின் இதய ஆழத்திலே
மீத்தேன் குழாய்களேத்
துளை போடும்.

மணல் சலித்தே
பணம் திருடினாய்.
பூக்களில் நுழைந்தே
தங்கம் தேடினாய்.

இதயத்தை இரும்பாய்
மாற்றிக்கொண்டே
எதையும் பொருளாய்ப்
பார்க்கின்றாய்.

மூளை முழுவதும் சுயநலம்.
வளங்கள் எல்லாம் வியாபாரம்.

தேவையைச் சொல்லித்
திருடித் தின்பது
இயற்கைக்கு செய்யும்
பெரும்பாவம்.

அச்சிட்ட நோட்டுக்குள்ளே
அடைபட்டுக் கிடக்குது
மனித இனம்.

உப்பிட்ட மண்ணுக்கிங்கே
துரோகம் செய்வது அவமானம்.

விலங்காகவே
நீ இருந்திருந்தால்
பூமியின் கற்பு மீண்டிருக்கும்.

குரங்காகவே
வாழ்ந்திருந்தால்
குவலயம் அழகாகவே
இருந்திருக்கும்.

வருந்தி இன்னும் திருந்தாவிட்டால் உன் தலைமுறை தளைக்க வாய்ப்பில்லை.

செய்த தவறை
உணராவிட்டால்
செய்த வினையின் பாவம் விடுவதில்லை.

சாமானியன்.                  
ஞா சிங்கராயர் சாமி.                   
கோவில்பட்டி