இறை தீர்மானத்தில் நிறைவு கொள்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 20ஆம் வாரம், புதன்
18 ஆகஸ்டு 2026,
எசேக்கியேல் 34: 1-11
மத்தேயு 20: 1-16
இறை தீர்மானத்தில் நிறைவு கொள்வோம்!
முதல் வாசகம்.
இந்தப் பகுதியில், இஸ்ரயேலின் ஆயர்களாகிய தலைவர்களை கவுள் கடுமையாகக் கண்டிக்கிறார். மக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவர்கள், தங்களுடைய சுயநலத்திற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.
அவர்கள், மக்களைப் பராமரிக்காமல், தங்களையே கவனித்துக் கொண்டனர். பலவீனமானவர்களைப் பலப்படுத்தவும், நோயுற்றவர்களை குணப்படுத்தவும், காயமடைந்தவர்களைத் தேற்றவும் அவர்கள் தவறினர். அத்தோடு, வழிதவறியவர்களைத் தேடாமல் விட்டதால், மக்கள் சிதறிப் போய் பாதுகாப்பற்றவர்களாக ஆனார்கள். இதனால், அந்தத் தலைவர்களுக்கு எதிராக கடவுள் நியாயத்தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கிறார்.
நிறைவாக, கடவுள் தாமே தமது ஆடுகளைத் தேடி, அவற்றை கவனித்து வழிநடத்துவேன் என்று கூறுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு விண்ணக அரசை ஒரு திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளருக்கு ஒப்பிட்டு ஒரு உவமையைச் சொல்கிறார்.
ஒரு நில உரிமையாளர் தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்களை வெவ்வேறு நேரங்களில் அழைக்கிறார். சிலர் அதிகாலை முதல் வேலை செய்கிறார்கள்; சிலர் பின்னர், சிலர் நாள் முடிவதற்கு சற்றுமுன்பும் வேலைக்கு வருகின்றனர். நாள் முடிவில், அனைவருக்கும் ஒரே கூலி வழங்கப்படுகிறது.
இதில், அதிக நேரம் வேலை செய்தவர்கள் அதைக் கண்டு முணுமுணுக்கிறார்கள். ஆனால் உரிமையாளர், தான் ஒப்புக்கொண்ட கூலியைத் தந்ததாகவும், தன்னுடைய பொருளைத் தன் விருப்பப்படி கொடுக்க உரிமை உள்ளதாகவும் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் ஆழ்ந்து வாசித்தால், கடவுள் தமது மக்களைத் தேடி, அவர்களைப் பாதுகாத்து, அன்புடன் வழிநடத்துகிறவராக உள்ளார் எனும் செய்தி மேலோங்கி உள்ளது.
எசேக்கியேல் இறைவாக்கினர், இஸ்ரயேலின் தலைவர்கள் அல்லது அரசர்களை கடுமையாகக் கண்டிக்கிறார். மக்களை வழிநடத்த வேண்டிய தலைவர்கள் தங்களுடைய நலனை மட்டுமே பார்த்தார்கள். பலவீனமானவர்களைப் பலப்படுத்தவில்லை; நோயுற்றவர்களைப் பராமரிக்கவில்லை; வழிதவறியவர்களைத் தேடவில்லை. எனவே, இத்தகையோரின் கண்ணீரைத் துடைக்க “நான் என் ஆடுகளைத் தேடுவேன்” என்று ஆண்டவர் கூறுகிறார்.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுக்கொள்கிறோம்: ஆம் கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. நாம் அவரைவிட்டு விலகினாலும், அவர் நம்மைத் தேடி வருகிறார்.
நற்செய்தியில், திராட்சைத் தோட்ட உரிமையாளர் வெவ்வேறு நேரங்களில் தொழிலாளர்களை வேலைக்கு அழைக்கிறார். சிலர் அதிகாலையிலேயே வேலைக்கு வருகின்றனர்; சிலர் பகலின் பிற்பகுதியில்; இன்னும் சிலர் கடைசி நேரத்தில் வருகின்றனர். ஆனால் நாள் முடிவில், அனைவருக்கும் ஒரே கூலி வழங்கப்படுகிறது. இதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதலில் வேலை செய்தவர்கள் இதைக் கண்டு வருத்தப்படுகிறார்கள். ஆனால் உரிமையாளர், “நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நாம் ஒப்புக்கொண்ட கூலியை உனக்குக் கொடுத்தேன்” என்று கூறுகிறார். இங்கே இயேசு நமக்கு தந்தையாம் கடவுளின் இரக்கத்தைப் பற்றி கற்றுக்கொடுக்கிறார். நமது பார்வையில் ஒருவர் அதிகம் செய்திருக்கலாம், இன்னொருவர் குறைவாகச் செய்திருக்கலாம். ஆனால் கடவுளின் அருள் என்பது நாம் சம்பாதிக்கும் ஊதியம் அல்ல; அது அவருடைய அன்பான கொடை. அதை யாருக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார்
அடுத்து, நம்மில் பலருக்கு மற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் அருளைப் பார்த்துப் பொறாமை கொள்வது இயல்பாகிவிட்டது. சில நேரங்களில், “நான் பல ஆண்டுகளாக இப்பங்கில் சேவை செய்கிறேன்; எனக்கு எதுவும் என் விருப்பத்திற்கு ஏற்ப அமையவில்லை என்றும் கூப்பாடு போடுகிறோம். இன்றைய நற்செய்தி நமக்கு சொல்வது: கடவுளின் அருளை அளந்து பார்க்கக் கூடாது. நமக்கானதை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
ஆகவே, நம்மைச் சுற்றியுள்ளவர்களைத் தேடுவோம். மனம் புண்பட்டவர்களைத்ஏற்றுவோம், வழிதவறியவர்களை மீண்டும் அழைப்போம்.
மற்றவர்களுக்கு கிடைக்கும் இறைவனுடைய அருளைக் கண்டு மகிழ்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என்னை நல்ல மேய்ப்பராக மாற்றும். என்னைப்போலவே மற்றவர்களையும் அன்புடன் ஏற்றுக்கொள்ளும் இதயத்தைத் தாரும். உமது இரக்கத்தைப் பெற்ற நான், அதே இரக்கத்தை மற்றவர்களுக்கும் வழங்க அருள் புரிவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா) ஜெனிசிஸ் திருவிவிலிய கலவி மையம் +60122285452
