மகிழ்வே மனதின் நிறைவு | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. கவலை என்பது ஒரு வலை. பூச்சிகள் வலைக்குள் சிக்கிக்கொள்வது போல் கவலைக்குள் பலர் சிக்கிக்கொள்கின்றனர். எழுவோம் என்பதில் நம்பிக்கை இருந்தால் விழுதல் என்பது சருகல்ல. கவலைகள், துயரம், தோல்விகள் யாவும் வானில் அலையும் மேகங்கள் கலைவது போல கலைவதும் நிச்சயம். அழுகின்ற வினாடியும் சிரிக்கின்ற நிமிடங்களும் நம் வாழ்க்கை என்ற காலக் கடிகாரத்தில் நிரந்தரமாக அமைவதில்லை. பிறகு எதற்கு நம்மில் இத்தனை சோகங்கள்? செய்வது எல்லாமே தெய்வம் தான். அதிலே நம்முடைய ஒரே பங்கு இயேசுவின் பால் உள்ள இறைநம்பிக்கை தான். அதை ஆழப்படுத்த முயற்சிப்போம். நம்மைத் தவிர யாராலும் இவ்வுலகில் நம்மை மகிழ்விக்க முடியாது. எனவே, சோகம் விடுத்து மகிழ்வைச் சொந்தமாக்கிக் கொள்வோம். துன்பம், வேதனை, கவலை இவையெல்லாம் மனித வாழ்வின் ஒரு பகுதி. நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதற்கு இவையெல்லாம் நிரந்தரமல்ல என்பதை நம் மனதில் இருத்திக் கொள்வோம். எனவே நம்மிடம் உள்ள துக்கங்களை, மனப்பாரங்களை அகற்றிவிட்டு எப்போதும் எல்லாச் சூழலிலும் மகிழ்ச்சியுடைய மனிதர்களாக வாழ நம்மை பயிற்றுவிப்போம். அதுவே நம்மை நலமான வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தன் வாழ்நாளில் 14 முறை மின்னல்களால் தாக்கப்பட்டது. பல பனிச் சரிவுகளையும், புயல்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு கம்பீரமாக நின்றது. ஒருநாள் ஒரு வண்டுக்கூட்டம் வந்து தாக்கி மரத்தின் உள்ளார்ந்த வலிமையை அழித்தது. காலத்தால் அழியாத, மின்னல்களால் சாய்க்க முடியாத, பெரும் புயலை எதிர்கொண்ட மரம் கடைசியில் மனிதன் தன் கட்டை விரலுக்கு மத்தியில் வைத்து நசுக்கி எறியக்கூடிய மிகச் சிறிய வண்டுகளால் வீழ்ந்தது. நம்மில் பலரும் இந்த மரத்தைப் போலத்தான் வாழ்வில் ஏற்படும் புயல்களையும், மின்னல்களையும் எப்படியோ சமாளித்து, கவலை என்னும் சிறு வண்டுகள் இதயத்தைத் துளைத்திட அனுமதித்து. கடைசியில் வீழ்ந்து போகின்றோம். ஒவ்வொன்றிற்கும் தீர்வு நிச்சயம் உண்டு. எதையும் இயல்பாக எடுத்துக்கொண்டால் எளிமையாகிவிடும் என்பதை உணர்ந்து கொண்டு கவலைகளை தூக்கி தூர எறிவோம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS