உலகச் செல்வமல்ல, விண்ணகச் செல்வம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

19 அக்டோபர் 2026
 
எபேசியர் 2: 1-10
லூக்கா  12: 13-21

 
உலகச் செல்வமல்ல, விண்ணகச் செல்வம்!


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், பவுல் அடிகள்  குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு இறந்தவர்களாய், உலகத்தின் வழியிலும் சொந்த ஆசைகளின்படியும் இருந்த  மனிதர்களை எவ்வாறு,  கடவுள் தம்முடைய மிகுந்த அன்பினாலும் இரக்கத்தினாலும் உயிர் பெறச் செய்தார் என்பதை   எடுத்துரைக்கிறார். நாம் பாவத்தில் இருந்தபோதிலும், கடவுள் நம்மீது மிகுந்த அன்புகூர்ந்தார். இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மை உயிர்ப்பித்து, அவரோடு வாழச் செய்தார் என்று பவுல் அறிவுறுத்துகிறார்.


எனவே, இதனிமித்தம் நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய படைப்பாக இருக்கிறோம். கடவுள் முன்கூட்டியே ஆயத்தப்படுத்திய நற்செயல்களைச் செய்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம்  என்கிறார். 


நற்செய்தி.


இன்று, மற்றொரு உவமையின் வாயிலாக, இயேசு பேராசையைப் பற்றியும், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் பற்றியும் நமக்குக் கற்பித்ததை லூக்கா பதிவுச் செய்துள்ளார்.


சொத்தைப் பங்கிடுவது தொடர்பாக ஒருவர் இயேசுவிடம் உதவி கேட்டபோது,  இயேசு எல்லாவிதமான பேராசையைக் குறித்தும் எச்சரித்தார். ஒருவருடைய வாழ்க்கை அவர் வைத்திருக்கும் செல்வத்தின் மிகுதியைப் பொறுத்ததல்ல என்பதை எடு்த்துரைக்க பின்வரும் உவமையைக் கையாள்கிறார்.  


ஒரு செல்வந்தனுடைய நிலம் மிகுந்த விளைச்சலைக் கொடுத்தது. அவன் தன் தானியங்களைச் சேமித்து  வைக்கப் இருப்பதைவிட பெரிய களஞ்சியங்களைக் கட்டத் திட்டமிட்டான். பின்னர், தன்னுடைய செல்வத்தை நம்பி, பல ஆண்டுகள் கவலையின்றி வாழலாம் என்றும் கனவு கண்டான் என்றும்,  கடவுள் அவனை நோக்கி, அந்த இரவே அவனுடைய உயிர் எடுக்கப்படும் என்று கூறினார் என்றும்,  அவன் இறந்தபின் அல்லும் பகலும் உழைத்து, அரும்பாடுபட்டு   சேர்த்து வைத்த செல்வம் அவனுக்கு என்ன பயன் தரும்? என்ற கேள்வியை சிந்தனைக்கு முன்வைக்கிறார்.

 
சிந்தனைக்கு.

‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப்
பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ (லூக்கா 12:20)


நாம் பணம்  மற்றும் சொத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்ப்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தால் அது நமது அழைப்புக்கேற்ற வாழ்வாகாது.  நமது செல்வங்கள், அவை எவ்வகையாக இருந்தாலும், அவை தற்காலிகமானவைதான்.  இதனை உணர்த்தும் வகையில் யோபு “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்” (யோபு 1:21) எ்ன்றார். அதுதான் உண்மை. 


கடவுளை அன்பு செய்து,  அவர்மீது நம்பிக்கை வைத்து, பிறருடன் பகிர்ந்து வாழ்வதும், ஏழைகளுக்கு உதவுவதும், நற்பணகளில் ஈடுபடுவதும் கிறிஸ்தவ வாழ்வுக்கு இன்றியமையாதவை. இயேசுவின் இன்றைய கேள்வியான, ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப்
பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்பது
சிந்திக்க வேண்டிய கேள்வி.


இங்கே, ஒன்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டாம் என்றோ, வீடுவாசல் அல்லது நிலபுலம்   வாங்க வேண்டாம் என்றோ இயேசு வலியுறுத்தவில்லை. மாறாக, எதிர்காலத்திற்குத் தேவை என்று நாளும் பொழுதும் உழைத்து உழைத்து ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டாம் என்று கூறுகிறார். நாளுக்கு நாள், நாம் சேர்க்கும் செல்வம் (சொத்து)  நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைப்பது இயல்பு.  ஆனால் அடுத்து நமக்கு நிகழவிருக்கும்  எதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது.


இயேசுவின் உவமையில், அந்த மனிதனின் தவறு அவன் செல்வந்தனாக இருந்தது அல்ல. தன்னிடம் இருந்த செல்வத்தையே தனது எதிர்காலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முழுமையான உத்தரவாதமாக நினைத்ததுதான். கூர்ந்து வாசித்தால், இன்றைய இரு வாசகங்களும்  நமக்கு ஒரே செய்தியைத் தருகின்றன: கடவுளின் அருளைப் பெற்றுள்ள நாம், உலகச் செல்வத்தை மட்டும் தேடாமலும் அதை மட்டும் நம்பி இராமலும், அன்பு, இரக்கம், பகிர்வு, புண்ணிய செயல்கள் ஆகியவற்றில் செல்வந்தர்களாக வாழ வேண்டும் என்பதாகும். முன்பு கூறியதைப்போல், பணம் சம்பாதிப்பதும் குடும்பத்தைக் கவனிப்பதும் தவறல்ல. ஆனால் பணத்திற்காகக் கடவுளையும் மனிதநேயத்தையும் மறந்துவிடக் கூடாது. கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகள், செல்வம், நேரம் ஆகியவற்றைத் தேவையுள்ளவர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்துவோமானால், நாம் தான் இவ்வுலகில் மறு+கிறிஸ்து. 

 
நல்வழியில் இப்படியொரு செய்யுள் உண்டு. 


"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; - கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்."


ஆம், இரவும் பகலும் பாடுபட்டுத் தேடிச் சம்பாதித்த பணத்தைப் பிறருக்குக் கொடுக்காமலும், தானும் அனுபவிக்காமலும் பூமியில் புதைத்து அல்லது சேர்த்து, சேர்த்து  வைத்திருக்கும் அறிவில்லாத மனிதர்களே! இந்த உடலை விட்டு உயிர் பிரிந்தபின், நீங்கள் சேர்த்து வைத்த அந்தப் பணத்தை யார் அனுபவிப்பார்கள்? எனவே வாழும் காலத்திலேயே அதனை நல்வழிகளுக்குப் பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்துகிறது இந்த செய்யுள்.


இறைவேண்டல்.

அன்பு ஆண்டவரே,  உமது அருளாலும் அன்பினாலும் என்னை வழிநடத்துபவரே, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதில் வரலாறு படைத்த சீடராக நான் வாழ எனக்கு அருள்வீராக. ஆமென்.


ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image