அணுகுமுறை | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

அணுகுமுறை...

அணுகுமுறை அன்பானதாயின் 
அனுபவங்கள் அருள் நிறைந்தவையாகும்;
எளிமையானதாயின் உறவுகள் மருள் நீங்கியவையாகும்!

நேர்மறையான அணுகுமுறை நேர்த்தியான வாழ்வுக்குப் பாதை அமைக்கும். எதிர்மறையான அணுகுமுறை மகிழ்வான மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்!

எப்போதும் செய்வதையே நீங்கள் இப்போதும் செய்தால், எப்போதும் பெறும் 
 முடிவுகளையே இப்போதும் பெறுவீர்கள். உங்கள் அணுகுமுறையை மாற்றினால், முடிவுகள் மாறுமே!

உங்கள் முடிவுகளில் தீர்க்கமாய் இருங்கள்; ஆனால், அணுகுமுறையில் நெகிழ்வுத்தன்மையோடு இருங்கள். விரும்பிய விளைவுகள் விந்தையாய் சிந்தை குளிரச் செய்யும்!

வாழ்வை நீங்கள் எப்படி அணுகுகிறீர்களோ அப்படியே உங்கள் வாழ்வு அமையும். 'என்னால் முடியுமா?' என்னும் ஐயம் நிறை அணுகுமுறையினும் 'என்னால் முடியும்' என்னும் நம்பிக்கை நிறை அணுகுமுறை ஏற்றமிகு வாழ்வுக்கு ஏணியாகும்!

சோதனைகள் சூழ் வாழ்க்கையையும் சரியான அணுகுமுறை சாதனை நிறைந்ததாக்கும். வேதனைகளையும் வென்று வெற்றி பெறச் செய்யும்!

வாழ்க வளமுடன் நலமுடன்!!!

எழுத்து

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.