புதிதாய் பிறப்போம் வா! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நாம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதற்காக பணத்தையும், பொருளையும் சேர்த்து வைக்கிறோம். பல சமயங்களில் எனக்கு சம்பளம் போதவில்லை என்று நாம் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து அதிக சம்பளம் தரும் நிறுவனத்திற்கு மாற்றுதலாகி செல்கிறோம். அதிக சம்பளம் கிடைத்தாலும் மன நிம்மதி அங்கு கிடைக்கிறதா, மகிழ்ச்சியோடு வாழ்கிறோமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் நாளைய தினத்திற்கென்று எதனையும் சேர்த்து வைக்காமல் அன்றன்றைக்கு சம்பாதித்து அதனை தன் செலவுக்காக வைத்திருக்கும் மனிதர்கள் அடையும் மகிழ்ச்சியை கூட நன்றாக பணம் ஈட்டும் நபர்கள் அனுபவிப்பதில்லை என்பதுதான் உண்மை. அத்தகைய உண்மையை அனுபவிக்க நமக்கு கசப்பாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் நிகழும் சின்ன சின்ன விடயங்களையும் பெரிதாக நினைத்துக் கொண்டு, நமக்கு அடுத்திருப்பவரை குறைகூறி வாழாமல் நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம். மகிழ்ச்சி என்பது நமக்குள்தான் இருக்கிறது. அதனைக் கண்டுகொண்டு வளமாய் வாழ்வோம்.
நம்மில் சிலர் பணத்தையும் பதவியையும் தேடுகிறோம். மற்றும் சிலர் புகழையும், அன்பையும் தேடுகிறோம். வேறு சிலர் வாய்ப்புகளையும், வசதிகளையும் தேடுகிறோம். இன்னும் சிலர் மன அமைதியைத் தேடுகிறோம். வாழ்வை, உறவை, பொருள்களைத் தேடி அலைகிறோம். ஆனால், நாம் எதை அல்லது யாரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்? சிந்திப்போம். தேடுவோம் கிறிஸ்துவை! பெறுவோம் ஆனந்த அனுபவத்தை. அதுவே நம் வாழ்வை உயர்த்தும். அனைத்தையும் தேடலாம். ஆனால் , அனைத்துக்கும் மேலாக ஆண்டவனைத் தேடுவதே உண்மையான தேடல். அந்த தேடலே மகிழ்ச்சியின் பாதையில் நம்மை வழிநடத்தும்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
