இறைவனின் கொடையை வாழ்வாக்குவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

21 அக்டோபர் 2026
 
எபேசியர் 3: 2-12
லூக்கா  12: 39-48
 
 
 
இறைவனின் கொடையை வாழ்வாக்குவோம்!


முதல் வாசகம்.


எபேசியருக்கு பவுல் எழுதிய திருமுகத்தின் தொடர்ச்சியில், இன்று கடவுளின் அருளால்தான் பவுல் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியைப் பெற்றார் என்றும்,  இயேசு கிறிஸ்துவின் மூலம் பிற இன மக்களும் (புறவினத்தாரும்)  யூதர்களைப் போலவே கடவுளின் வாக்குறுதிகளில் பங்குபெறுகிறார்கள் என்பதே கடவுளின் மறைபொருள் என்பதையும், கிறிஸ்துவின் மூலம் அனைவரும் நம்பிக்கையின் நிமித்தம் கடவுளோடு நெருங்கிய உறவு கொள்கிறார்கள் என்றும் அறிவிக்கிறார். 

நற்செய்தி.


இன்றைய நற்செய்தியி்ல், இயேசு, மீண்டும் ஓர் உவமையின் வாயிலாக பேசுகிறார். உடனிருந்து பேதுரு சற்று குழப்பதோடு,  “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டபோது, இயேசு, ஆண்டவர் வரும் நேரம் எப்போது என்று தெரியாது என்பதால் எப்போதும் விழிப்புடனும் தயாராகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். தன் பணியாளர்களுக்குப் பொறுப்புகளை ஒப்படைக்கும் தலைவன், அவர்கள் உண்மையுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். 


அதுபோலவே, கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளையும் திறமைகளையும் நாம் நேர்மையுடன் பயன்படுத்த வேண்டும். அதிகமாகப் பெற்றவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படும் என்பதையும் இயேசு எடுத்துரைக்கிறார்.


சிந்தனைக்கு.

“எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு
உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில்
கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்" (லூக்கா 12:39)

ஒருமுறை பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் எனும் மக்கள் கவிஞர் ‘விழிப்புணர்வு’ குறித்த  அவரது பாடல் ஒன்றில் பின்வருமாறு எழுதினர்,


‘விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்’


ஆம், கொடுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிடுவார்’ என்பது மறுக்கமுடியாத உண்மை. கடவுள் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை உண்மையுடனும் அன்புடனும் நிறைவேற்றி, ஆண்டவரைச் சந்திக்க எப்போதும் தயாராக வாழ வேண்டும் என்பது இன்றைய மையச் செய்தியாக உள்ளது. ஏமாற்று வேலையும் தில்லுமுல்லும் சிறந்த சீடத்துவத்திற்கு ஆகாது.


இயேசு இந்த  போதனையின் முடிவில்  “அதிகமாக ஒப்படைக்கப்பட்டவரிடமிருந்து அதிகமாகவே எதிர்பார்க்கப்படும்; இன்னும் அதிகமாக ஒப்படைக்கப்பட்டவரிடமிருந்து அதைவிட அதிகமாகக் கேட்கப்படும் ” என்கிறார்.  ஒருவருக்குக் கடவுள் அதிகமான திறமைகளைக் கொடுத்திருக்கலாம். இன்னொருவருக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்திருக்கலாம். மற்றொருவருக்கு மக்களை வழிநடத்தும் ஆற்றலையும், பிறருக்குச் சேவை செய்யும் வாய்ப்பையும் கொடுத்திருக்கலாம். 


இவை அனைத்தும் நமக்காக மட்டுமே கொடுக்கப்பட்டவை அல்ல. அவற்றைப் பயன்படுத்தி நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இதுவே நம்மிடமான எதிர்பார்ப்பு. இதற்கும் மேலாக, கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது வெறும் கடமையைச் செய்வதை மட்டுமல்ல; அன்பு நிறைந்த இதயத்துடன் அதைச் செய்வதுமாகும். சுயநலமானது அலகை விதைக்கும் விதை. அவன் திருடன். எப்போது நம்மில் சுயநல விதையை விதைப்பான் என்று தெரியாது. விழிப்பாயிருந்தால் அவனது செயலைத் தடுக்கலாம். 


முதல் வாசகத்தில், பவுல் அடியார் தனக்குக் கிடைத்த இறையருளைப் பயன்படுத்தி, கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிற இனத்தவருக்கும் அறிவித்ததை அறிகிறோம்.  இறைவன் அவருக்குக் கொடுத்த அழைப்பைத் தனக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல், பிறரின் நலனுக்காகப் பயன்படுத்தினார்.அவ்வாறே, நாம் ஏற்றிருக்கும் இந்த கிறிஸ்தவ வாழ்வின் நோக்கம் பாவம்  செய்யாமல் இருப்பது மட்டுமல்ல. கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அருள்களால், கொடைகளால்  நமது வாழ்க்கையை முழுமையாக அவருக்கு அர்ப்பணிப்பதிலும் அடங்குகிறது. ‘விழிப்பாயிருங்கள்’ என்பதும் ‘அஞ்சாதீர்கள்’  என்பதும் இயேசுவின் நமக்கான இரு அடிப்படை போதனைகள். 


இறைவேண்டல்.


ஆண்டவரே, உமது வருகைக்காக விழிப்புடன் வாழவும், என்னிடம்  ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையுடனும் அன்புடனும் நிறைவேற்றவும் என்னை கனிவுடன் வழிநடத்துவீராக. ஆமென்.



ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image